தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P10242-2.4 தெருக்கூத்தின் சிறப்புக் கூறுகள்

  • 2.4 தெருக்கூத்தின் சிறப்புக் கூறுகள்

    மேடை அமைப்பு, ஒளி அமைப்பு, இசை, நடிகர்களின் ஒப்பனை, பாட்டு, ஆடல், வசனம் பேசுதல், நடிப்பு என்னும் தெருக்கூத்தின் சிறப்புக் கூறுகள் பற்றிக் காண்போம்.

    2.4.1 ஒப்பனை

    தெருக்கூத்து ஒப்பனையை ‘வேஷமிட்டுக் கொள்வது’, ‘வேஷம் கட்டிக் கொள்வது’, ‘வேஷம் போட்டுக் கொள்வது’ என்று குறிப்பிடுவார்கள். தெருக்கூத்தைக் ‘கட்டை கட்டிக் கொண்டு ஆடுவது’ என்றும் சொல்வதுண்டு. முகப்பூச்சு தவிர, வேடத்திற்கு வேண்டிய எல்லா அலங்காரங்களையும் (அணிந்து கொள்பவை) கயிற்றால் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கட்டையால் (மரத்தால்) ஆனவை. தலைக்கீரிடம், புஜகீர்த்திகள், பெரிய காதுகள், மார்பு அணிகள், விரிந்த பெரிய பாவாடை, சலங்கை எனப் பலவற்றைக் கட்டிக் கொள்கிறார்கள். இதனால்தான் ‘வேஷம் கட்டுதல்’ என்ற சொல்லாட்சி வந்திருக்க வேண்டும்.

    ஒப்பனைப் பொருள்கள்

    புடவைகள், புஜக்கட்டைகள், மார்பு ஆரம், கழுத்து மணி, இடுப்புக் கச்சை, நெற்றிச் சரடு, காதுக் கட்டை, கீரிடம், அரையாடை, மேல் சட்டை, வாக்கு மாலை என்ற நீண்ட அங்க வஸ்திரம் போன்ற துணி மாலை, வாகு வலயம் என்னும் கயிறு போலச் சுருட்டப்பட்ட துணி மாலை, கணுக்காலில் கட்டப்படும் துணிப்பட்டை, கால் சலங்கை முதலான அணிமணிகளைப் பயன்படுத்துகிறார்கள். மரக்கத்தி, வில், கதாயுதம், நாகாஸ்திரம் முதலான ஆயுதங்களையும் புனைகிறார்கள். ஆண் வேடதாரிகளுக்கே ஒப்பனைப் பொருள்கள் அதிகம். பெண் வேடதாரிகள் சாதாரணப் புடவை, கொண்டைப் பந்து முதலானவற்றையே பயன்படுத்துகின்றனர். கட்டியங்காரன் கால்சட்டை, பூப்போட்ட சட்டை, தொப்பி முதலானவற்றை அணிகிறான்.

    ஒப்பனை செய்தல்

    ஒப்பனை செய்வதற்குச் சில மணி நேரங்கள் ஆகிவிடும். பாத்திரங்கள் தங்கள் ஒப்பனையை அவரவர்களே செய்து கொள்கிறார்கள். வேடம் போட்டுக் கொள்ளும் முன் ஒப்பனை அறையில் ஒப்பனைப் பொருள்களை எடுத்துப் பரப்பி வைத்துக் கொள்வார்கள். அங்கு விளக்கேற்றித் தீபம் காட்டிச் சிவ பூசை செய்த பின் தாளத்தைத் தட்டி வேடம் தரிக்கத் தொடங்குவார்கள்.

    முக ஒப்பனை

    முகப் பூச்சுக்குச் செந்தூரம், அரிதாரம், கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாகப் பச்சை வண்ணத்தில் பெரும்பாலான பாத்திரங்கள் முக ஒப்பனை செய்கிறார்கள். முகத்திற்கு மஞ்சள் வண்ணம் பூசுவதும் உண்டு. சபேதா என்னும் வெள்ளைப் பொடி, அரிதாரம் என்னும் மஞ்சள் பொடி, இங்குலிகம் என்னும் செந்நிறப் பொடி, நீலம் என்னும் ஊதா வண்ணப் பொடி, கறுப்பு வண்ணமை, நாமக் கட்டி முதலானவற்றைப் பாத்திரத்தின் இயல்புக் கேற்பப் பயன்படுத்துகிறார்கள். வண்ணக் கலவையைத் தண்ணீர் அல்லது எண்ணெயில் கலந்து பூசுகிறார்கள். வேர்வையில் அழியாமல் இருக்கவும் நன்கு பற்றிக் கொள்ளவும் தேத்தா விதையை உரைத்துக் கலந்து கொள்வார்கள். இவ்வாறு வர்ணம் தீட்டுதல் மூலம் தொலைவிலுள்ள பார்வையாளர்களுக்கும் முகத்தைக் காட்சியாக்குகிறார்கள். மனித முகத்தின் தற்காலத் தன்மையை நீக்கிப் புராணத்தன்மை தருகிறார்கள்.

    அரசன், அரசி, பிராமணன், மந்திரி முதலான உயர்நிலைப் பாத்திரங்களுக்கு வெள்ளை வண்ணம் பூசுகிறார்கள். கிருஷ்ணன், காளி, எமன், ராமன் முதலான தெய்வப் பாத்திரங்களுக்கு நீல நிற ஒப்பனை செய்கிறார்கள். வேடன், வேட்டுவிச்சி முதலான பாத்திரங்களுக்குக் கறுப்பு நிற ஒப்பனை செய்கிறார்கள். இவ்வாறு பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப வண்ணம் பூசுகிறார்கள்.

    கண்களைச் சுற்றிப் புள்ளிகள் இடுகிறார்கள். வெள்ளைக் கோடுகள் இடுகிறார்கள். மீசை எழுதிக் கொள்கிறார்கள். நாரால் ஆன பொய் மீசையையும் வைத்துக் கொள்கிறார்கள். ‘ஒருநாள் கூத்திற்கு மீசையைச் சிரைத்தல்’, ‘ஒருநாள் கூத்திற்கு மீசையை வைத்தல்’ என்ற பழமொழிகள் கூத்து ஒப்பனையின் அடிப்படையில் தோன்றியவை. கிரீடம், மகுடம், முன்தலை அணியான கலிகை, நெற்றியில் கட்டப்படும் பட்டம், நெற்றியில் அணியப்படும் முத்துச் சரம் ஆகியவற்றையும் முக ஒப்பனைக்குப் பயன்படுத்துகிறார்கள். தலைமுடியை நீளமாகக் காட்டத் தென்னை ஓலையால் ஆன பூமுடியை அணிகிறார்கள்.

    முக ஒப்பனை

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

    பிற ஒப்பனைகள்

    தோள்களில் புஜ கீர்த்திகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இவை மரக்கட்டை அல்லது அட்டையால் உருவாக்கப்பட்டவை. இவற்றில் வண்ணத்தாள் ஒட்டிக் கண்ணாடித் துண்டுகளை ஒட்டியிருப்பார்கள். இதை அணிவதால் பாத்திரத் தோற்றம் தொலைவிலிருக்கும் பார்வையாளர்களுக்கும் எடுப்பாகப் புலப்படும்.

    முழுப் புடவையையும் கொசுவி உடம்பில் சுற்றிக் கொள்கிறார்கள். இதனால் கம்பீரமான உடல் தோற்றம் உண்டாகிறது. இளைப்புச் சட்டை என்னும் சரிகை வேலைப்பாடுள்ள சட்டையை அணிகிறார்கள். கழுத்தைச் சுற்றி அணியும் ஏகாவடம் என்னும் ஆடையையும் அணிகிறார்கள். இறுக்கமான கால்சட்டை அணிந்து கீழ்ப்பகுதியில் துணிப் பட்டையால் கட்டிக் கொள்கிறார்கள். பதக்கம், ஒட்டியாணம், குண்டலம், கடுக்கன், தோடு, கடகம், மோதிரம் முதலான அணிகலன்களையும் தேவைக்கேற்ப அணிகிறார்கள்.

    பாவாடை அணிதல்

    இடுப்பில் முழங்கால் வரை பாவாடை என்ற அமைப்பை அணிந்து கொள்கிறார்கள். இது போர் அடிக்கப்படாத வைக்கோலால் செய்யப்பட்டது. இடுப்பில் அணிகையில் சுற்றிலும் குடைபோல விரிந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதன் மீது துணியைப் போர்த்துவதால் பாவாடை போன்று காட்சியளிக்கும். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆட்ட முறைகள் வேறுபட்டிருப்பதால் அதைக் காட்டும் வகையில் முழங்கால் வரை மட்டும் பாவாடை அமைந்திருக்கிறது.

    2.4.2 ஒளியும் இசையும்

    தெருக்கூத்துகளில் ஒளி அமைப்பும், இசையும் மிகவும் இன்றியமையாதவை.

    ஒளி அமைப்பு

    தெருக்கூத்தில் மேடை நாடகங்களைப் போல வண்ண விளக்குகள், சுழல் விளக்குகள் முதலானவற்றைப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் காந்த விளக்குகளே பயன்படுகின்றன. மின் விளக்குகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகையில் குறைவான ஒளியமைப்பின் மூலம், ஒப்பனையுடன் வரும் பாத்திரங்களுக்கு மீமனிதத் தோற்றம் (மனித இனத்தைவிட பெரிய கடவுளர் போன்ற தோற்றம்) கிடைக்கிறது. இந்த ஒளியமைப்பிற்கு ஏற்ற வகையிலேயே ஒப்பனை முறைகளும் அமைந்திருக்கின்றன.

    இசை

    கூத்தில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது இல்லை. கூத்தர்கள் அனைவருமே உரக்கப் பேசவும் பாடவும் ஆற்றல் படைத்தவர்கள். அரங்கத்தின் ஒரு பகுதியில் விசிப்பலகையில் இசைக்குழுவினர் மறைவின்றி இருக்கிறார்கள். அவர்களது இருப்பு கூத்தில் இடைஞ்சலாக இருப்பதில்லை. முகவீணை, மிருதங்கம், சுருதிப் பெட்டி, தாளம் எனப்படும் ஜால்ரா முதலான கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். நரம்புக் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் முகவீணைக்குப் பதிலாக ஆர்மோனியத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாத்தியங்கள் குரலுக்கு அலங்கார வாத்தியங்களாக இல்லாமல், மனிதக் குரலை அது முடியும் இடத்திலிருந்து நீட்டும் வேலையைச் செய்கின்றன. உரையாடல்கள் நிகழும்போது இசை இருப்பதில்லை ; இசைஞர்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள்.

    2.4.3 பாடல், ஆடல், உரையாடல்

    கூத்தில் பாடல்கள் மூலமாகவே கதை செல்கிறது. வசனம் என்பது பாடலின் கருத்தாக இருக்கிறது. கூத்துப் பாடல்களுக்குத் தரு என்று பெயர். பாத்திரங்கள் களத்திற்கு வரும்போது தங்களைப் பற்றிப் பாடிக்கொண்டே வருவார்கள். அதற்குப் பிரவேச தரு என்று பெயர். விவாதப்பாடலுக்குச் சம்வாத தரு என்று பெயர். இவ்வாறு வர்ணனைத் தரு, கும்மித் தரு, கோலாட்டத் தரு எனத் தருக்கள் இருக்கின்றன.

    அறிமுகம்

    கூத்துப் பாத்திரங்கள் முதன்முதலில் வருகிறபோது தங்களின் சிறப்புகளையும் பண்புகளையும் பாடல்களாகப் பாடுகின்றனர். இது சுயப் புகழ்ச்சியாக இருப்பினும் பார்வையாளர்கள் அவ்வாறு கருதுவதில்லை. அந்தப் பாடல்களைக் கேட்டுப் பாத்திரப் பண்புகளை மதிக்கிறார்கள். இப்புகழ்ச்சிகள் பாத்திரப் பண்பிற்கு மெருகூட்டுகின்றன. சீதா கல்யாணம் என்னும் தாடகை சம்மார நாடகம் என்னும் கூத்தில் தசரதன் வரும்போது தன்னைத்தானே

    அரசர் வந்து பணிய
    உச்சித வீரன்
    மெச்சிய வீரன்
    குண்டு கடகமாட
    தனுவு மாயு மேந்தி
    பருதிகுலேசன்
    சர்வ விலோசன்

    எனச் சுயப்புகழ்ச்சி செய்து கொள்வான். இது தவறாகத் தெரிவதில்லை. அது மட்டுமின்றிக் கூத்துப் பாத்திரங்கள் ‘வந்தேனே’ என்று சொல்லாமல் படர்க்கையில் ‘வந்தானே’ என்பார்கள். தசரதன் வரும்போது தன்னையே ‘தரணிபுகழ் அயோத்தி தசரதராஜன் வாரான்’ என்பான். இது கூத்தனையும் பாத்திரத்தையும் வேறுபடுத்துகிறது. மற்றொரு பாத்திரமும் இப்பாத்திரத்தைப் புகழ்வது உண்டு. அப்போதும் முகத்தில் சிறு அசைவுகளைக் காட்டி அந்தப் புகழ்ச்சியை ஏற்றுக் கொள்வான்.

    பாடல்கள் காட்சிக்கு வலுவேற்றல்

    பாடல்கள் காட்சிக்கு வலுவேற்றும் வகையில் அமைகின்றன. திரௌபதி துகிலுரியப்படும் கட்டத்தில் துச்சாதனன் பாடுகிற பாடலை எடுத்துக் காட்டாகக் காணலாம். அரசியான திரௌபதி, வீரர்கள் பலர் முன்னிலையில் கணவன்மாருக்கு முன்னிலையில் துகிலுரியப்படுகிறாள். ‘இன்னமும் ஒரு சுற்று அகன்றால் அவள் பிறந்த மேனியாக இருப்பாள்’ என்று பாடல் அமைகிறது. அதைக் கேட்கும் பொழுது அதன் மெட்டினாலும் தொனியினாலும் பெண் நிர்வாணமாகப் போகிற அதிர்ச்சி உண்டாக்கப்படுகிறது.

    பின்பாட்டு

    பாத்திரம் பாடலின் ஓர் அடியைப் பாடித் தன்னைத் தானே சுற்றியபடி சுழன்று சுழன்று ஆடுகையில், பின்பாட்டுக்காரர்கள் அந்த அடியைப் பாடுவர். ஒப்பனை அறையில் இருக்கும் கூத்தர்களும் பின்பாட்டுப் பாடுவர். கூத்தவையில் இருக்கும் மற்றொரு பாத்திரமும் பின்பாட்டுப் பாடுவது உண்டு. ஒற்றைக் குரலாக இருப்பதைப் பெருக்கிப் பார்வையாளர்களுக்கு எட்டச் செய்வதே பின்பாட்டின் நோக்கம் ஆகும்.

    பாடல் ராகங்கள்

    கூத்துப் பாடல்கள் நிறைய ராக வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. ஒரே பாடல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பாணிகளில் பாடப்படுகின்றது. நாட்டை, நீலாம்பரி, முகாரி, பூபாளம் முதலான ராகங்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    ஆடல்

    பாத்திரங்கள் அறிமுகப் பாடலுடன் நடன நடையில் வந்து வலம் வருவர். பின் கால்களை நன்கு ஊன்றிக் கொண்டு நிற்பர். உடல் அசைவால் வலிமையைக் காட்டுவர்; அதிர்ச்சியூட்டுவர். இது பாத்திரங்களின் கம்பீரத்தைக் கூட்டுகிறது.

    ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வெவ்வேறு நடை அமைப்பு இருக்கும். நிற்கும்போதும் தாளத்திற்கேற்பப் பாதங்களைத் தரையில் வெவ்வேறு விதமாகத் தட்டுவர். பாத்திரங்களின் உணர்ச்சி வேறுபாட்டைக் காட்டவும் நடை வேறுபாடு உதவுகிறது. இதற்காகத்தான் கூத்துப் பாத்திரங்களின் கால் பகுதிகள் மூடப்படாமல் காட்டப்படுகின்றன. கூத்தில் ஒருவர் ஆட இன்னொரு பாத்திரம் சும்மா இருப்பதில்லை. அப்பாத்திரமும் இயல்புக்கேற்ப ஆடுகிறது.

    கூத்து ஆடல் முறையில் வட்டச் சுற்றுகள் ஒரேமாதிரி இருப்பதில்லை. மனோபாவத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. பீமனின் நடை அதிரவைக்கும் குதிப்பும், துள்ளல்களும் கொண்டதாக இருக்கும். வருகைக்கான ஆட்டம், தர்க்கத்துக்கான ஆட்டம், முடிவினைச் சுட்டும் ஆட்டம் என ஆட்ட வேறுபாடுகள் உள்ளன.

    செயல்களைக் காட்டவும் ஆட்ட அசைவுகள் பயன்படுகின்றன. ஒரு வட்டமடித்து அஸ்தினாபுரத்திலிருந்து இந்திரப் பிரஸ்தம் சென்றதாக உணர்த்துவர். கர்ண மோட்சம் கூத்தில் வரும் ஓர்அசைவு குறிப்பிடத் தக்கது. 17ஆம் நாள் போருக்குத் தயாராகும் துரியோதனன் சகுனியை அழைத்துவரச் சொல்கிறான். கட்டியங்காரன் குதிரையேறிச் சகுனியைக் காணச் செல்வதாகக் காட்சி. கட்டியங்காரன் தலையில் கட்டிய துண்டை எடுத்துக் கால்களின் இடையே நீளவாக்கில் வைத்துக் கொள்வான். முன் பகுதியிலும் பின் பகுதியிலும் துண்டில் இடம்விட்டுப் பிடித்துக் கொள்வான். துண்டின் தொங்கும் பகுதிகள் குதிரை முகமாகவும் வாலாகவும் தோற்றமளிக்கும். இடுப்பிற்கு மேலே குதிரையில் அமர்ந்த ஆளாகவும் இடுப்புக்குக் கீழே குதிரையாகவும் ஒரு தோற்றப் புனைவை உருவாக்குவான். துண்டைக் குதிரை அசைவதுபோல அசைத்துக் கொண்டு, கால்நடையில் குதிரையின் இயக்கத்தைக் காட்டுவான். விரைவைக் காட்டுவதற்குச் சொற்களையும் விரைவாகப் பேசுவான். இதன் மூலம் உண்மையாகவே குதிரையில் பயணம் செய்யும் தோற்றத்தை அவன் உருவாக்குகிறான்.

    இருப்பு

    பாத்திரங்கள் கூத்துக் களத்தில் வந்து அமர்வதற்கும் ஒரு முறை இருக்கிறது. கால்களை விரித்து அமர்ந்து நிலைத்த மேல்உடம்பில் பாவனைகள் காட்டுகிறார்கள். கைகளை வைத்துக் கொள்ளும் முறை மாறுகிறது. குதிகால்கள் நிலத்தில் ஊன்றப்பட்டுக் கால்விரல்கள் மேலே தூக்கப்படுகின்றன. உணர்ச்சியில் கால்களில் அசைவுகள் காட்டுகிறார்கள். உடம்பில் குலுக்கல்கள் காட்டுகிறார்கள். இதுவும் பாத்திரத்தின் மன உணர்வைக் காட்டுகிறது.

    வசனம்

    கேரளத்தின் கதகளியில் வசனம் இல்லை. யட்சகானத்தில் பேச்சு உண்டு. தெருக்கூத்தில் பாடலும் பேச்சும் இருக்கின்றன. வசனம் ஒருகாட்சிக்கு விளக்கம் தரும் வகையில் அமைகிறது. பாத்திரங்கள் பாடிய பாட்டின் பொருள் வசனத்தில் சொல்லப்படும். கட்டியங்காரன் நிறையப் பேசுவான். பிற வசனங்கள் எளிமையாக இருக்கும். வட்டாரக் கொச்சை மொழியையும் பயன்படுத்துகிறார்கள். பாடல் போல வசனத்தை மனப்பாடமாக வைத்துக் கொள்வதில்லை. அவ்வப்போது தோன்றுகிறபடி வசனம் பேசுகிறார்கள். இது கூத்தர்களின் திறமையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

    2.4.4 கட்டியங்காரனின் பங்கு

    கட்டியங்காரன் கூத்து முழுக்க வருகிறான். ஆனால் இவன் கூத்துக் கதைக்குத் தொடர்பற்றவன். சேவகன், தோழி, தேரோட்டி, மந்திரி என்று பாத்திரங்களையும் இவன் ஏற்று நடிக்கிறான். கூத்தின்போது பாத்திரங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறான். பாத்திரங்களின் ஒப்பனையைச் சரிசெய்கிறான். பாத்திரங்கள் மறந்துவிடுகிற பாடல் வரிகளை மறைமுகமாக எடுத்துக் கொடுக்கிறான். அனைத்துப் பாடல்களையும் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருப்பான். பார்வையாளர்களின் சலசலப்பை அமைதிப்படுத்துகிறான். உறங்குபவர்களை எழுப்பப் பல உத்திகளைக் கையாள்கிறான். கூத்துப் பாத்திரங்கள் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசாமல் இவனைப் பார்த்தே பேசுகின்றனர்.

    விமர்சனம்

    சாதாரண ஒப்பனையில் வரும் இவன் கதையில் பல இடங்களில் குறுக்கிடுகிறான். எடுத்துக் காட்டாகத் துரியோதனன் பாத்திரத்தோடு அவன் பேசுவதைச் சுட்டலாம். துரியோதனன் களத்திற்கு வந்து தனக்குரிய விருத்தப் பாவைப் பாடிமுடிப்பான். கட்டியங்காரனிடம் துரியோதனன் “டேய் ! நான் யார் தெரிகிறதா?” என்பான். கட்டியங்காரன் “தெரியாதே !” என்பான். “என்ன? தெரியாதா !” என்று கேட்டுவிட்டுத் துரியோதனன் கட்டியங்காரனைச் சாட்டையால் அடிப்பான். அப்பொழுது கட்டியங்காரன் குறுக்கிட்டு அவன் அதிகாரத்தை மட்டம் தட்டுவான்.

    துரியோதனன் : டேய் ! நான் திருதராட்டிரன் புத்திரன்.

    கட்டியங்காரன் : ஆ ! அந்தக் குருட்டு ராஜா மகனா?

    துரியோதனன் : அத்தினாபுரத்திற்கு நான் அரசன்

    கட்டியங்காரன் : பாண்டவர்களைக் கலைத்துவிட்டு ஆட்சி புரிகிற இடமா?

    துரியோதனன் : நாங்கள் வீரதீரர்கள் 100 பேர் இருக்கிறோம்.

    கட்டியங்காரன் : பாஞ்சாலியின் சேலையை உரிந்த ஆட்களா?

    இவ்வாறு கட்டியங்காரன், அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறான். கதைக்குள்ளே ஒரு விமர்சகனாகச் செயல்படுகிறான்.

    இதே போலத் திரௌபதி கற்புடையவள், தருமன் தருமவான், வீமன் வீரன், கர்ணன் கொடையாளி, கண்ணன் கருணையுள்ளவன் என்கிற கருத்தியல்களையும் கட்டியங்காரன் உடைக்கிறான். திரௌபதியைப் "பாரதப் போரை உண்டாக்கி அனைவரையும் சாகடித்த பெண்" என்பான். "ஐவருக்கு மனைவியாக இருந்தது முறையானதா?" என்பான். தருமனைத் "தன் மனைவியை வைத்துச் சூதாடிய மடையன்" என்பான். வீமனைச் "சாப்பாட்டுப் பிரியன்" என்றும் "சாதிபேதம் பார்ப்பவன்" என்றும் கூறுவான். கர்ணனைச் "சகோதரர்களுக்கு எதிராக நின்றவன்" என்பான். கண்ணனைச் "சூழ்ச்சிக்காரன்" என்பான். கட்டியங்காரனின் இக்கருத்துகளைப் பார்வையாளர்கள் ரசித்து வரவேற்கின்றனர். இவையெல்லாம் பார்வையாளர்களின் விமரிசனமாகவே இருப்பதால் அவர்கள் வரவேற்கிறார்கள்.

    நகைச்சுவை

    கட்டியங்காரனின் நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம். ‘கீசக வதம்’ கூத்தில் கட்டியங்காரன் வந்தவுடன் “எங்கு போயிருந்தாய்?” என்று கீசகன் கேட்பான். “நான் யானைக்குத் தண்ணீர் காட்டப் போயிருந்தேன்” என்பான். கீசகன் “தண்ணீர் காட்டினாயா? என்பான். “ஆமாம் ! காட்டினேன் இதுதான் தண்ணீர் என்று தெலைவிலிருந்தபடியே காட்டினேன்” என்று சொல்வான். பார்வையாளர்கள் ரசித்துச் சிரிப்பார்கள்.

    கூத்தில் கட்டியங்காரன் பார்வையாளர்களின் பிரதிநிதியாக இடம்பெறுகிறான் எனலாம்.

    2.4.5 திரையும் காட்சியமைப்பும்

    கூத்து நடத்தும்போது திரை எவ்வாறு அமைக்க வேண்டும், காட்சி எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

    திரை

    கூத்துக் களத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் திரை இல்லை. வாத்தியக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் இடையிலும் திரை இல்லை. இரண்டு பேர் திரையைப் பிடிக்க, அதை விலக்கிக் கொண்டுதான் பாத்திரங்கள் நடிப்பிடத்திற்கு வருவார்கள். கேரளத்தின் கதகளியிலும் இதே மாதிரித் திரையைப் பிடிப்பது உண்டு. கர்நாடகத்தின் யட்சகானத்திலும் இதுபோலச் செய்கிறார்கள். கூத்தில் பாத்திரங்கள் திரைக்குப் பின்னே பாடிக் கொண்டும் நடையிட்டுக் கொண்டும் இருப்பார்கள். கால்கள் மட்டும் தெரியும்படி திரை பிடிக்கப்படுவதால் பாத்திரத்தை முழுதாகப் பார்க்கும் ஆர்வம் உருவாகும். பார்வையாளர்களுக்குத் தடையாக இருக்கும் திரையைத் தூக்கி எறிந்து பாத்திரங்கள் வெளிப்படுவதுண்டு. இதனால் பாத்திரங்களிடம் பார்வையாளர்களுக்குப் பிரியம் உண்டாகிறது.

    காட்சி அமைப்பு

    கூத்தில் அங்கம் (Act) என்ற பாகுபாடுகள் இல்லை. காட்சி (Scene) என்ற பிரிவும் இல்லை. கதை நிகழ்கிற இடம் பற்றிப் பாட்டில் சொல்லப்படுகிறது. கட்டியங்காரன் காட்சி மாற்றங்களை எடுத்துக் கூறுகிறான். சில சமயங்களில் கூத்தர் ஒருவர் இரண்டு பாத்திர வேடங்களை ஏற்று நடிப்பதுண்டு. அப்போது அவர் வருவதற்கு ஏற்ற வகையில் கதை நிகழ்வு வரிசையை அமைத்துக் கொள்வார்கள். காட்சிச் சூழலைக் காட்டப் பொருள்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. விசிப்பலகை பிரம்மாண்டமான சிம்மாசனமாகக் காட்டப்படும். துண்டு, ரதமாகவும் குதிரையாகவும் காட்டப்படும். கூத்தின் இத்தகைய பாவனை உத்தியைத் தற்போதைய நவீன நாடகங்களில்

    தூரப்படுத்தும் உத்தி

    நவீன நாடகங்களில் காணும் இன்னொரு உத்தி தூரப்படுத்துதல் என்பது. நடப்பது கதைதான், எதார்த்தமல்ல என்று காட்டுவதற்காக நவீன நாடகங்களில் பொருந்தாத குறுக்கீடுகளை அமைப்பார்கள். இவ்வுத்தியும் கூத்தில் பின்பற்றப்பட்டதுதான். ஆனால் அது நடப்பது கதைதான் என்று உணர்த்துவதற்குப் பதிலாக நடப்பது யதார்த்தம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது.

    கீசகவதம்

    கீசகவதம் கூத்தில் கீசகனுக்கும் பீமனுக்கும் சண்டை நடக்கும். அது உக்கிரமடையும் போது இரண்டு வெளிநபர்கள் இடையே புகுந்து பாத்திரங்களைப் பிரித்து விடுவார்கள். கூத்தர்களுடைய ஆவேசத்தில் விபரீதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. என்றாலும் சண்டையின் உக்கிரத்தை இந்தச் செயல் மிகுதிப்படுத்திக் காட்டுகிறது எனலாம்.

    திரௌபதி துகிலுரிதல்

    திரௌபதி வஸ்திராபகரணம் கூத்தில் துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரியும் கட்டத்தில் நாடகம் நிறுத்தப்பட்டுத் தீபாராதனை நடக்கிறது. துச்சாதனன் வேடம் கட்டியவனும் தீபாராதனையை வணங்குகிறான். வயிற்றுப்பாட்டிற்காக நடத்தக் கூடாததை நடத்தும் செயலுக்காகக் கூத்தர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்பதன் மூலமே இது மன்னிக்க முடியாத குற்றம் என்ற உணர்வை இக்குறுக்கீடு ஏற்படுத்துகிறது.

    2.4.6 பார்வையாளர்கள்

    கூத்து அரங்கில் பார்வையாளர்களுக்குத் தனி இருக்கைகள் என்று இல்லை. தெருவில் அமர்ந்து பார்க்கிறார்கள். முன் ஒதுக்கீடு பின் ஒதுக்கீடு என்று இல்லை. யாரும் எங்கும் அமரலாம். சின்ன வகுப்பாருக்கு இன்ன இடம் என்று இல்லாவிட்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் ஓரமாக இருப்பார்கள். ஆண் பெண் பாகுபாடு இல்லை. பெரும்பாலும் நள்ளிரவில் கூத்துப் பார்க்க வருகின்றனர். பாய் தலையணையுடன் வந்து தூங்கித் தங்களுக்குப் பிடித்த கட்டம் வரும்போது எழுப்பச் சொல்லிப் பார்க்கிறார்கள்.

    பக்தி

    பார்வையாளர்கள் கூத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்ப்பதில்லை. தெய்வம் தொடர்பான கூத்துகளைப் பார்க்கையில் உண்மையில் நடக்கும் நிகழ்ச்சியாகவே கருதுகிறார்கள். கிருஷ்ணன் திரௌபதி முதலான பாத்திரங்களாக நடிக்கும் நடிகர்களிடம் கூத்து இல்லாத நேரத்திலும் பயபக்தி காட்டுகிறார்கள்.

    நம்பிக்கைகள்

    ‘அர்ச்சுனன் வில் வளைப்பில்’ பயன்படும் வில்லை வணங்கினால் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடக்கும் என்று நம்புகின்றனர். ‘இராசசூய யாகம்’ என்ற கூத்தை நடத்தினால் அல்லது கண்டால் வீடுபேறு கிடைக்கும் என்று நம்புகின்றனர். ‘கர்ணமோட்சம்’ பார்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ‘விராட பர்வம்’ கூத்தை நடத்தினால் கண்டிப்பாக மழைபொழியும் என்று நம்புகின்றனர்.

    ‘திரௌபதி வஸ்திராபகரணம்’ கூத்தில் திரௌபதி துகிலுரியப்படும் காட்சியைப் பார்த்தால் பாவம் என்று கருதுகின்றனர். அச்சமயத்தில் பலர் எழுந்து போய் விடுகின்றனர். ‘அர்ச்சுனன் தபசு’ கூத்தில் நடப்படும் பனைமரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என நம்புகின்றனர். ‘கிருஷ்ணன் தூது’ கூத்தில் விதுரர் வீட்டில் படைக்கும் உணவு பிரசாதமாகக் கருதப்படுவதால் அதை எல்லாரும் வாங்கி உண்கின்றனர். அதை உண்டால் குழந்தைப் பேறு உண்டாகும் என்றும் நம்புகின்றனர். ‘துரியோதனன் மோட்சம்’ கூத்தில் துரியோதன் இறந்த காட்சியைப் பார்த்துவிட்டு வீடு சென்று இறப்பு வீட்டிற்குச் சென்று வந்ததுபோல எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகின்றனர்.

    இவ்வாறு பார்வையாளர்களின் வாழ்க்கையோடு தெருக்கூத்து பிணைந்ததாக உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:01:13(இந்திய நேரம்)