Primary tabs
-
2.2 கோயிலில் கூத்து நிகழ்த்தும் முறை
கோயில் சடங்காகக் கூத்து நடத்தப்படுவதால்தான் இக்கலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கிராம மக்களது தெய்வ நம்பிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் அவர்களை ஒன்றுபடுத்துகிற பொது நிகழ்வாகவும் கூத்து நிகழ்த்தப்படுகிறது. மக்களுக்கு நன்கு தெரிந்த பாரதக் கதையின் பல நிகழ்வுகளைக் கதையாக வாசிக்கக் கேட்டும் கூத்தாகப் பார்த்தும் கோயில் சடங்கை நிறைவு செய்கிறார்கள். கோயில் சடங்காகக் கூத்து நிகழ்த்தும் முறை பற்றிக் காண்போம்.
அறிவிப்பு
அம்மன் கோயில்களில் பங்குனி மாதம் தொடங்கி ஆடி மாதம் வரையிலும் தெருக்கூத்து நிகழ்கிறது. முன்பு கூத்து நிகழ்த்தப்படும் நாளன்று கிராம வெட்டியான் ‘இன்ன இடத்தில் கூத்து நடக்கப் போகிறதெனத்’ தமுக்கடித்து அறிவிக்கும் வழக்கம் இருந்தது. இன்று சில இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்கிறார்கள். பெரும்பாலும் இன்று அழைப்பிதழ் மூலம் நிகழ்ச்சிகளை அறிவிக்கிறார்கள். (அழைப்பிதழின் படியைப் பின்னிணைப்பில் காண்க). கூத்து நடக்கும் நாளும் நேரமும் இடமும் கூத்தின் பெயரும் அதில் அறிவிக்கப்படுகின்றன. கோயில் நிர்வாகிகளோ கூத்தர்களோ துண்டறிக்கைகளை வெளியிடுவதுண்டு. இதை ‘அக்கினி வசந்தோற்சவ பத்திரிகை’ என்கிறார்கள்.
கோயில் அருகே உள்ள பெரிய வெளியிலோ, அகன்ற நாற்சந்தியிலோ, கூத்தாடுதல் வழக்கமாக உள்ளது. வயல் பகுதியில் கோயில் இருந்தால் அங்கு நிலத்தைச் சீரமைத்து அரங்கை உருவாக்குவார்கள். கூத்தாடும் அரங்கு கோயிலை நோக்கியதாக இருக்க வேண்டும். கூத்தாடுபவர்கள் கோயிலைப் பார்த்துக் கொண்டே ஆடும் வண்ணம் ஆடுகளம் அமைந்திருக்கும்.
கூத்துக் களத்திற்கு முன்பக்கம் இரண்டு கோல்களை நட்டு அவற்றின் மேற்பகுதியை ஒரு கோலால் இணைத்து, அதில் காந்த விளக்குகளைத் (பெட்ரோமாக்ஸ்) தொங்கவிடுவார்கள். சிலர் மின்விளக்குகளையோ குவிவிளக்குகளையோ (Focus Light) தொங்க விடுகிறார்கள். பழைய காலத்தில் தீவட்டிகளைப் பயன்படுத்தினார்கள். தீவட்டிகளை இருவர் பிடித்துக் கொண்டும் நின்றது உண்டு. களத்தின் பின் பக்கம் விசிப்பலகை போடப்பட்டு அதில் வாத்தியக்காரர்கள் இருப்பர். பின்பாட்டுக்காரர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்வார்கள். கூத்துக் களத்தின் பின் பகுதியில் ஒப்பனை அறை அமைந்திருக்கும். கீற்றுத் தட்டிகளால் அதை அமைப்பார்கள். களத்தின் மூன்று பக்கங்களிலும் பார்வையாளர்கள் அமர்வார்கள்.
கூத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வ வழிபாடு செய்வது நடைமுறையாக உள்ளது. கூத்து தொடங்குவதற்கு முன் தெய்வ வேடமிடும் கூத்தர்களுக்குக் கோயிலில் சிறப்புச் செய்வார்கள். கூத்துக் களத்திற்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது அம்மன் உலா வரும்போது வாசிக்கப்படும் மேளதாளம் வாசிக்கப்படும்.
வில்லுக்கு வழிபாடு
அர்ச்சுனன் வில் வளைக்கும் நிகழ்ச்சி நடக்கும் முன் வில்லை அம்மன் கோயிலிலிருந்து மங்கல இசை ஒலிக்க எடுத்து வருவார்கள். பின்னர்க் கூத்துக் களத்தில் நடுவார்கள். அதற்கு முன் வில்லிற்கும் சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றைப் பூசுவார்கள்; மாலை சூட்டுவார்கள்.
வில்லுப் பாட்டு
வில்லுப் பாட்டு கலைஞர்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
பனைமரத்துக்கு வழிபாடு
அர்ச்சுனன் தபசு நடத்தும் பொழுது அவன் ஏறித் தவம் செய்ய வேண்டிய பனைமரத்திற்கு நல்ல நேரத்தில் காவி, வெள்ளை பூசுவார்கள், பூசை செய்து அதை நிறுத்துவார்கள். அர்ச்சுனன் வேடமிட்டவன் ஏறும் முன்பும் பூசை நடைபெறும். பனைமரத்தில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலான நூல்களிலுள்ள தெய்வப் பாடல்களைப் பாடியபடி அர்ச்சுனன் ஏறுவான்.
மன்னிப்பு வேண்டி வழிபாடு
திரௌபதி துகிலுரிதல் கூத்து நடக்கையில் துகிலுரியும் காட்சிக்கு முன் கற்பூரம் ஏற்றி “பாஞ்சாலி அம்மனே! கோயிலுக்காகத் கூத்தாடுகின்ற இந்த நேரத்தில் வஸ்திராபகரணம் செய்வது கூத்துக்காக; அதற்காக எங்களை மன்னித்து அருள்வாய் தாயே !” என மன்னிப்புக் கேட்பார்கள்.
சீதையின் சேலைக்கு வழிபாடு
காரைக்குடி மார்க்கண்டேயர் கோயிலில் நடக்கும் இராமாயணக் கூத்திலும் வழிபாடு காணப்படுகிறது. சீதையாக வேடமிடும் கலைஞர், கட்ட வேண்டிய சேலையை ஒருவாரம் பூசையில் வைத்து அதன் பின் கட்டிக் கொள்கிறார்.
தொடக்கத்திலும் இறுதியிலும் வழிபாடு
ஒப்பனை செய்யும் முன்னரும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபாராதனை காட்டிய பின்பே கூத்தைத் தொடங்குவார்கள். கூத்து முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்திய பிறகே வேடத்தைக் கலைப்பார்கள்.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெறும் பாரதக் கூத்துகள் பல. சேயூர், இருங்கல், எருக்கம்பூர் முதலான கிராமங்களில் பாரத விழா என்ற பெயரிலேயே கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன. இருங்கல் கிராமத்தில் அரக்கு மாளிகை அழிவு, பகாசுரனை வீமன் வதைத்தல், மாடுபிடி சண்டை, துரியோதனன் வீமன் சண்டை முதலான நிகழ்ச்சிகள் கூத்தாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. எருக்கம்பூரில் பகாசுர வதம், சுபத்திரை கல்யாணம், திரௌபதி வஸ்திராபகரணம், களபலி, கீசக வதம், அருச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அபிமன்யு கதை, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் முதலான நிகழ்வுகள் கூத்தாக நடத்தப்படுகின்றன. இவ்வாறு பல கூத்துகள் நடத்தப்படுகின்றன. சிலவற்றை மட்டும் காண்போம்.
அர்ச்சுனன் தபசு
கோயில் சடங்கில் பெரும்பாலும் இக்கூத்து எல்லா ஊர்களிலும் நடத்தப்படுகிறது. அப்பொழுது கோயிலைச் சார்ந்த கிராமமே கூத்துக்களமாக மாறிவிடுகிறது. மக்கள் தங்களைப் பாண்டவ நாட்டு மக்களாகப் பாவித்துக் கொள்கிறார்கள். ஊர் மாடுகளை மந்தை வெளியில் மறித்து ஆநிரை கவர்தல் என்னும் நிகழ்ச்சியை நடத்திக் கூத்தைத் தொடங்குவார்கள். மண்ணால் உருவாக்கப்பட்ட அரவான் பொம்மையைக் களபலி இடுவார்கள். முழு மூங்கிலை வளைத்து நாண் ஏற்றிக் கூத்துக் களத்தில் வில்லாக வளைப்பார்கள். எண்பது அடி உயரமுள்ள பனைமரத்தை ஊன்றி அதன் உச்சியில் அர்ச்சுனன் தவம் செய்வதான காட்சி கூத்தாக நிகழ்த்தப்பெறும். அவன் முன்னே பார்வதியும் பரமசிவனும் தோன்றுவார்கள். அர்ச்சுனனுடன் அவர்கள் விவாதம் செய்வார்கள். பார்வையாளர்கள் இந்த விவாதத்தை ரசிப்பார்கள்.
பிள்ளைப் பேறு இல்லாத கிராமப் பெண்கள் அந்தப் பனை மரத்தின் அடியில் மஞ்சள் ஆடை உடுத்து உண்ணா நோன்பிருப்பார்கள். மகப்பேறு அடைந்த பெண்கள் பனைமரத்தில் அறையப்பட்டிருக்கும் முளையில் தூளியிட்டுக் குழந்தையைத் தாலாட்டுவார்கள். வேண்டுதல் உள்ளவர்கள் புது வேட்டி, துண்டுகளை முளையில் சார்த்துவார்கள்.
பகாசுரன் வதை
பீமன் வேடமிட்டவன் பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்லும் காட்சி ஊர்த் தெருக்களில் நடத்தப்படும். பிற்பகலில் நல்ல நேரம் பார்த்து இதை நிகழ்த்துவார்கள். பீமன் அந்தணனாக வேடமிட்டு உணவு கொண்டு செல்வதாகக் கதை இருப்பதால், பீமன் வேடதாரி அந்தணனாக வேடமிட்டுக் கொள்வான். கட்டை வண்டியில் கிராமத் தெருக்களில் ஊர்வலம் வருவான். ஊர்மக்கள் கொழுக்கட்டை, வடை, பணியாரம் முதலான உணவுப் பண்டங்களை வண்டியில் உள்ள பாத்திரத்தில் இடுவார்கள். பீமன் வேடதாரி கூத்துக் களத்திற்கு வண்டியைச் செலுத்துவான். வண்டியின் பின்னால் பகாசுரன் வேடதாரி ஆடிக்கொண்டு செல்வான். ஊர் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களைப் பிரித்துக் கொடுப்பார்கள். அன்று இரவு பகாசுரன் வதை கூத்தாக நடிக்கப்படும்.
துரியோதனன் வதை
கிராமத்தில் துரியோதனன் உருவத்தைச் செய்து கிடத்தி வைத்திருப்பார்கள். அவ்வுருவத்தின் தொடைப் பகுதியில் ஒரு குடத்தில் குங்குமம், எண்ணெய் கலந்த கலவையை நிரப்பிப் புதைத்து வைத்திருப்பார்கள். பீமன் வேடதாரியும் துரியோதன் வேடதாரியும் சண்டையிடுவார்கள். சண்டையின் உச்சத்தில் பீமன் வேடமிட்டவன், கிடத்தப்பட்டிருக்கும் துரியோதனன் உருவத்தின் தொடைப் பகுதியில் தண்டத்தால் அடித்து உடைப்பான். குடத்தில் இருக்கும் செந்நிற நீர் பெருக்கெடுத்து ஓடும். துரியோதனுடைய அரண்மனைச் சேடியாக வேடமிட்ட கூத்தன் அந்த உருவைச் சுற்றி வந்து ஒப்பாரி வைப்பான். ஊர் மக்களும் அந்த ஒப்பாரியில் கலந்து கொள்வார்கள். அந்த ஒப்பாரியின் போது ஓராண்டில் அந்தக் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்கள். விமரிசனம் செய்கிறார்கள். பாஞ்சாலி துரியோதனன் உருவத்தின் தொடைப் பகுதியிலிருந்து வெளியான செந்நீரை எடுத்துக் கூந்தலில் தடவி முடிவாள்.
இதைப் படுகளம் என்றும் அழைக்கிறார்கள். திரௌபதி சபதம் நிறைவேறும் போர்க்களம் சிறப்பு மிக்கது என்பதால் படுகளம் என்கிறார்கள். திரௌபதி வேடதாரி செந்நீரைத் தடவுவதுபோல் அம்மனுக்கும் கூந்தலில் அச்செந்நீரைத் தடவி முடிப்பர்.
ஈழத்தில் கோயில் வழிபாட்டுக் கூத்துகள்
ஈழ நாட்டில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இராமாயண, பாரதக் கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன. மட்டக்களப்பில் திரௌபதி அம்மன் கோயிலில் தமிழக வட மாவட்டங்களில் உள்ளதுபோல் பாரதக் கதைகள் நடத்தப்படுவதுடன் வேறு வகையான கூத்துகளும் நிகழ்த்தப்படுகின்றன. மகிஷக் கூத்து, கமலாவதிக் கூத்து, நல்லதங்காள் கூத்து, கோவலன் நாடகம், கண்டி நாடகம் முதலான பல கூத்துகள் நடத்தப்படுகின்றன.
மட்டக்களப்புப் பகுதியில் திரௌபதி அம்மன் கோயிலில் பஞ்ச பாண்டவர் வனவாசம் செல்லுதல், அர்ச்சுனன் தவம் செய்யச் செல்லுதல், அரவானைக் களப்பலி கூட்டுதல் போன்ற நிகழ்வுகள் கூத்தாக நடத்தப்படுகின்றன. மக்கள் கூத்தர்களை உண்மையான பாண்டவர்களாகவும் திரௌபதியாகவும் நினைத்து வழிபடுவார்கள். அர்ச்சுனன் தவம் கூத்தில் மரத்தில் கூடுகட்டி ஏணி வைத்திருப்பார்கள். அர்ச்சுனன் தவத்திற்குப் புறப்படுவான். இடையில் தடைகள் வரும். தடைகளை மீறி ஏணியில் ஏறி மரத்தில் தவநிலையில் இருப்பான். மக்கள் அவனை வழிபடுவர். அரவான் கூத்தில் அரவானைப்போல் மண்ணுருவம் செய்து தலையைத் தருமர் பிடிக்கத் திரௌபதி அறுப்பாள். இவ்வாறு ஈழத்தில் கூத்து நடத்தப்படுகிறது.