தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நூலாசிரியர் அறிமுகம்

  • 2.1 நூலாசிரியர் அறிமுகம்

    தேம்பாவணி என்னும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறிவிட்ட அவரது வாழ்வையும் பணியையும் பற்றிக் காண்போம்.

    2.1.1 வீரமாமுனிவரது வாழ்வும் பணியும்

    வீரமாமுனிவர் என்பது அவரது இயற்பெயர் அல்ல. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே அவரது இயற்பெயர். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார். தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்தார். மேலும் தமிழகம் வந்து தமிழராகவே மாறி, தம் பெயரையும் தத்துவ போதகர் என மாற்றிக் கொண்டு, தமிழ்ப்பணியும் புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டார். அவர்போலவே, தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பினார். அதனால், இவரும் தமது பெயரைத் தைரியநாதர் என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்தாம் இப்பெயரை இவருக்குச் சூட்டினர் என்பர் சிலர்.

    தோற்ற மாற்றம்

    வீரமாமுனிவர் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடு, இந்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி, காதில் முத்துக் கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்தி, புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி, தோற்ற மாற்றம் செய்துகொண்டது மட்டுமல்ல, காய்கறி உணவை மட்டுமே உண்டு, சைவ உணவினராகவும் மாறிவிட்டார். தமிழின் மீது இவருடைய பற்றை என்னென்பது! தோற்றத்தில் மட்டுமின்றி, உணவு முறையிலும் மாறியது மேலும் சிறப்பானது.

    சமயப் பணி

    இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர். 1747ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர்நீத்தார். உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர்.


    2.1.2 வீரமாமுனிவரது படைப்புகள்

    தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழி யல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழி யல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் புலமையும் அடைவது மிகமிக அரிய செயலாகும். செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்கிறார்.

    நூல்கள்

    இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் சிற்றிலக்கியங்கள், இலக்கணம், உரைநடை, அகராதி, இசைப்பாடல்கள் முதலிய பல துறைகளில் நூல்கள் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றி வெற்றி கண்டுள்ளார்.  மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம், குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது. இப்படிப் பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது, தமிழில் மட்டுமன்று; உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும்.


புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:56:24(இந்திய நேரம்)