Primary tabs
- 2.3 காப்பியக் கதை மாந்தர்
தேம்பாவணி ஒரு தலைசிறந்த கிறித்தவக் காப்பியம். இது, இயேசு பெருமானைக் காப்பியத் தலைவராகக் கொண்டு, அவர் புகழ் பாடும் நூல் என்று மக்கள் பொதுவாகக் கருதுவதுண்டு. ஆனால், இந்நூல் இயேசுவாகிய திருக்குழந்தையின் பெருமையைப் பாடினாலும், இயேசு பெருமான் இக்காப்பியத் தலைவர் அல்லர். அருளுடையவரும், மகிமைக்குரியவரும் ஆகிய புனித சூசையே இக்காப்பியத்தின் தலைவராவார். இவர் இயேசுவாகிய குழந்தைக்கு இம்மண்ணுலகில் வளர்ப்புத் தந்தையாக விளங்கும் பேறு பெற்றவர். இவரையும், இவரது அன்புத் துணைவியும் கடவுளின் தாயுமாகிய கன்னி மரியையும் இவர்கள் இல்லத்தில் வளரும் திருக்குழந்தையாகிய இயேசுவையும் மையமாகக் கொண்டே இக்காப்பியம் அமைந்துள்ளது. எனினும் சூசையின் வரலாற்றை முழுமையாகக் கூறுவது இக்காப்பியத்தின் முதன்மையான நோக்கங்களுள் ஒன்றாகும். மேலும் வானதூதர், பிற இறையடியார் உள்ளிட்ட பலரைக் கதை மாந்தர்களாகப் பெற்று, காப்பியம் சுவையாக வளர்ந்து செல்வதைக் கற்பார் உணரலாம். கதைமாந்தர் சிறப்பினை இனிப் பார்க்கலாமா?
2.3.1 காப்பியத்தின் மையமாகிய மூவர்
முன்னரே சுட்டியபடி, இயேசுவும் அவரது பெற்றோராகிய புனித சூசையும், அன்னை மரியும் அடங்கிய திருக்குடும்பமே இக்காப்பியத்தின் மைய மாந்தர் ஆவார். கடவுளின் மனித அவதாரத்திலும் உலக மீட்பிலும் பாராட்டுதற்கு உரிய வகையில் புனித கன்னிமரிக்கும் சூசைக்கும் உள்ள பங்கினை, கவிஞர் இக்காப்பியத்தில் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார். காப்பியத்தில் அனைத்துப் பகுதிகளும் சூசை, அன்னை மரியாள், இயேசு ஆகிய இம்மூவருள் ஒருவரைப் பற்றியோ அல்லது மூவரையும் இணைத்தோ பல செய்திகளைப் பாடிச் செல்வதைக் காப்பியத்தின் படலங்கள் ஒவ்வொன்றும் கூறும் செய்திகளினால் உணரலாம். ஆகவே வளனாம் சூசையைத் தலைவனாகக் காப்பியத்தில் கொண்டாலும் திருக்குடும்பப் பெருமையினை விரித்துப் பேசவே கவிஞர் காப்பியத்தை இடமாக்கிக் கொண்டார் எனலாம்.
அவ்வகையில் காப்பிய நாயகனாகப் புனித சூசையையும், உலக நாயகியாக அன்னை மரியையும், உலக நாயகனாகத் திருமகன் இயேசுவையும் வருணித்துப் பாடுகிறார் கவிஞர். இறைவன் இயேசுவையும் மரியன்னையையும் உயர்த்தும் அளவிற்கு, காப்பிய நாயகன் சூசையை உயர்த்தி, நாயகன் எனக் குறிக்காவிடினும், அதனைக் குறிப்பால் பெறவைக்கிறார். முப்புறத்து இணையில் மூவர், ஆவிநோய் செய் புரையழிக்கும் மூவர் (உயிருக்குத் தீங்கு செய்யும் குற்றங்களை அழிக்கும் மூவர்) என்னும் தொடர்களில் மூவரையும் இணைத்துப் போற்றுகிறார்.
● மூவர் பெருமைஎகித்து நாட்டினர் இம்மூவரையுமே உயிராகப் போற்றுகிறார்கள். ‘அம்மையே! மகனே! அரிய தவத்தின் தலைவனாகிய சூசையே! உங்களையே உயிராகக் கருதி, உங்கள் நிழலில் வாழ்ந்த எங்களை விட்டுப்பிரிந்து செல்கிறீர்களே! நல்ல நண்பர்களைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போகாதீர்கள்! அன்பின் உறுதியைப் போற்றுங்கள்’ என்று புலம்புகிறார்கள்; கெஞ்சுகிறார்கள். அப்பாடல் பின்வருமாறு:
அம்மையே! மகவே! வாய்ந்த
அருந்தவத் திறைவ சூசை!
நும்மையே! உயிரென் றாக
நுதலிநும் நிழலில் வாழ்ந்த
நம்மையே அகன்று போதீர்!
நட்பிடை அகலா தன்பின்
செம்மையே பேண்மின் என்னாச்
சென்றுமீண் டெவரும் போனார்(மீட்சிப் படலம் - 41)
(மகவே - குழந்தையே; அருந்தவத்து - அருமையான தவத்தையுடைய; நுதலி - நினைத்து; போதீர் - போகிறீர்கள்; பேண்மின் - போற்றிக் காப்பாற்றுங்கள்)
இம்மூவரும் ஒன்றுபோல உலகமக்களின் நலத்துக்காகவும் மீட்புக்காகவும் வறுமை வாழ்வை ஏற்று வாழ்வதை ‘ஓர் வறியோர் போல்’ எனக் கவிஞர் வருணிக்கிறார்.
● மூவர் பங்கு
மேலும் நல்லதோ தீயதோ அனைத்திலும் திருக்குடும்பத்தார் மூவருக்கும் பங்குள்ள தன்மையையும் பல இடங்களில் காப்பியத்தில் காண்கிறோம். மனிதனை மீட்க இறைவன் உலகத்தில் உருவெடுத்திருந்தாலும் அப்பணியை நிறைவுறச் செய்வதில் மூவருமே பங்கு பெறுகின்றனர். சூசை நோயுற்று வருந்தும்போது அத்துன்பத்தைத் தாங்க முடியாத அன்னைமரி தம் மகனிடம் அவரது நோய் தணிக்க வேண்டுகிறார். அதற்கு மறுமொழியாக ‘இத்துன்பம் நல்லதாகும். தேனினும் இனிய துயரச் செய்தியைக் கேள்’ எனக் கூறுகிறார் திருமகன். அதாவது நோயை அனுபவிக்கும் பங்கு இவருடையது. வருந்திப் பாடுபட்டு, உடற்காயங்களைப் பெறுவது என்னுடைய பங்கு. இருவர் தம் பாடுகளையும் கண்டு நெருப்புப் போன்ற துன்பத்தை அனுபவிப்பது உன்னுடைய பங்கு என்று அன்னைமரியிடம் இயேசு கூறி மனித குல மீட்புப் பணியில் மூவருக்கும் பங்கு உண்டு என உணர்த்துகிறார்.
● மூவர் அருள்மனிதர்களுக்கு வேண்டும் வரங்களை அருள்வதிலும் மூவரும் குறைவில்லாதவர் என்று காப்பியத்தில் காட்டப்படுகிறது. விண்ணுலகத்தை அடைந்த சூசைக்கு, பிதா முடிசூட்டுகிறார். அம்முடியில் உள்ள ஏழு மணிகளின் தன்மைகளை விளக்கும்போது ‘அன்னையின் அருளை வேண்டுபவர்களுக்கு, அவ்வருளைப் பெறுமாறு நீ அருள் புரிய உனக்கு நான் மூன்றாம் மணியைத் தந்தேன்’ என்று கூறுகிறார். அதாவது அன்னையின் அருளைப்பெற, சூசையின் அருள் வேண்டும். அவ்வருளை அருளும் ஆற்றல் இறைவனால் அன்னைக்கு அருளப்படுகிறது. ஆகவே ஒருவர் அன்னையின் அருளைப் பெறும்பொழுது, சூசை, இறைவன் ஆகியோரும் துணையாகின்றனர். மூவரின் பங்காலும் கேட்கும் வரம் கிடைக்கிறது என்பது கருத்தாகும். மூவரும் ஒருங்கிணைந்து அருள்வது என்பது எத்தகைய பேறு! அத்தகைய பேற்றினைப் பெற வேண்டுமென்று தோன்றுகிறதா?
ஒரு காப்பியத்திற்குச் சிறந்த அமைப்பும் அழகும் தருவது தலைமை மாந்தர் படைப்பே. தேம்பாவணியின் முதன்மையான தலைமை மாந்தர் சூசையே என முன்னரே விளக்கப்பட்டது. எனினும் சூசையின் வாழ்வு அன்னை மரியின் வாழ்வோடு பிரிக்க முடியாதபடி கலந்தது. ஆதலால் இருவர் சிறப்பும் இணைத்தே பேசப்படுகிறது. ஆதி மனிதனது தீவினையால் மனிதர்கள் அனைவரும் கருவிலேயே மாசுடையவர்களாகப் பிறக்கின்றனர் என்பது கிறித்தவக் கோட்பாடு. அந்த மாசு இல்லாதவராகத் தோற்றமெடுத்தது மரியின் சிறப்பென்பது கத்தோலிக்கச் சமயக் கோட்பாடு. அதனைக் காப்பியத்தில் பல இடங்களிலும் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.
● பழியில்லாப் பிறப்பு'இவ்வுலகத்தில் மனிதனாகப் பிறந்து, உலக மக்களின் பாவங்களை நீக்கப் போகும் இறைமகனின் தாயாக இருக்க வேண்டியவள், முன்னோர்களிடமிருந்து வழிவழியாக வருகின்ற பாவ இயல்பு இன்றிப் பிறந்தாள். தூய அறிவு, ஆற்றல், ஒளிக்காட்சி, அருள், துணிவு, மதிநுட்பம் முதலிய அழியாத பல வரங்களைப் பெற்று, எல்லா உலகும் ஆச்சரியப்படுமாறு அன்னை மரி பிறந்தாள்’ என்று கவிஞர் பாடியுள்ளார். அப்பாடல் பின்வருமாறு:
சேயாக மனுக்குலத்தில் சேர்ந்துதித்து
வையகத்தார் சிதவை நீக்கத்
தாயாக வளர்கன்னித் தாய்வயிற்றில்
பழம் பழிசேர் தவறில் லாது
தூயாகம் அறிவு ஆண்மை சுடர்காட்சி
வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி
வீயாத வரங்கொடுபெற் றெவ்வுலகும்
வியப்பெய்த வேய்ந்தா ளன்றோ(திருமணப் படலம் - 5:27)
(சேய் - குழந்தை; வையகத்தார் - உலக மக்கள்; சிதவை - குற்றங்கள், பாவங்கள்; தூயாகம் - தூய மனம், ஆகம் என்பது அகம் என்பதன் நீட்டல் விகாரம்; சுடர் காட்சி = தெய்வ ஒளிக்காட்சி; வீயாத - அழியாத; ஏய்ந்தாள் - பிறந்தாள்)
ஆனால் தலைவிக்குத்தான் மாசில்லாத பிறப்பு உண்டே தவிர, கிறித்தவக் கொள்கைப்படி தலைவனுக்கு இல்லை. எனினும் தலைவன் தலைவியருக்கிடையே பொருத்தம் பிறப்பிக்கக் கருதி சூசையும் அத்தகு பழி இல்லாத பிறப்பு உடையவனாக விளங்க வேண்டுமென இறைவன் கருதியதாகக் கவிஞர் பாடுகிறார்.
● இல்லறத்தில் துறவறம்கன்னி மரி எவ்வாறு கன்னிமைத் தன்மை நீங்காது வாழ்ந்தாளோ, அவ்வாறே சூசையும் துறவு நெறியே பூண்டு வாழ்ந்ததாகக் காப்பியம் கூறுகிறது. இருவரும் இறைக் கட்டளைப்படி இல்லறத்தில் இணைந்து வாழ்ந்தாலும், துறவுநெறியையே மேற்கொண்டிருந்ததாகக் காப்பியம் விவரிக்கிறது. இதனை ஈரறம் பொருத்து படலம் என்ற பகுதியில் கவிஞர் அழகுற விளக்குகிறார்.
● சூசையின் பெருமைகன்னி மரிக்கு சூசையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலும் இறைக்கட்டளையும் ஏற்பட்டது. திருமணத்திற்கு முன், துறவு வாழ்வையே விரும்பிய கன்னி மரியாளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. அப்போது இறைவன் அவளுக்குக் காட்சி தந்து சூசையின் இயல்புகளைப் பின்வருமாறு கூறுகிறார்: "வேதத்திற்கு நிகரானவன்; அறத்தின் வடிவானவன்; கொடையில் மேகத்திற்கு இணையானவன்; ஞான அறிவில் கதிரொளி போன்றவன்; அருளில் கடலுக்கு நேரானவன்; தீயையொத்த வனத்திற்குக் கூடக் கிடைக்காத தவவலிமை அவனுடையது; தாயினும் சிறந்த தயை உடையவன் அவன்; வானுடையோர்க்கு உரிய காட்சியனாய் உள்ளவன்; உன்நிலைக்கு ஏற்ற தகுதியுடையவன்." இறைவனே சூசையை இப்படிப் புகழ்ந்து பாராட்டினால் வேறென்ன வேண்டும்?
● மரியாளின் திருமணக் கோலம்மணமகள் மரியாள், வெளிப்படையான மணக்கோலங்களை வெறுத்தாள். அதாவது மலர்கள், அணிகள் முதலியவற்றைத் தவிர்த்தாள். இறைவன் திருவடிகளே நிலையான அழகைத் தருவன என எண்ணினாள். அவளுக்கு வானவர் அறத்தை மணியாக அளித்தனர். காதணியாகத் தூய உணர்வினை மாட்டினர். மாலையாக அருளைச் சூட்டினர். ஆடையாகத் தவத்தைக் கட்டினர். இவற்றோடு அவள் கோவிலுக்குச் செல்லும்போது மக்கள் மகிழ்ந்து பாராட்டினர் என்று கவிஞர் பாடுகிறார்.
வானாரும் எய்திஅற மேமணிஎன்று அணிந்தார்
மீனாரும் ஓதிமிளிர் தோடுஎனவேய் குகின்றார்
தேனாரும் மாலைத்திரள் என்றுஅருள்சேர்க் குகின்றார்
கானாரும் வாய்த்ததவ மேகலையாய் வனைந்தார்(திருமணப் படலம், 86)
(கலையாய் = ஆடையாக; வனைந்தார் = கட்டினர்)
● மரியாளின் மாண்புகள்மேலும், இவளை ஒருவன் காமநோக்கில் பார்த்தால் அவனது காம நெருப்பு அவிந்து விடுமாம். இவள் பார்க்காமல் கண்ணை மூடினால் அச்சமும் கலக்கமும் ஏற்படுத்துமாம். விழித்துப் பார்த்தால் பரமகதியைக் காட்டுமாம். அக்கண்கள், கதிரவன் ஒளியை மறைக்கும் அளவிற்கு ஒளி பெற்றவை என்று மரியின் கண்களை வருணித்துப் பாடுகிறார் வீரமாமுனிவர்.
காமக்கனல் ஆற்றின நோக்கியகண்
வீமக்கருள் விட்டன மூடியகண்
ஏமக்கதி காட்டும் விழித்தவிரு கண்,
வாமக்கதிர் வாட்டும் களித்த கணே(திருமணப் படலம் - 90)
(வீமக்கருள் = காம நெருப்பு; கணே = கண்ணே)
● சூசையின் இயல்பு
மரியின் இயல்புகளைப் பாடிய கவிஞர், அதே இயல்புகளைச் சூசைக்கும் உரியதாகப் பாடுகிறார். வேறோரிடத்தில் சிறுவனாகிய சூசைக்கும் விண்ணவர்கள் அருளை ஊட்டி, அறத்தை முடியாகச் சூட்டுகிறார்கள். தவத்தைப் பூணாகப் பூட்டுகிறார்கள். அறிவைப் பொற்செங்கோலாகக் காட்டுகிறார்கள். இவ்வாறு அறம், அருள், அறிவு, தவம் ஆகிய அடிப்படைப் பண்புகள் தலைமக்களாகிய இருவருக்கும் உரியனவாகக் காட்டப்படுகின்றன.
● இருவரும் நிகரானவர்கள்மேலும் பல நிலைகளில் இருவரையும் சரிநிகராகக் கவிஞர் காட்டுகின்றார். இறுதிப் படலமாகிய முடிசூட்டு படலத்தில் இறைத் தந்தையாகிய பிதா, திருமகனாகிய இயேசுவின் வேண்டுகோளை ஏற்று ஏழுமணிகள் பதித்த முடியைச் சூசைக்குச் சூட்டுகிறார். அதேபோல, மரியாளுக்கும் இறைவன் முடிசூட்டுவதாகச் சூசையப்பர் காட்சி காண்கின்றார். மரியாள் தானறியாத வகையில் கருவுற்றது கண்டு ஐயுற்ற சூசையின் ஐயம் நீங்கியபின், சூசை காணும் காட்சியில் இவ்வாறு நிகழ்கிறது. மேலும் காப்பியத்தில் பல இடங்களில் புதுமைச் செயல்களையும் அருஞ்செயல்களையும் இருவரும் நிகழ்த்துகின்றனர். முடநோயால் துன்புற்ற பெண்ணைக் கண்டு தேவமகன் முகத்து ஆறும் என்று தலைவன் கூறியதும் நோய் தீர்கிறது. அவ்வாறே காந்தரி என்ற பெண்ணைப் பற்றியிருந்த காமப்பேயை மரியாள் ஓட்டுகிறாள்.
இவர்கள் இருவரும் ஒரே மனத்தினராக இல்லற வாழ்விலும் துறவறம் பேணியமை, காப்பியத்தில் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இவ்வாறு காப்பியத்தின் தலைமாந்தர்களாகிய சூசையும் மரியும் பலவகைகளில் சிறந்து நிற்கின்றனர்.
இக்காப்பியத்தில் திருக்குடும்பத்தினராகிய மூவருக்கு அடுத்த நிலையில் சிறந்து விளங்கும் பிற மாந்தர் பலர் உளர். இவர்களுள் வானவரே மிக முக்கியமானவர்களாகக் கருதத்தக்கவர்.
● வானவர்தலைமாந்தரை நீக்கிப் பார்த்தால் அதிகமான படலங்களில் இடம் பெறுவோர் இவர்களே. கிறித்தவம் அல்லாத பிற சமயங்களில் பல்வேறு தேவர்களைப் பற்றிக் கூறப்படுகின்றன. அமரர்கள் எனப்படும் அவர்களைப் பற்றி, காப்பியங்களில் ஆங்காங்கே கூறப்படும். எனினும் தேம்பாவணியில் வானவர் இடம்பெறும் அளவு மிகுதியாக இல்லை எனலாம். பிற சமயத்தினர் கூறும் தேவர்களுக்கும், விவிலியத் திருமறையின் அடிப்படையில் தேம்பாவணி பாடும் வானவர்களுக்கும் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன. கண் இமையாதவர், கால்கள் நிலத்தில் படியாதவர்கள், சூடிய மலர்கள் வாடாதவர்கள், பெண் ஆண் பாகுபாடு உடையவர்கள் என்றெல்லாம் பிறர் கூறுவர். ஆனால் அவை இங்குப் பொருந்தா. வானவர்களின் இயல்புகளைத் திருமறை அடிப்படையில் வீரமாமுனிவர் விளக்கிச் செல்கிறார்.
● வானவர் சிறப்புஇவர்கள் இறைவனின் ஏவல் கேட்டு அவன் வழி நடப்பவர். இறையடியார்களுக்கு வலிமை தரும் உறுதி கூறுபவர். அவன் அருளிய வரங்களைப் பெற்று, துன்புறுவோரைத் தேற்றும் செயல்வீரர். கண்ணால் காணக்கூடிய உருவம் உடையோர் அல்லர். உடல் இல்லா உயிரினர். விண்ணில் உள்ள இறைவனைச் சூழ்ந்து நிற்கும் வீரர்கள் என்றெல்லாம் அவர்களைப் பற்றி விவரிக்கிறார் கவிஞர்.
தேம்பாவணியில் வரும் வானவர்கள், பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இவர்களுள் காபிரியேலும் மிக்காயேலும் இறைவனின் செய்தியைக் கன்னி மரியிடமும் சூசையிடமும் எடுத்துரைத்ததாக விவிலியத் திருமறையில் குறிப்பிடப்படுபவர்கள். மேலும் இவர்கள் வானவர் அணித்தலைவர்களாகக் கருதப்படுபவர்கள். இவர்களோடு அறஞ்சயன், சட்சதன் எனக் கவிஞரால் தமிழ் மரபிற்கேற்பப் பெயர் புனையப்பட்ட வானவர்களும் பிறரும் காப்பியத்தில் இடம் பெறுகின்றனர்.
● வானவர் அரவணைப்புதிருக்குழந்தை இயேசுவைத் தம் கைகளில் ஏந்தி, தேவத் தாய்க்கே காட்டுகின்றனர் மிக்காயேலும், காபிரியேலும். எகித்து நாடு நோக்கிப் பயணம் செய்யும் திருக்குடும்பத்தினரை வானவர் சூழ்ந்து கொண்டு செல்கின்றனர். வழியில் அவர்கள் களைப்பையும் கவலையையும் போக்கப் பல வரலாற்றுக் கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டே வருகின்றனர். இறைநீதியின் ஆற்றலையும் இறைவனின் அருளையும் அக்கதைகள் வெளிப்படுத்தின. பாரவோன் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து இசுரேலயர்களை இறைவன் விடுவித்த வரலாறு, இறைவன் பெரு வெள்ளத்தால் மனித குலத்தின் பெரும் பகுதியை அழித்த வரலாறு, சோசுவன் எனும் தலைவனின் கதை, சேதையோன் என்பானின் வெற்றி வரலாறு, சம்சோன் என்னும் மாவீரனின் வீழ்ச்சி வரலாறு முதலிய பல கதைகளை வானவர்கள் அவர்களுக்குச் சொல்லி வந்தனர்.
மேலும், இந்த வானவர்கள் அன்னை மரியும் புனித சூசையும் மனஞ் சோர்ந்து ஐயுற்றுக் கலங்கிய நேரங்களில் அவர்களுக்கு இறைவனின் திருவுள்ளத்தை வெளிப்படுத்தும் செய்திகளை உரைத்தனர்.
● வானவர் பணிவிடைமேலும் இத்திருக் குடும்பத்தினரை அடிக்கடி வானவர் போற்றிப் பாடுகின்றனர். பல்வேறு முறைகளில் அவர்கள் திருக்குடும்பத்தினரை வணங்குவதாகவும் அவர்களுக்குப் பணி விடைகள் செய்வதாகவும் கவிஞர் பாடுகின்றார். சிலர், அவர்களுக்கு அழகிய விசிறி கொண்டு வீசுகின்றனர். சிலர் அவர்களுக்கு வெண்கொற்றக் குடைகளைப் பிடிக்கின்றனர். சிலர் இறைவனின் திருச்செய்திகளைக் கொண்டு வருகின்றனர். சிலர் அவர்களது முகஅழகைப் போற்றிக் காக்கின்றனர். எல்லாரும் அவர்களைப் புகழுகின்றனர்; பணிந்து கொள்கின்றனர். இவற்றையெல்லாம் புலப்படுத்தும் அப்பாடல் பின்வருமாறு:
ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர்
ஒருவர் கவிகைகள் எழஎழ மருகுவர்
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர்
ஒருவர் இறையவன் விடைமொழி கொணர்குவர்
ஒருவர் எழுதிய முகவெழில் கருதுவர்
ஒருவர் அதிசயம் உறஇனி துருகுவர்
ஒருவர் புகழிட நிகரில மெலிகுவர்
ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே(ஐயநீங்கு படலம் 8:69)
(கவரிகள் - அரசர்களுக்குப் பயன்படுத்தும் விசிறிகள்; கவிகைகள் - அரசனின் இருக்கைக்குமேல் உள்ள அரசகுடை; விடைமொழி - பதில் செய்தி)
மேலும் இவர்கள் நோயின் கொடுமையால் நொந்த சூசைக்குச் செய்த தொண்டுகளை இன்னொரு பாடலில் கவிஞர் பின்வருமாறு பாடியுள்ளார்.
ஆடு வார்திரு நாமங்கள் ஆடுவார்
பாடு வார்பிணி யோன்துதி பாடுவார்
தோடு வார்வெறித் தொங்கலிட் டோடுவார்
வீடு வார்நயம் செய்குவர் வீடிலார்(பிணி தோற்றுபடலம் 33:19)
(திருநாமங்கள் - உயர்ந்த பெயர்கள்; பிணியோன் - நோயுற்றவன்; தோடு - இதழ்; வார் - பொருந்திய; வெறித்தொங்கல் - மணம்வீசும் மாலை; வீடுவார் - அழிவார்)
இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்யும் வானவர் திருவீடாம் இறைவனின் நாட்டை அடைவதற்கு வழி காட்டுவோராகவும் உள்ளனர். திருவீடு அடைய வேண்டும் எனில், பாமாலையாம் தேம்பாவணியை அணிந்து, பயன் பெறுவதே நல்லவழி எனவும் பாடுகின்றனர்.
1)
வீரமாமுனிவரின் உண்மைப் பெயர் யாது? அதனை எவ்வாறு மாற்றிக் கொண்டார்?
2)
வீரமாமுனிவர் படைத்த இலக்கண நூல் எது? அதன் சிறப்புப் பெயர் யாது?
3)
தேம்பாவணியின் மூல நூல்கள் எவை?
4)
காப்பியத் தலைமை மாந்தர்கள் யாவர்?
5)
தலைமை மாந்தர்களுக்கு அடுத்தபடி, காப்பியத்தில் மிகுதியும் இடம்பெறும் மாந்தர்கள் யாவர்?