Primary tabs
2.6 காப்பியத்தின் தனிச்சிறப்புகள்
தமிழில் அமைந்த காப்பியங்களுள், ஒவ்வொன்றுக்கும் ஒரு சில தனித்தன்மைகள் உள்ளன. அவ்வகையில், தேம்பாவணிக்குரிய தனிச் சிறப்புகளாக, பலவற்றைச் சுட்டலாம். சிலவற்றை மட்டும் இங்குக் காண்போம்.
தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. அதுவும் சமயப் பணி புரிவதற்காகத் தமது முப்பதாம் வயதில் இங்கு வந்த முனிவர் ஒருவரால் எழுதப்பட்ட காப்பியம் என்பது வியப்பூட்டும் செய்தியாகும். மேலும் பன்மொழிப் புலமை வாய்ந்த ஒருவரால் படைக்கப்பட்ட காப்பியம் இதுவாகும். வீரமாமுனிவர், இத்தாலியம், இலத்தீன், போர்த்துகீசியம் முதலிய மேலைநாட்டு மொழிகளிலும் தமிழ், வடமொழி, தெலுங்கு, மலையாளம் போன்ற கீழை நாட்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
தேம்பாவணி ஆசிரியர், வெளிநாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை. எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம். பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தமது தேம்பாவணிக் காப்பியத்தைத் தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும்போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.
மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக்கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.
இக்காப்பியத்தின் மற்றொரு சிறப்பு, இது சூசையப்பரின் வரலாற்றைக் கதையாகக் கூறும் நோக்கத்தோடு அமையாது, வரலாற்றின் ஊடே பல அரிய வாழ்வியற் கோட்பாடுகளை வெளிப்படுத்துவதாகும். சான்றாக, அறத்தின் மாட்சியும், அறநெறி செல்வோர் தம் பெருமைகளும் காப்பியம் எங்கணும் மிகவும் வலியுறுத்திக் கூறப்படுகின்றன. அறநெறி வாழ்வதற்குத் தேவையான பண்புகளாகிய ஊக்கமுடைமை, தவம், தியானம், ஞானம், இரக்கம் போன்றவையும் நன்கு வலியுறுத்தப்படுகின்றன. இயேசு பெருமானின் தியாக வாழ்வை முன்னிறுத்திப் பல உண்மைகள் விவரிக்கப்படுகின்றன. திருக்குடும்பத்தார் மூவரும் உலக மக்களின் மீட்புக்காகவும் நலத்துக்காகவும் வறுமை வாழ்வையும் துறவு நெறியையும் மேற்கொண்ட தன்மை எடுத்தோதப்படுகிறது. காம உணர்ச்சிகளின் கேடுகள், புலனடக்கத்தின் உயர்வு, உண்மைத் துறவுக்கும் பொய்த் துறவுக்கும் உள்ள வேறுபாடு, தாழ்மை, அன்புடைமை, புகழுடைமை, கல்விச் சிறப்பு, ஈகைச் சிறப்பு, கற்பின் மாண்பு முதலிய மிக உயரிய கோட்பாடுகள் காப்பியம் எங்கணும் பல்வேறு வகைகளில் கதைகளாக, கருத்துகளாக, உரையாடல்களாக, உவமைகளாக வெளிப்படுத்தப்படுவது இக்காப்பியத்தின் தனிச் சிறப்பாகும்.