தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியத்தின் இலக்கியத் திறன்

  • 2.5 காப்பியத்தின் இலக்கியத் திறன்

    தேம்பாவணி கிறித்தவ சமயக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் காப்பியம் எனினும், ஒரு சிறந்த தமிழ்க் காப்பியத்துக்குரிய இலக்கியச் சுவைகளை வெளிப்படுத்துவதிலும் அது முன்னிற்கிறது. ஒரு வெளிநாட்டவர் எழுதிய தமிழ்க் காப்பியம் என்று எண்ணத் தோன்றாத அளவு சொற்சுவையிலும், பொருட்சுவையிலும், அணிநலங்களிலும் சிறந்து விளங்குகிறது. இதற்குச் சில சான்றுகளை மட்டும் காண்போமா?

    2.5.1 அணி நலம்

    தமிழ்ச் செய்யுளுக்கு அழகு சேர்ப்பன, அதில் பயின்றுவரும் பல்வேறு அணிகள் ஆகும். தண்டியலங்காரம் எனப்படும் அணி இலக்கண நூல் பல்வேறு சொல்லணிகளையும், பொருளணிகளையும் பற்றிப் பேசுகிறது. இவற்றுள் பெரும்பாலான அணிகளைத் தம் காப்பியத்துள் பயின்றுவரச் செய்துள்ளார் வீரமாமுனிவர். அது மட்டுமன்றி வீரமாமுனிவர் தாம் எழுதிய இலக்கண நூலான தொன்னூல் விளக்கத்திலும் அணிவகைகளைப் பற்றி விளக்கியுள்ளார்.

    அணிகளிலெல்லாம் சிறந்ததாகத் தாயணி என அழைக்கப்படுவது உவமையணியே. தேம்பாவணியில் அரிய இனிய உவமைகள் ஏராளம் காணப்படுகின்றன. சில சான்றுகளைக் காண்போம்.

    உவமைச் சுவை

    மனத்தூய்மைதான் தலைசிறந்த அறம். அத்தகைய மனத்தில் பாவக்கறை சேர்ந்துவிட்டால், அந்த மனமே அதற்காக வருந்தினால் ஒழிய அக்கறைகள் அகலா. இதற்கு உவமை காட்ட விரும்புகிறார் வீரமாமுனிவர். மண் கால்களில் ஒட்டிக் கொள்வதில்லை. ஆனால் அந்த மண்ணுடன் தண்ணீர் கலந்து சேறாகிவிட்டால், அச்சேறு கால்களில் ஒட்டிக் கொள்கிறது. பிறகு, அச்சேற்றைக் கழுவித் தூய்மை செய்யவும் நீர்தான் தேவைப்படுகிறது. ஆகவே பாவத்துக்குக் காரணமாகிய மனமே, பாவத்தைப் போக்கிக்கொள்ளவும் துணை செய்வதால், மனம் நீர் போன்றது என நயம்படப் பாடுகிறார்.

    புனம்செயும் பங்கமே புனம்ஒழித்தென
         மனம்செயும் பங்கமும் மனநொந்து ஆற்றலின்
    தினம்செயும் புகர்வினை தெரிகிலார் அறத்து
        இனம்செயும் பயன்பட ஈட்டல் ஏலுமோ?

    (வாமன்ஆட்சிப் படலம், 37)

    இப்படிப் பல இனிய உவமைகளைக் காப்பியத்தில் ஆங்காங்கே அழகாகக் கையாளுகிறார். அவ்வுவமைகளில் பலவும் உலகியல் வாழ்வில் அன்றாடம் நாம் காணும் அனுபவங்களாகவே உள்ளன. சான்றாக ஓரிடத்தில், பிறரது பற்றுகளை அறுக்கக் கூற முற்பட்டு, தான் பற்று விருப்பம் கொள்ளல், பிறர் வீட்டுத் தீயை அணைக்கப் போய்த் தன் வீடு பற்றி எரிதலைப் போன்றது என்கிறார்.

    உருவக அழகு

    காப்பியத்தில் நம் நெஞ்சைக் கவரும் பல உருவகங்களும் பயின்று வருகின்றன. தவ நெறிநின்றார் பெருமையைப் பாடும்போது, தவத்தை மரக்கலமாகவும், ஊக்கத்தை அதன் நீண்ட நடுமரமாகவும், தெய்வபக்தி, தெய்வ பயம் ஆகியவற்றைப் பாய்களாகவும், வரத்தைக் காற்றாகவும், தியானத்தை மீகாமனாகவும் (மாலுமி), பாவ வினைகளைக் கடல் நீராகவும் காட்டி, அந்நீரைக் கிழித்தெறிந்து அவர்கள் வீட்டுலகில் சேர்வார்கள் என்று பாடுவது உருவகத்திற்குச் சிறந்த சான்றாகும்.

    உள்ளிய தவநவ் வேறி
         ஊக்கநீள் மரத்தை நாட்டி
    விள்ளிய அன்பும் உட்கும்
         வியனிரு பாயும் பாய்த்தி
    தெள்ளிய வரக்கால் வீசத்
         தியானமீ காமனா கஊர்ந்து
    அள்ளிய வினைநீர் ஈர்ந்து
         அரிதில் வீட்டுலகிற் சேர்வார்

    (மீட்சிப் படலம், 82)


    தற்குறிப்பேற்றம்

    உலகில் இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் மேல் கவிஞர்கள் தம் குறிப்பை ஏற்றி வைத்து, காரணம் கற்பித்துப் பாடுவது இலக்கிய மரபு. பொதுவாகக் கதிரவன் தோற்றம், மறைவு, நிலவின் இயக்கம், கொடிகளின் அசைவு போன்றனவற்றை இவ்வாறு பாடுவர். தமிழ் இலக்கிய மரபுகளை நன்குணர்ந்த வீரமாமுனிவரும் இவ்வணியை நன்றாகப் பயன்படுத்துகிறார். திருக்குடும்ப மூவர் எருசலேம் நகரை அடைந்தபோது அந்நகர மாளிகையில் இருந்த கொடிகள், இவர்களை இந்நகருக்குள் வராதீர்கள் அங்கேயே நின்று விடுங்கள் என்று கூறுவது போல் ஆடுகின்றனவாம். இயேசுபாலகனுக்கு அந்நகர அரசன் இழைக்கக் கருதும் தீமையை எண்ணி, அவ்வாறு கூறுகின்றனவாம். அத்துடன், அந்த மாளிகைக் கொடிகள், ஆடுகின்ற ஆலயக் கொடிகளை நோக்கி வருகின்றார் எட்டுத் திக்குகளையும் காக்க வல்லவர். ஆதலின் அவர் வருவதைத் தடைசெய்யாமல் நில்லுங்கள்.

    அல்உமிழ் இருளின் இருண்டநெஞ்சு அவன்செய்
         அரந்தையின் வெவ்வழல் ஆற்ற
    வில்உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி
         விரித்தபூங் கொடிகள்தம் ஈட்டம்
    எல்உமிழ் மூவர் வருகைகண்டு அரசன்
         இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி
    ‘நில்லுமின்! நின்மின்‘ எனஇடை விடாது
         நீண்டகை காட்டுவ போன்றே

    ஒண்புடைக் கொடிகாள் நில்லுமின் நின்மின்;
         உயிர்அருந் துயர்அற வந்த
    எண்புடை காக்கும் அருள்புரி நாதன்
         இவன்என அமர்த்திடல் போன்றே.”

    (மகன் நேர்ந்த படலம் 59,60)

    என்று அமர்த்தியதாகவும் பாடுகிறார். கொடிகள், பிற கொடிகளை நோக்கிக் கூறுவதாகப் பாடுவது வீரமாமுனிவர் செய்த புதுமையாகும்.



புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 11:59:35(இந்திய நேரம்)