Primary tabs
-
3.1 நூலாசிரியர்கள் அறிமுகம்
மேற்கூறிய ஐந்து கிறித்தவக் காப்பியங்களை எழுதிய சான்றோர், வெவ்வேறு சமுதாயத்தவராகவும் வெவ்வேறு சமயப் பிரிவினராகவும் இருந்தாலும், தமிழால் ஒன்றுபடுகின்றனர். கிறித்துவின் வாழ்வினையும், விவிலியக் கோட்பாடுகளையும் காப்பிய வடிவில் பாடும் நோக்காலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இனி, ஆசிரியர்களைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாமா?
திருவாக்குப் புராணம் என்பதின் ஆசிரியர் கனகசபைப் பிள்ளை. இலங்கையிலுள்ள அளவெட்டி என்னும் ஊரில் 1815ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முழுப் பெயர் ஜெர்மையா எவாட்த் கனகசபைப் பிள்ளை என்பதாகும். இவரது பெற்றோரும் முன்னோரும் சைவ சமயத்தவர்கள். இவர்கள் கிறித்தவ சமயத்தின் சீர்திருத்தச் சபைப் பிரிவினரால் ஈர்க்கப்பட்டுக் கிறித்தவர்களாக மாறியவர்கள்.
● கனகசபைப் பிள்ளையின் திறனும் பணியும்
பழந்தமிழ்ப் புலவர்களின் மரபு சார்ந்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். திருவாக்குப் புராணமேயன்றி, பல தனிப் பாடல்களையும், ஒரு நிகண்டு நூலையும், அழகர்சாமி மடல் என்னும் ஒரு பிரபந்த நூலையும் இவர் இயற்றியுள்ளார்.
கிறித்து மான்மியம் என்னும் நூலின் ஆசிரியர் பற்றிய செய்திகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. எனினும், இவரது பெயர் சங்கைத் தொஷ் ஐயர் என்பதும், இந்நூல் தரங்கம்பாடி லுத்தரன் மிசன் அச்சகத்தில் 1891ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளன. இவரது பெயரை வைத்து அருட் பணியாளரோ என எண்ணத் தோன்றுகிறது. எனினும் இக்கருத்தை உறுதி செய்யக் கூடிய சான்றுகள் எதுவும் இப்போது கிட்டவில்லை.
3.1.3 மாணிக்கவாசகம் ஆசீர்வாதம்
திரு அவதாரம் என்னும் நீண்ட காப்பியத்தை எழுதியவர் மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் என்பவர். திருநெல்வேலி மாவட்டத்தில் டோனாவூருக்கு அருகிலுள்ள சூரங்குடி என்னும் சிற்றூரில் 1865ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இளமையிலேயே அவரது பெற்றோரால் இறைப் பணிக்கென ஒப்படைக்கப்பட்டவர்.
சுடர்மணி என்னும் பெயரில் இயேசுபெருமானின் வாழ்க்கை வரலாற்றை என். ஆரோக்கியசாமி எழுதியுள்ளார். 1912இல் விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் பிறந்தவர். திண்டிவனத்திலும், தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பிற இடங்களிலும், பல பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த கணித ஆசிரியர். கணிதப் பாடத்தை விளையாட்டாகவும், ஜால வேடிக்கையாகவும் கற்பிக்கும் கணித ஜாலம் என்ற புதிய போதனா முறையை உருவாக்கி, அதனை நூல் வடிவிலும் கொண்டு வந்து, தமிழகமெங்கும் பரப்பியவர். இக்காப்பியமே அன்றி, சிலுவைப் பாதை, செபப் பாமாலை, வேளாங்கண்ணி மாதா சரித்திரம், மறைத் தொண்டர் புராணம் போன்ற வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். விரைந்து கவிபாட வல்ல ஆற்றலால் இவர் ஆசுகவி எனப் பாராட்டப்பட்டார். இவரது சுடர்மணி நூலை 1976இல் இவரது மகன் ஆ.பி.அந்தோணி இராசு திருச்சியில் முதற் பதிப்பாக வெளியிட்டார்.
இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்து, தமிழ் மக்களின் இதயம் கவர்ந்த காப்பியமாக விளங்கும் இயேசு காவியத்தின் ஆசிரியர் கண்ணதாசன். கடல் மடை திறந்த வெள்ளம் போல் கவிபாடவல்ல இவர் கவியரசு என அனைத்துத் தமிழ் மக்களாலும் பாராட்டப்படுபவர். தமிழ்த் திரைப்படங்களில் கருத்துச் செறிவும் வாழ்வியல் தத்துவங்களும் நிறைந்த பல பாடல்களை எழுதிய பாடலாசிரியராகவும் விளங்கியவர்.
● இலக்கியமும் அரசியலும்
இவரது இலக்கியப் படைப்புகள் பல திறத்தன. நாடகம், சிறுகதை, நாவல், பாடல்கள், கட்டுரை எனப் பல்வகை இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ள அவர், கவிதைத்துறையில் பெரும் சாதனை செய்தவர். தமது புகழ்மிகு வாழ்வின் இறுதிக் கட்டத்தில், கிறித்தவரல்லாத அவர், இயேசு பெருமானின் வாழ்வைக் காவியமாக அமைத்து, இறவாப்புகழ் தேடிக் கொண்டார். தமது காவியத்தை அவரே இறவாக் காவியம் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டுப் பெருமிதம் கொண்டார். இக்காவியமே அன்றி, மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகிய குறுங்காப்பியங்களையும் கவிஞர் கண்ணதாசன் படைத்துள்ளார்.