தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பிய அறிமுகம்

  • 3.2 காப்பிய அறிமுகம்

    நாம் பாடப் பகுதியில் தேர்ந்து கொண்டுள்ள ஐந்து காப்பியங்களின் ஆசிரியர்களைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம். இனி, இக்காப்பியங்களின் அமைப்பு முறையையும் அவை கூறும் செய்திகளையும் பற்றி அறிய முற்படலாமா?

    3.2.1 காப்பியங்களின் கருவும் கதையும்

    தமிழில் உள்ள கிறித்தவக் காப்பியங்களுள் முதன்மை வாய்ந்தவைகளாகப் போற்றப்படுபவை இரட்சணிய யாத்திரிகமும் தேம்பாவணியும் ஆகும். எனினும் அவை கிறித்தவ சமய மூலவரான இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நேரடியாகப் பாடுவன அல்ல. அவற்றின் பாடுபொருள் கிறித்துவின் வாழ்க்கையன்று. இரட்சணிய யாத்திரிகம், கிறித்தவன் ஒருவனின் ஆன்மிக வாழ்வுப் பயணத்தைச் சித்திரிப்பது. தேம்பாவணி, இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசையப்பரின் வரலாற்றை விரித்துரைப்பது. இவ்விரு காப்பியங்களின் ஊடே, இயேசு பெருமானின் வாழ்வும் போதனைகளும் சொல்லப்படுகின்றனவே தவிர நேரடியாக இயேசு பெருமானின் வாழ்வும் அறஉரைகளும் விளக்கப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் எழுந்த கிறித்தவக் காப்பியங்கள் பலவும் இயேசு பெருமானின் வாழ்வையும் பணிகளையும் நேரடியாகப் பாடின. இங்குப் பேசப்படும் ஐந்து காப்பியங்களுள் திருவாக்குப் புராணம் ஒன்று மட்டும் மேற்கூறியதற்கு விதிவிலக்கு எனலாம். இக்காப்பியத்தில் திருவாக்கு எனக் குறிக்கப்படுவது விவிலியம் எனப்படும் திருமறையாகும். விவிலியத் திருமறை, கடவுளின் வாக்காகக் கருதப்படுவதால், திருவாக்கு எனச் சுட்டப்பட்டது.

    திருவாக்குப் புராணத்தின் உள்ளடக்கம்

    விவிலியத் திருமறை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு கிறித்து பெருமானின் மானிடப் பிறப்புக்கு முற்பட்ட செய்திகளையும், புதிய ஏற்பாடு அதற்குப் பிற்பட்ட செய்திகளையும் கூறுகிறது.

    திருவாக்குப் புராண ஆசிரியரும், தமது காப்பியத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, விவிலியத்தின் இரு ஏற்பாடுகளின் செய்திகளையும் பாட விழைந்துள்ளார். ஆனால் முதல் பாகத்தைப் பாடி முடித்த அவரால், இரண்டாம் பாகத்தைப் பாடி முடிக்க இயலவில்லை. இரண்டாம் பாகத்தில் சுவிசேட காண்டம் என்ற தலைப்பில் அமைந்த 67 பாடல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. முழுமையான இரண்டாம் பாகம் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

    பிற நான்கு காப்பியங்களின் கருவும் கதையும்

    மேற்குறிப்பிட்ட திருவாக்குப் புராணம் என்ற காப்பியத்தைத் தவிர, பிற காப்பியங்களான திரு அவதாரம், கிறித்து மான்மியம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய நான்கும் இயேசு பெருமானின் மானிட வாழ்வை மிக விளக்கமாகப் பாடுகின்றன. அவரது பிறப்புத் தொடங்கி, அவர் இறந்து உயிர்த்தெழுந்து விண்ணகம் ஏறிச் செல்லும் நிகழ்வு வரையும் உள்ள அவரது மாண்புமிக்க திருப்பணிகளையும் இவை பேசுகின்றன.

    விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய இயேசுவின் சீடர்கள் அவரது வாழ்வையும் பணிகளையும் தத்தம் நோக்கில் நான்கு நூல்களாக வடித்துள்ளனர். அவற்றை நற்செய்தி நூல்கள் (GOSPELS) என்று கூறுவது பொது மரபு. இந்நான்கு காப்பியங்களும், அந்த நான்கு நற்செய்தி நூல்களின் தழுவலாகக் கவிதை நடையில் உள்ளன. தமிழ் மரபுக்கேற்ப ஓரளவு கற்பனைச் சுவையோடு அமைந்த மறுபதிப்புகள் போலத் தோன்றுகின்றன. ஆகவே, இயேசு பெருமானே இக்காப்பியங்களின் கருப்பொருள் எனலாம். அவரது புனித வாழ்வே இவற்றின் கதை அல்லது பாடு பொருள்.

    3.2.2 காப்பியங்களின் மூல நூல்

    பொதுவாக, அனைத்துக் கிறித்தவ இலக்கியங்களுக்கும் விவிலியத் திருமறையே மூல நூலாகும். எனினும், இரட்சணிய யாத்திரிகத்துக்கும் தேம்பாவணிக்கும் பிற மேனாட்டார் நூல்களும் மூல நூலாகியுள்ளன. ஆனால், இப்பாடத்தில் இடம்பெறும் ஐந்து காப்பியங்களும் விவிலிய மறையையே முழுவதும் சார்ந்துள்ளன எனலாம். திருவாக்குப் புராணம், விவிலியப் பழைய ஏற்பாட்டை அடியொற்றி அமைந்துள்ளது. பிற நான்கு காப்பியங்களும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களையே (GOSPELS) தம் மூல நூல்களாக அமைத்துக் கொண்டுள்ளன.

    3.2.3 காப்பியங்களின் அமைப்பு முறை

    நான்கு காப்பியங்கள் கிறித்து பெருமானின் வரலாற்றையும், திருவாக்குப் புராணம் எனும் காப்பியம் பழைய ஏற்பாட்டு வரலாற்றையும் பேசினாலும், ஒவ்வொன்றின் அமைப்பு முறையும் தனித்தன்மைகளோடு விளங்குகிறது. தமிழ்க் காப்பிய இலக்கணத்தைப் பெரிதும் தழுவியே இவை அமைந்துள்ளன.

    திருவாக்குப் புராணம்

    திருவாக்குப் புராணம் இரண்டு பாகங்களைப் பெற்றுள்ளது. முதற்பாகம் ஜநந காண்டம், யாத்திரைக் காண்டம் என்னும் இரண்டு காண்டங்களை உடையது. இக்காண்டங்கள், விவிலியத் திருமறையின் பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதியாகமத்தையும், யாத்திராகமத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு காண்டத்திலும் படலம் எனப்படும் பல சிறு பிரிவுகள் உள்ளன. ஜநந காண்டத்தில் பத்துப் படலங்களும், யாத்திரைக் காண்டத்தில் எட்டுப் படலங்களும் உள்ளன. நூலின் இரண்டாம் பகுதி, சுவிசேட காண்டம் எனத் தலைப்பிடப் பெற்றுள்ளது. 67 பாடல்கள் மட்டும் இதில் இடம் பெற்றுள்ளன. பிற பிரிவுகள் எதுவும் இல்லை. நூலின் தொடக்கத்தில் தமிழ்க் காப்பிய அமைப்பு முறைக்கேற்ப, கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகியன அமைந்துள்ளன. இந்நூலின் பதிகம் 111 விருத்தப் பாக்களை உடையது. ஆசிரியர் தாம் பாடக் கருதிய கிறித்தவ வேதச் செய்திகளை யெல்லாம் தொகுத்து, இதில் இனிமையாகப் பாடியுள்ளார்.

    திரு அவதாரம்

    திரு அவதாரம் என்னும் காப்பியம், கடவுள் வாழ்த்து, பாயிரம் நீங்கலாக, 2294 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. பால காண்டம், உத்தியோக காண்டம், ஜெய காண்டம், ஆரோகண காண்டம் என நான்கு காண்டங்களால் ஆனது. ஒவ்வொரு காண்டமும் பல்வேறு பர்வங்களாகப் (பருவங்களாக) பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பர்வத்தின் உள்ளேயும் உட் தலைப்புகளுடன் நிகழ்ச்சி தொடர்பான பாடல்கள் அமைந்துள்ளன. படிப்பவர்களுக்குத் துணை புரியும் வகையில் உட்தலைப்புகளோடு விவிலியத்தில் வரும் நற்செய்தி நூல் ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன.

    கிறிஸ்து மான்மியம்

    கிறிஸ்து மான்மியம் தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம் முதல் கிறிஸ்து பரமண்டலமேறிய சருக்கம் முடிய 39 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. விருத்தப் பாக்களால் அமைந்த இந்நூலில் வேறு வகையான பகுப்புகள் எவையும் காணப்படவில்லை.

    சுடர்மணி

    சுடர்மணி என்னும் காப்பியம், பாயிரம் நீங்கலாக, பால காண்டம், உபதேச காண்டம், மீட்புக் காண்டம், உத்தான காண்டம் ஆகிய நான்கு காண்டங்களைப் பெற்று விளங்குகிறது. பால காண்டத்தில் தூதுப் படலம், அவதாரப் படலம், காட்சிப் படலம், நசரைப் படலம் ஆகிய 4 படலங்கள் உள்ளன. உபதேச காண்டத்தில் திருமுழுக் காட்டுப் படலம், சோதனைப் படலம், சீடரைச் சேர்த்த படலம் முதலிய 30 படலங்கள் காணப்படுகின்றன. மீட்புக் காண்டத்தில் ஊர்வலப் படலம், திங்கள் படலம் முதலிய 10 படலங்களும், உத்தான காண்டத்தில் எருசலைப் படலம், திபேரியாப் படலம், ஆரோகணப் படலம் ஆகிய முன்று படலங்களும் உட்பிரிவுகளாக அமைந்துள்ளன.

    இயேசு காவியம்

    இயேசு காவியத்தில் பாயிரப் பாடலுடன், பிறப்பு என்ற முதல் பாகமும், தயாரிப்பு என்ற இரண்டாம் பாகமும், பொது வாழ்வு என்ற மூன்றாம் பாகமும், பாடுகள் என்ற நான்காம் பாகமும், மகிமை என்ற ஐந்தாம் பாகமும் 149 உட்தலைப்புகளுடன் அமைந்துள்ளன. இவையன்றி வேறு சில சிறு தலைப்புகளும் பொருள் விளக்கத்திற்காக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.

    மேற்குறிப்பிட்ட இவ்வைந்து காப்பியங்களுள் இயேசு காவியத்தையும், கிறித்து மான்மியத்தையும் தவிர்த்த பிற மூன்று காப்பியங்களும், தமிழ்க் காப்பிய மரபுகளைப் பெரிதும் தழுவ முயன்றுள்ளமை தெரிகிறது. பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து, குரு வணக்கம், அவையடக்கம் முதலிய பகுதிகள் சிலவற்றில் இடம்பெறுவதும் காப்பியப் பகுப்பு முறைகளும் இவ்வுண்மைக்குச் சான்றுகளாவன.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 12:31:12(இந்திய நேரம்)