தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியங்களும் விவிலியமும்

  • 3.4 காப்பியங்களும் விவிலியமும்

    முன்னரே கூறியபடி, இவ்வைந்து காப்பியங்களும் விவிலியத்தையே மூல நூலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. திருவாக்குப் புராணம் விவிலியப் பழைய ஏற்பாட்டைத் தழுவி நிற்க, ஏனைய காப்பியங்கள் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களையே சார்ந்து நிற்கின்றன.

    3.4.1 விவிலியச் செய்திகள்

    விவிலிய வரலாற்றின் கவிதை வடிவங்களாகவும் தமிழ்ப் பதிப்புகளாகவும் இக்காப்பியங்கள் விளங்குவது முன்னரே சுட்டப்பட்டது. இயேசு காவியம், சுடர்மணி ஆகிய இரண்டையும் தவிர, பிறநூல்கள் விவிலிய வரலாற்றைப் பெரும்பாலும் விவிலியத்தில் உள்ளவாறே எடுத்துக் கூறுகின்றன.

    நோக்கம்

    கற்பனை கலவாமல் செய்யுள் நடையில் விவிலிய வரலாற்றைத் தருவதையே இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. கற்பனை கலந்து பாடினால் அது, விவிலிய இறைச் செய்திகளின் புனிதத் தன்மையை மாசுபடுத்தும் என்ற நோக்கில் இவர்கள் கற்பனை கலவாமல் பாடியிருக்கலாம்.

    விவிலியம் கற்க

    கிறிஸ்து சமய வித்தியா சாலை மாணாக்கரும் பிறரும் சத்திய வேத நூலைக் (BIBLE) கற்றுக் கொள்வதற்கு உபயோகமாக மெக்காதர் ஐயரால் புராண நடையாகச் செய்விக்கப்பட்டது என்ற ஒரு குறிப்பு திருவாக்குப் புராணத்தின் முதல் பக்கத்தில் காணப்படுகிறது. இக்குறிப்பும் மேற்கூறிய உண்மையை உறுதிப்படுத்தும். சான்றாக, கிறித்து பெருமான் ஒரு மலை மீது அமர்ந்து செய்த அருட்பொழிவைப் பாடும் திரு அவதார ஆசிரியர், அக் கருத்துகளை அதிக மாற்றமின்றி அப்படியே தருகிறார். இது அத்தகைய ஒரு பாடல்:

    இருதய சுத்தம் உள்ளோர் என்றுமே பாக்ய ராவார்
    ஒருவருங் காணக் கூடா உன்னதரைத் தரிசிப் பாரே
    இருசமா தானம் செய்வோர் இன்புறும் பாக்ய ராவார்
    அருள்நிறை தெய்வம் தம்மின் அன்புறும் புத்ரர் ஆவார்

    (உத்தியோக காண்டம்: முதற்பகுதி - 144)

    (பாக்யர் = பேறு பெற்றவர்கள்; தரிசிப்பார் = காண்பார்; புத்ரர் = புத்திரர் = பிள்ளைகள்)

    3.4.2 விவிலியக் கோட்பாடுகள்

    இக்காப்பியங்கள், விவிலியத்திலுள்ள வரலாற்றையும் நிகழ்வுகளையும் விவரிப்பதோடு, அந்த நிகழ்வுகளின் ஊடாக விவிலியக் கருத்துகளையும், கோட்பாடுகளையும் கூட நயமாக வெளிப்படுத்துகின்றன. இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.


    பாவக் கறை

    சுடர்மணி ஆசிரியர் பால காண்டத்தில் மனித குலத்தின் ஆரம்ப வரலாற்றைக் கீழ்வருமாறு விளக்கிப் பாடுகிறார்:

    இறைவனின் படைப்பே நாமும்
         இயற்கையின் கூற்றை நோக்கின்
    முறைப்படி முதல்ம னுக்கள்
         மூலமே பிறந்தோம் என்றும்
    குறையவர் செய்த தேனும்
         குவலயத் துள்ளோர் எல்லாம்
    கறையொடு பிறந்தோம் என்றும்
         காண்டலும் எளிதே அன்றோ!

    (தூதுப் படலம் :15)

    (முதல் மனுக்கள் = முதல் மனிதர்கள் ஆகிய ஆதாமும் ஏவாளும்; குவலயம் = உலகம்)

    இப்பாடலில் இறைவனின் படைப்புகளாகிய நாம் எல்லோரும் ஆதி மனிதர்களான நம் முன்னோர் மூலம் பிறந்தோம். அது மட்டுமல்ல, அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக, நாம் அனைவருமே அந்தப் பாவக் கறையோடு பிறக்கிறோம் என்ற கிறித்தவக் கோட்பாடு வெளிப்படுத்தப்படுகிறது.

    தொண்டு உள்ளம்

    இன்னோரிடத்தில், இயேசுவிடம் வந்து தன் இரு மக்களும் இறையரசில் இயேசுவின் இரு புறமும் அமர அருள் செய்ய வேண்டுமென்று கேட்ட ஒரு தாயைப் பற்றி, கவிஞர் கீழ்வருமாறு பாடுகிறார்:

    இறையரசு அதிலே மக்கள்
         இருபுறம் அமர வேண்டி
    இறைவரைக் கேட்கும் அன்னை
         எண்ணம்இவ் வுலகப் பற்றே
    நிறைகுண நல்லோர் இந்த
         நிலையற்ற வாழ்வை எள்ளிக்
    குறைவற்ற சேவை செய்யக்
         குறிப்பதே இறைவாக்கு அன்றோ?

    (இல்லறப்படலம், 813)

    இப்பாடலில், நல்ல குணங்கள் நிறைந்தவர்களை நிலையில்லாத இந்த உலக வாழ்வை வெறுத்து, குறைவில்லாத தொண்டு செய்வதற்காகத் தூண்டுவதே இறைவனின் வாக்கு என்னும் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.

    ஓய்வு நாள்

    இயேசு காவியத்தில் கண்ணதாசனும் விவிலியக் கோட்பாடுகளைப் பல இடங்களில் விளக்கி உரைக்கிறார். சான்றாக, ஓர் இடம். இயேசுவின் சீடர்கள், ஓய்ந்திருக்க வேண்டிய நாளில், தங்கள் பசியைத் தீர்ப்பதற்காக, வயலிலுள்ள கதிர்களைக் கொய்து தின்றார்கள். இதனைக் குறை கூறும் மதத்தலைவர்களான பரிசேயர்களுக்கு இயேசு பதில் கூறுவதை,

    ஆலயத்தை விடப்பெரிய ஒருவன் இங்கே
         அமர்ந்துள்ளான் என்பதைநீர் அறிதல் வேண்டும்
    நாலுதிசை தன்னிலும்நான் வேண்டும் ஒன்று
         நாள்தோறும் பலியல்ல இரக்கம் மட்டும்
    மேலான பரிசேயர் குற்றம் காண்பீர்
         விழியெழுதும் கோல்போல அதனைக் காணேன்
    காலமிது ஓய்வுநாள் மனிதர்க் காக
         காண்கின்ற மனிதரெல்லாம் ஓய்வுக் கல்ல!

    (இயேசு காவியம், 28)

    (பலிகள் = இறைவனுக்குப் படைக்கப்படும் விலங்குகள் முதலியவை; பரிசேயர் = யூத சமயத் தலைவர்களில் ஒரு சாரார்; விழி எழுதும் கோல் = கண்ணுக்கு மை எழுதும் ஒரு சிறு கோல்)

    என்று பாடுகிறார்.

    ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் முதலிய சமய விதிகள் எல்லாம் மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. மனிதர்கள், விதிகளுக்காக உண்டாக்கப்படவில்லை என்ற இயேசுவின் கொள்கை விளக்கத்தைக் கவிஞர் மிக அழகாக இங்குக் கூறியுள்ளார்.

    இறை ஆட்சி

    இயேசு காவியத்தின் இறுதிப் பகுதியில் அமையும் ஒரு பாடல், கிறித்தவ சமய அடிப்படைக் கோட்பாட்டையும், ஆதார நம்பிக்கையையும் பிழிந்து (essence) தருவதாக அமைந்துள்ளது.

    மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
         என்பது சத்தியமே
    புண்கள் இருக்கும் வரையில் மருந்து
         தேவை நித்தியமே
    விண்ணர சமையும் உலகம் முழுதும்
         இதுதான் தத்துவமே
    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
         இயேசுவை நம்புவமே!

    (இயேசு காவியம் - 149)

    (நித்தியம் = நிலையான உண்மை;  விண்ணரசு = கடவுளின் ஆட்சி.)

    இயேசு பெருமான் மீண்டும் உலகுக்கு வரவிருத்தல், இவ்வுலகில் இறைவனின் ஆட்சியை அமைக்கவிருத்தல் முதலிய கோட்பாடுகள் இப்பாடலில் புலப்படுத்தப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 13:07:58(இந்திய நேரம்)