தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியங்களின் இலக்கியச் சிறப்பு

  • 3.5 காப்பியங்களின் இலக்கியச் சிறப்பு

    சொல்லும் செய்தியால், கதைப் போக்கால் இவை கிறித்தவக் காப்பியங்களாக அமைந்தாலும், கவிச் சுவையாலும் இலக்கிய நயங்களாலும் சிறந்த தமிழ்க் காப்பியங்களாகத் திகழ்கின்றன. முன்னரே சுட்டப்பட்டது போல, இவற்றுள் சில, இலக்கியச் சுவைக்கும் கற்பனை நயத்துக்கும் அதிக முக்கியத்துவம் தராவிடினும், அனைத்துக் காப்பியங்களிலுமே ஆசிரியர்களின் இலக்கியத் திறன் நன்கு வெளிப்படுகிறது. சுடர்மணியும் இயேசு காவியமும் கவித்திறனில் சிறந்து விளங்குகின்றன. கிறிஸ்து மான்மியத்தின் நடைத்திறமும் சிறப்புடையது.

    3.5.1 அணி நயங்கள்

    பல அழகிய அணிகளும் உருவகங்களும் இக்காப்பியங்களில் இடம் பெறுகின்றன.

    உவமைகள்

    இறையடியார்களின் அறவுரை கேட்பதில் ஆர்வமும் உணர்வும் இல்லா மக்கள் நிலை, கிறிஸ்து மான்மியம் ஆசிரியர் சங்கை ஸ்தொஷ் கண்ணில்லாக் குருடர்கள் நிலையை ஒத்தது என்கிறார். எப்படிப் பார்வையற்றவர்களுக்கு இரவும் பகலும் ஒன்றாகவே இருக்குமோ, அது போலவே விண்ணில் இருந்து ஒருவர் மண்ணுக்கு இறங்கிச் சென்று அறிவுறுத்தினாலும், உணர்வில்லாதவர்கள் திருந்த மாட்டார்கள் என்கிறார் அவர்.

    சுடர்மணி காவியத்தில் எண்ணற்ற இனிய உவமைகள் விரவிக் கிடக்கின்றன. சான்றாக,

    அரையனின் ஆணை கேட்டே
         அங்குள கொலைஞர் எல்லாம்
    இரையதைத் தேடி யோடும்
         இளமறிக் கூட்டம் போலும்
    கரையதை உடைத்துப் பாயும்
         கனத்தநீர்த் தேக்கம் போலும்
    புரையிலார் உயிர் குடிக்கப்
         புகுந்தனர் ஊரில் என்னே

    (காட்சிப் படலம் : 103)

    (அரையன் = அரசன்; கொலைஞர் = கொலை செய்யும் அரசனின் சேவகர்கள்; இள மறி = இளமையான மான்குட்டி; நீர்த் தேக்கம் = அணைக்கட்டு; புரையிலார் = குற்றம் இல்லாதவர்கள்.)

    என்ற பாடலைப் பார்க்கலாம்.

    இதில் பல உவமைகள் உள்ளன. ஏரோது என்னும் அரசனின் ஆணைப்படி, இளங்குழந்தைகளைக் கொல்லுவதற்குப் புறப்பட்ட கொலைகாரர்களுக்கு மான் கூட்டத்தையும் நீர்த்தேக்கத்தையும் உவமை காட்டுகிறார் கவிஞர். நம் உள்ளத்தைத் தீய எண்ணங்களிடம் ஈர்க்கும் சாத்தானின் செயலை விவரிக்கும்போது, பள்ளத்தில் பாயும் நீர்போல் நம் உள்ளம் பாவமாகிய பாதாளத்தில் விழுமாறு செய்கிறான் அவன் என்று உவமை நயம்பட விவரிக்கிறார். மரணத்தைத் திருடனுக்கு ஒப்பிட்டு இயேசு பேசியுள்ளதையும் கவிதையாக்குகிறார் கவிஞர்.

    கண்ணதாசனின் உவமைகள்

    சிறந்த உவமைகளைத் தடையின்றிப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற கவிஞர் கண்ணதாசன். இயேசு காவியத்தில் பல உவமைகளைப் பயன்படுத்துகிறார். சான்றாக, நூற்றிலோர் பூவைப் போல நுவலரும் முகத்தைக் காட்டி அன்னை மரி அமர்ந்திருந்ததாகப் பாடுகிறார். அதாவது, நூற்றுக்கணக்கான பூக்களுக்கு நடுவே தனியழகுடன் விளங்கும் ஒரு பூவைப் போல, விவரிக்க முடியாத தன் அழகு முகத்தைக் காட்டி நிற்கிறாளாம் அவள்.

    இன்னோரிடத்தில், தூண்டிற்புழுவைப் போல மரியாள் துடித்ததாகவும் பாடுகிறார். மீன்களைப் பிடிப்பதற்காக மீனவர்களின் தூண்டில் என்னும் கருவியிலே மாட்டி வைக்கப்படும் புழுவை இங்கு உவமையாக்கியுள்ளார். மரியும், சூசையும் குழந்தையாகிய இயேசுவைக் காணாமல் எருசலேம் நகரில் அடைந்த துயரத்தைப் பாடும்போது ஆயிரங்காலம் தேடியலைந்து தோண்டி எடுத்த தம் தோன்றாப் பொருளை மீண்டும் தொலைத்த வேதனை கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

    3.5.2 வருணனைத் திறம்

    கவிஞர்களுக்கு எதையும் வருணிப்பது என்பது கைவந்த கலையாகும். அதிலும் காப்பியம் படைக்கும் கவிஞர்களுக்கு இது இயல்பாகவும் எளிதாகவும் அமையக்கூடிய ஒன்றாகும். இதற்கு இக்காப்பியப் புலவர்களும் தக்க சான்றாகின்றனர்.

    இயற்கை வருணனை

    சுடர்மணி காப்பியத்தில் அமையும் வருணனைப் பகுதிகள் பலவாகும். குறிப்பாக இயற்கை வருணனையாக அமையும் பாடல்கள் நயமானவை. சான்றுக்கு ஒரு பாடலைக் காண்போம்:

    பகலவன் நாளும் வந்து
         பணிந்துபின் மேற்கே செல்வன்
    உகந்திரு மதியும் அல்லில்
         உறவொடு தோன்றி மீள்வன்
    மிகுந்திடும் வெயிலில் மேகம்
         மேல்நின்று நிழலை ஈவன்
    சுகமதை அருளக் காற்றும்
         சுழன்றெங்கும் சூழ்ந்து நிற்பன்

    (தூதுப்படலம் -7)

    (பகலவன் = ஞாயிறு (சூரியன்); உகந்திடும் = விரும்பிடும்; மதி = நிலவு; அல் - இரவு;  மீள்வன் - மீண்டும் வருவான்;  ஈவன் - கொடுப்பான்.)

    இப்பாடலில் ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றுவதையும், நிலா குளிர்ச்சி தருவதையும், மேகங்கள் நிழல் தருவதையும், காற்று சுகம் தருவதையும் அழகாக வருணித்துள்ளார். இறைவன் முதன் முதல் படைத்த ஏதேன் என்னும் இன்ப வனத்தின் காட்சி இது. தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தி இவரும் சில பாடல்களைப் பாடியுள்ளார். சான்றாக மரியன்னைக்கு நிழல் கொடுக்க மரங்களிடையே போட்டி நிலவியதாகப் பாடுகிறார் கவிஞர். இயல்பாக நிழல் கொடுக்கும் மரங்களைப் போட்டி போட்டுக் கொண்டு மரியன்னைக்கு நிழல் கொடுப்பதாகப் பாடுவது கவிஞரின் கற்பனையாகும்.

    கடலும் தாவரங்களும்

    இயேசு காவியத்தில் பல பாடல்களில் கவிஞர் கண்ணதாசனின் வருணனைத் திறன் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. சில சான்றுகளைக் காண்போமா?

    நூலின் பாயிரப் பகுதியில், இந்நூலைப் பாடத் துணிந்த தம் முயற்சியையே கவிஞர் அடுக்கடுக்கான உவமைகளோடு வருணிக்கிறார். பொங்கி வருகிற கடலில் புகுந்து கடலையே அளவெடுக்கப் போனது போலவும், உலகத்திலுள்ள மரங்கள் செடி கொடிகள் இவற்றை எல்லாம் கணக்கெடுக்கப் போனது போலவும், ஒரு தங்கத்தை எடுத்து அதில் விதவிதமான நகைகளைச் செய்ய முயலும் பொற்கொல்லனைப் போலவும், தாம் மிகப்பெரிய முயற்சியில் இறங்கிவிட்டதாகப் பாடுகிறார் கவிஞர். இக்கருத்தை வெளிப்படுத்தும் பாடல் பின்வருமாறு:

    பொங்குமாங் கடலில் புகுந்தள வெடுக்கப்
         போயினேன் வெற்றிபெற் றேனா?
    பூமியின் தருக்கள் செடிகொடி யோடும்
         புல்லினைத் தொகையெடுத் தேனா?
    தங்கமொன் றெடுத்துப் பலவகை நகைகள்
         தட்டயான் நல்லதட் டானா?
    தாய்த்தமிழ் ஆசை வாய்த்தநூற் பற்றுத்
         தந்ததால் துணிந்துவிட் டேனா?

    (பொங்குமாங் கடல் = அலைகள் பொங்கும் கடல்; தருக்கள் = மரங்கள்; தட்டான் = பொன்னால் நகைகள் செய்பவன்; நூற் பற்று = புத்தகத்தின் மேல் கொண்ட விருப்பம்)

    மரியன்னை அழகு

    சிறு சிறு சொற்களால் மரியன்னையின் அழகை இன்னொரு பாடலில் அவர் வருணிக்கிறார். இது தமிழின் சங்கப் பாடல்களை நினைவூட்டுகிறது.

    நிலவெனும் வதனம் நெற்றி
         நெடுமழை அனைய கூந்தல்
    மலரெனும் கண்கள் கைகள்
         மரியம்மை அழகின் தெய்வம்

    (இயேசு காவியம் - 3)

    (வதனம் = முகம்; நெடுமழை = மழை தரும் மேகம்;  அனைய = போன்ற)

    இப்பாடலில் நிலவு போன்ற முகத்தையும், மழை தரும் கார்மேகங்கள் போன்ற கூந்தலையும், மலர்கள் போன்ற கண்களையும் கைகளையும் பெற்றுள்ளதால் மரியன்னை அழகின் தெய்வமாக விளங்குவதாகப் பாடுகிறார்.

    சிலுவைக் காட்சி

    இயேசுவின் சிலுவை குறுக்கும் நெடுக்குமான இரு மரத் துண்டுகளின் இணைப்பு. இது விண்ணகமும் மண்ணகமும் கூடுவது போல அமைந்துள்ளதாகக் கவிஞர் பாடுகிறார். சிலுவையில் இயேசுவின் தலையில் முள் கிரீடத்தை வைத்தார்கள். அப்பொழுது ஒரு கணம் இந்த உலகம் நடுங்கியதாகக் கவிஞர் பாடி உருகுகிறார். அந்த வரிகள் இவை:

    வானகமும் வையகமும் கூடுவதைக் குறிப்பதுபோல்
         சிலுவை வைத்து
    மானமெனும் ஓர்பண்பை மனிதகுலம் காண்பதற்கு
         மனது வைத்து
    தானமொடும் தவம்பெருக முள்ளாலே மகுடத்தைத்
         தலையில் வைத்து
    ஞானமகன் நின்றவுடன் ஞாலமெல்லாம் ஓர்பொழுது
         நடுங்கிற் றம்மா

    (இயேசு காவியம் - 135)

    (தானம் = புண்ணியச் செயல்; ஞாலம் = உலகம்)

    3.5.3 சொல்லாட்சி

    சரியான சொற்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவது நல்ல உரைநடை. சிறந்த சொற்கள் சிறந்த முறையில் அமைவது கவிதை. அவ்வகையில் இக்காப்பியங்களில் மிகச் சிறப்பான சொல்லாட்சிகளை நிறையக் காண முடிகிறது.

    தனித் தமிழ்ச் சொற்கள்

    திருஅவதாரம் ஆசிரியர் பெதும்பை (இளம்பெண்), அருட்பரன் (அருள்தரும் இறைவன்) முதலிய இலக்கிய வழக்குச் சொற்களைக் கையாள்கிறார். வடசொற்கள் பலவற்றையும் தாராளமாகப் பயன்படுத்தும் இவ்வாசிரியர் அருளன் முதலிய தமிழ்ச் சொல் ஆக்கங்களையும் பயன்படுத்துகிறார். அருளப்பர் எனப்படும் யோவான் ஸ்நானகனுக்கு அவர் குறிக்கும் சொல் இது.

    சந்தச் சிறப்பு

    சந்தச் சிறப்பு மிக்க பாடல்கள் பலவும் இக்காப்பியத்தில் அமைந்துள்ளன. சான்றாக ஒரு பாடலைக் காண்போம்:

    வலைதனை விட்டுச் சீமோன்
         வர, பிலவேந் திரன்தன்
    வலைதனை வீசி, அண்ணன்
         வழிவர, மேலும் சேசு
    வலைதனைப் பழுது பார்க்கும்
         வேறிரு வலைஞர் தம்மை
    வலைதனை விட்டென் பின்னே
         வாருங்கள் என்ற ழைத்தார்

    (கலிலேயாப் படலம் -288)

    (சீமோன், பிலவேந்திரன் = இயேசுவின் இரு சீடர்கள் சகோதரர்கள்; வலைஞர் = வலைகளை வீசி மீன் பிடிப்பவர்)

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 13:06:40(இந்திய நேரம்)