தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினையெச்சம் கொண்டுமுடியும் வினைகள்

  • 5.7 வினையெச்சம் கொண்டுமுடியும் வினைகள்

    வினையெச்சம் தம் வினைமுதலின் வினைமுற்றால் முடிவது, தம் வினைமுதல் கொண்டு முடிவது எனப்படும். வேறு ஒரு வினைமுதலுக்கு உரிய முற்றினால் முடிவது, பிற வினைமுதல் கொண்டு முடிவது எனப்படும்.

    எந்தெந்த வாய்பாடுகள் எவ்வெவ்வாறு வினைமுடிவு கொள்ளும் எனக் காண்போம். வினைமுதல் = எழுவாய் அல்லது செயலைச் செய்யும் கருத்தா.

    5.7.1 தம் வினைமுதல் வினைகொண்டு முடிவன

    எச்சத்தில் சொல்லப்படும் செயலுக்கு உரிய எழுவாயே, முற்றுச் சொல்லின் செயலுக்கும் உரிமை உடையதாக வருவது, ‘தம் வினைமுதல் வினைகொண்டு முடிவது’ எனப்படும்.

    (எ.கா)  முருகன் வந்து சென்றான்

    ‘வந்து’ என்னும் எச்சத்திற்குரிய எழுவாய் முருகன். ‘சென்றான்’ என்னும் முற்றுக்குரிய எழுவாயும் முருகனே. எனவே இது தம் வினைமுதல் வினை கொண்டது ஆகும்.

    செய்து, செய்பு, செய்யா, செய்யூ, வான், பான், பாக்கு ஆகியன தம் வினைமுதல் வினைகொண்டு முடிவனவாகும்.

    (எ.கா)

    (1)
    செய்து
    -
    முருகன் கண்டு வந்தான்
    (2)
    செய்பு
    -
    முருகன் காண்குபு வந்தான்
    (3)
    செய்யா
    -
    மழை பெய்யாக் கொடுக்கும்
    (4)
    செய்யூ
    -
    வள்ளி காணூஉ வந்தாள்
    (5)
    வான்
    -
    வள்ளி கொள்வான் வருவாள்
    (6)
    பான்
    -
    வள்ளி கற்பான் வருவாள்
    (7)
    பாக்கு
    -
    செழியன் உண்பாக்கு வருவான்

    • சினை வினையும் முதல் வினையும்

    சினைக்கு உரிய வினையெச்சம், சினைக்கு உரிய வினைமுற்றால் முடிவது இயல்பு. முதலுக்கு உரிய வினைமுற்றால் முடிவதும் உண்டு.

    சினைவினை சினையொடும் முதலொடும் செறியும்

    (நன்னூல் : 345)

    கை ஒடிந்து வீழ்ந்தது - சினைவினை கொண்டது.

    செல்வன் கை ஒடிந்து வீழ்ந்தான் - முதல்வினை கொண்டது.

    5.7.2 தம் வினைமுதல், பிற வினைமுதல் வினை கொள்வன

    செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் ஆகிய வினையெச்ச வாய்பாடுகளும், பின், முன், கால், கடை, வழி, இடத்து என்னும் வினையெச்சச் சொற்களும், தம் வினைமுதல் வினையும் பிற வினைமுதல் வினையும் கொண்டு முடிவனவாகும்.

    (எ.கா)

    (1)
    செய்தென
    -
    மழை பெய்தெனப் புகழ்பெற்றது - தன் வினைமுதல் வினை
    -
    மழை பெய்தென மரம் குழைந்தது - பிற வினைமுதல் வினை
    (2)
    செய
    -
    தான் உண்ண வருகிறான்
    பிறர் உண்ணக் காண்கிறான்
    (3)
    செயின்
    -
    மழை பெய்யின் புகழ்பெறும்
    -
    மழை பெய்யின் குளம் நிறையும்
    (4)
    செய்யிய
    -
    மழை பெய்யிய முழங்கும்
    -
    மழை பெய்யிய வேண்டினர்
    (5)
    செய்யியர்
    -
    மழை பெய்யியர் எழுந்தது
    -
    மழை பெய்யிய வணங்கினர்
    (6)
    பின்
    -
    செழியன் பசித்தபின் உண்டான்
    -
    வண்டி நின்றபின் இறங்கினர்
    (7)
    முன்
    -
    சாத்தன் உண்ணுமுன் வணங்குவான்
    -
    நோய் வருமுன் காப்போம்

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 16:07:26(இந்திய நேரம்)