Primary tabs
-
3.1 கிழக்கிந்தியக் கம்பெனியின் முடிவு
வட இந்தியாவில் கி.பி. 1857இல் சிப்பாய்க் கலகம் என்று வரலாற்று ஆசிரியர்களால் இழித்துக் கூறப்பட்ட கிளர்ச்சி மூண்டெழுந்தது. இதை முதல் சுதந்திரப் போராட்டம் என்று சிலர் கருதுகின்றனர். ஆயிரக்கணக்கான இந்தியரும், நூற்றுக்கணக்கான ஆங்கிலேயரும் அப்போரில் கொல்லப்பட்டனர். ஆங்கிலேய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கிளர்ச்சியை ஒடுக்கிற்று. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் பால்மர்ஸ்டன் (Lord Plamerston) முதல் அமைச்சராக அரசாங்கத்தை மேற்கொண்டார். அவருடைய முயற்சியினால் இந்தியாவில் சீரியதொரு அரசாங்கம் நிறுவும் நோக்கத்துடன் சீர்த்திருத்தச் சட்டம் ஒன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்திய அரசாங்கம் பல புரட்சிகரமான மாறுதல்களுக்கு உள்ளாயிற்று. இதன் காரணமாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.