Primary tabs
3.2 அரசியல் நிலை
கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரி வரையிலும் சட்லெஜ் முதல் பிரம்மபுத்திரா வரையிலும் விரிவடைந்திருந்தது எனச் சென்ற பாடத்தில் படித்தோம். ஆங்கிலேயர் சிறிதுசிறிதாகத் தமது ஆதிக்கத்தை இந்திய நிலப்பரப்பின் மேல் செலுத்த ஆரம்பித்தார்கள் இதற்காக இவ்வாங்கிலேயர்கள் நாடுகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர்.
கிழக்கிந்தியக் கம்பெனியர் பணம் கொடுத்துச் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். சில நேரங்களில் படைபலத்தைக் காண்பித்து நிலப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டனர். கிபி. 19ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் சில பகுதிகள் ஆங்கிலேயரின் நேர்முக ஆட்சிக்குள்ளாகிக் கிடந்தன. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மைசூர், திருவிதாங்கூர் ஆகியவை மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தன. நேர்முக ஆட்சிப் பகுதிகள் அனைத்தையும் இணைத்துச் சென்னை மாகாணம் என்ற தனி மாகாணம் ஒன்று அமைத்தனர். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன.
சென்னை மாகாணத்தின் ஆட்சித் தலைவராக ஏற்கனவே இருந்த கவர்னரே தொடர்ந்து செயல்பட்டு வந்தார். நிலவரி வசூல், நிலங்களின் தரப்பிரிப்பு முதலிய கடமைகளைச் செய்வதற்காக ரெவின்யூ போர்டு (Revenue Board) அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் (Collector) நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும், ஒவ்வொரு வட்டமும் பல குறு வட்டங்களாகவும் அமைக்கப்பட்டன. வட்டத்தின் ஆட்சி வட்டாட்சித் தலைவரிடம் (தாசில்தாரிடம்) ஒப்படைக்கப்பட்டது. ஊர்க்காவல் பொறுப்பும், குற்ற விசாரணைப் பொறுப்பும் முதலில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட்டன.
கி.பி.19ஆம் நூற்றாண்டில் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ளவர்களிடம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மட்டும்தான் வாணிகம் புரியலாம் என்றும், வேறு அன்னியர்கள் இந்திய வாணிகத்தில் ஈடுபடலாகாது என்றும் பிரிட்டிஷார் தடைகள் விதித்து வந்தனராகலின், இந்தியக் குடிமக்களின் தொழில்களும், பொருளாதாரமும் பிரிட்டிஷாரின் விருப்பங்கள், தேவைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கும், பிரிட்டிஷ் அரசின் ஆணைகட்கும் உட்பட்டிருந்தன. அவர்களுடைய ஏகபோக வாணிக உரிமைகள், தமிழ் நாட்டுக் குடிமக்களுக்குப் பல இன்னல்களை விளைவித்தன. நாட்டில் உயர்தரமான பருத்தித் துணிகளும் பட்டுத்துணிகளும் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றைக் கிழக்கிந்தியக் கம்பெனியானது கொள்முதல் செய்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும். குறைந்த விலையிலும், குறைந்த கூலியிலும் தமக்குத் துணிகள் நெய்து கொடுக்கும்படி கம்பெனி வாணிகர்கள் தமிழகத்து நெசவாளருடன் முன் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். பிறகு தமக்குச் சாதகமாக விலைகள் ஏறியவுடன் நெசவாளர்களைத் துணிகளை நெய்து கொடுக்கும்படி அவர்கள் வற்புறுத்துவார்கள். நெசவாளர்கள் மறுப்பாராயின் கம்பெனி வாணிகர்கள் அவர்களை நிற்க வைத்துச் சாட்டையால் அடிப்பதும் உண்டு. இதற்குப் பயந்து நெசவாளர்கள் ஒப்பந்தத்தின்படியே துணிகளை நெய்து கொடுத்துப் பெரும் நஷ்டமும் அடைவார்கள். இக்காரணத்தால் கிராமங்களில் நெசவாளர் குடும்பங்கள் பல முழுகிப் போனதுண்டு. துணி நெய்வது போல் பிற தொழில்களும் நூற்றுக்கணக்கில் நாட்டில் வளமுற்று விளங்கின. கடல் முத்துகள், நறுமணப் பண்டங்கள், சாயச்சரக்குகள், சர்க்கரை, துணி, அபின், கஞ்சா, தேக்கு, ஈட்டி மரம், கருங்காலி, செம்மரம் முதலியன தமிழ் நாட்டில் ஏராளமாக விளைந்தன. இவற்றையும், மேலும் பலவகையான பொருள்களையும் இங்குக் கொள்முதல் செய்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். பொன், செம்பு, துத்தநாகம், வெள்ளீயம், காரீயம் ஆகிய உலோக வகைகளையும், குதிரைகளையும், மது வகைகளையும் அவர்கள் தமிழகத்துக்கு இறக்குமதி செய்தனர். இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதியான சரக்குகளின் மதிப்பைவிட அங்கிருந்து இந்திய நாட்டிற்கு இறக்குமதியான சரக்குகளின் மதிப்புக் குறைவாக இருந்தது. இதனால் இங்கிலாந்தானது இந்தியாவுக்கு என்றுமே கடன்பட்டிருக்க வேண்டியுள்ளது என்று ஆங்கிலேயர் குறைபட்டுக் கொண்டனர்.
நாகரிகம், பண்பாடு, சமயம், மொழி போன்றவற்றால் மாறுபட்டிருந்த ஆங்கிலேயர் இந்தியர்களை அடக்கி ஆண்டு வந்தனர். இதனை இந்தியர்கள் வன்மையாகக் கடிந்து கொள்ளலானார்கள். பிறகு அவ்வப்போது இந்திய அரசியல் அமைப்பில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கி.பி 1861இல் நிறைவேற்றிய சட்டம் ஒன்றின் கீழ்ச் சட்டமும் விதிகளும் இயற்றிக்கொள்ளும் அதிகாரம் சென்னை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது.
ரிப்பன் பிரபு வைஸ்ராயாகப் பணியாற்றியபோது அவர் மேற்கொண்ட
ஒரு தீர்மானத்தின் கீழ் (1883-84) உள்நாட்டுக் குடிமக்களும் நாட்டு அரசாங்கத்தில் பங்கு கொள்ளலாம் என்ற ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை நகரில் மாநகராட்சி ஒன்று நிறுவப்பட்டுப் பல சட்டங்களின் மூலம் அதன் ஆட்சி வரம்பும் பணிகளும் விரிவாகிக் கொண்டே வந்தன.
சென்னை மாகாணத்துக்குத் தனி உயர் நீதிமன்றம் ஒன்று கி.பி. 1862, 1865ஆம் ஆண்டுப் பட்டயங்களின்படி அமைக்கப்பட்டது. தலைமை நீதிமன்றம் (Supreme Court) சிறிதுகாலம் உயர்நீதி மன்றத்தின் ஒரு பிரிவாகவே செயல்பட்டு வந்தது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
6.சென்னை அரசாங்கத்திற்குப் பிரிட்டிஷ் பாராளுமன்றம் சட்டம் இயற்றிக் கொள்ளும் அதிகாரத்தை எப்போது கொடுத்தது?