Primary tabs
-
3.3 கி.பி. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள்
சென்னையில் இப்போதுள்ள துறைமுகமானது கி.பி. 1876-81ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அதன் ஆழம் சுமார் 37அடி; பரப்பு 200ஏக்கர். பகலிலும், இரவிலும் எப்போதும் கப்பல்கள் உள்ளே நுழையுமாறு இச்செயற்கைத் துறைமுகம் அமைக்கப்பட்டது.
முதன்முதல் சென்னையில்தான் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. பிறகு இக்கணக்கெடுப்பு ஏனைய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
19ஆம் நூற்றாண்டில் பஞ்சமும், ஏழ்மையும் ஏற்பட்டன. இவற்றினால் வாடிய தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இலங்கைக்கும், பிஜி முதலான கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் தொழில் செய்து பிழைக்கச் சென்றார்கள். அந்நாடுகளில் தேயிலை, காப்பி, இரப்பர்த் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் இவர்கள் கூலிகளாகச் சேர்ந்தனர். இந்தியக் கூலிகள் சென்ற இடங்களில் எல்லாம் விலங்குகளினும் இழிவாகவும், அடிமைகளை விடக் கொடுமையாகவும் நடத்தப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அரசாங்கம் அவர்களைக் “காட்டு மிராண்டிகளான இந்த ஆசிய நாட்டு மக்கள், இந்தியாவின் அநாகரிகக் குடிகள்” என்று ஆவணங்களில் பதிவு செய்தது.
ஆங்கிலக் கல்வியினால் விழிப்புண்ட இந்தியர் தம் நாட்டை ஆங்கிலேயரின் தலைமையினின்றும் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாயினர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அமெரிக்காவானது போராடிச் சுதந்திரம் பெற்றது. மேலும் பிரிட்டிஷார் கனடா, ஆஸ்திரேலியா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும் விடுதலை வழங்கினர். இதனால் இந்திய மக்களுக்கு விடுதலை அடைய வேண்டும் என்ற சுதந்திர வேட்கை ஏற்பட்டது. இதன் காரணமாகக் கல்கத்தாவில் கி.பி. 1885ஆம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் இந்நிறுவனத்தில் வெறும் 70 உறுப்பினரே சேர்ந்து இருந்தனர். அதன் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது.