Primary tabs
-
6.1 தமிழகத்தின் நிலப்பரப்பு
தமிழகம், ஆந்திரம், மலையாள மாவட்டங்களில் இரண்டு, தென் கன்னட மாவட்டங்கள், ஒரிஸ்ஸாவின் சிறுபகுதி ஆகியவை அடங்கிய ஒரு பெரும் நிலப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநிலம் என்று அழைக்கப்பட்டது.
பல மொழி பேசும் பகுதிகளும் இணைந்து ஒரு மாநிலமாக அமைந்திருந்த காரணத்தால், ஆட்சிப் பொறுப்புகளில் தமக்குரிய பங்கு கிடைக்கவில்லை என ஒவ்வொரு பகுதியினரும் வருந்திக் கொண்டிருந்தனர். எனவே, ஆந்திர தேசத்தைச் சேர்ந்த மக்கள் தனி மாநிலம் வேண்டும் என்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாகக் கி.பி. 1953இல் ஆந்திரம் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமாக அமைந்தது.
மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைப்பதற்கான திட்டம் ஒன்றை வகுப்பதற்காக ஆசப் அலி தலைமையில் கி.பி. 1953இல் ஓர் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையைக் கொடுத்தது. இதன்படி 1956ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் மாநில மறுசீரமைப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அச்சட்டத்தின்படி கேரள மாநிலம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. சென்னை மாநிலத்திலிருந்து வட மலையாள, தென் மலையாள மாவட்டங்கள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. ஆந்திரம், கேரளம் முதலியன பிரிந்த பிறகு எஞ்சிய தமிழ்ப் பகுதி பழையபடி சென்னை மாநிலம் என்றே அழைக்கப்பட்டது.
திருவாங்கூர் – கொச்சியைச் சேர்ந்திருந்த அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு முழுத் தாலுக்காக்களும், செங்கோட்டையின் பெரும் பகுதியும் தமிழகத்துடன் இணைந்தன. தென்கன்னட மாவட்டத்தின் காசர்கோடு தாலுக்காவும், வடமலையாள மாவட்டங்களும் கேரளத்துடன் இணைந்தன. தென்கன்னடத்தின் எஞ்சிய பகுதியும், கோவை மாவட்டத்துக் கொள்ளேகால் தாலுக்காவும் மைசூர் மாநிலத்தைச் சேர்ந்தன. செங்கற்பட்டு, சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 845 ச.கி.மீ. நிலம் ஆந்திரத்திற்கு அளிக்கப்பட்டது.
இவ்வாறு மாநிலங்கள் பிரித்து அமைக்கப்பட்டவுடன் தமிழ் பேசும் பகுதியைத் தமிழில் சென்னை மாகாணம் என்றும், ஆங்கிலத்தில் Madras State என்றும் குறிப்பிட்டனர் (மாகாணம் – மாநிலம்). பின்பு 1967ஆம் ஆண்டில் முதல் அமைச்சராகப் பதவியேற்ற சி.என். அண்ணாதுரை அவர்கள் சென்னை மாகாணம் என்றிருந்ததை அழகு தமிழில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். ஆங்கிலத்திலும் அவ்வாறே ஒலிப்புடன் குறிப்பிடப்பட்டது.
தமிழ்நாட்டின் தலைநகரமாகச் சென்னையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.