Primary tabs
-
6.2 தமிழகத்தை ஆண்டவர்கள்
இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு இன்று 2011 வரை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குப் பதின்மூன்று பொதுத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய கட்சியானது ஆட்சி நடத்தியது. தமிழ்நாடு மாநிலத்திற்கு இதுவரை (2011 வரை) நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஓரிரு முறை தவிரப் பெரும்பாலும் ஒரு கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்து வந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று (2011) வரை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக மொத்தம் பதினொருவர் பணியாற்றியுள்ளனர். அவர்களைப் பற்றியும், அவர்கள் தங்கள் ஆட்சியின்போது ஆற்றிய அருஞ்செயல்கள் பற்றியும், அருந்தொண்டுகள் பற்றியும் இங்கே காண்போம்.
6.2.1 ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார் (1947-1949)
இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூர். பி. இராமசாமி ரெட்டியார் ஆவார். இவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், அனைத்து இந்துக்களும் ஆலயத்தில் வழிபடும் உரிமைச்சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவர் மார்ச் 1949 வரை முதல்வராகப் பணியாற்றினார்.
6.2.2 பி.எஸ்.குமாரசாமி ராஜா (1949 – 1952)
1949ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கவுன்சிலுக்குத் தேர்தல் நடந்தது.
இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெறும்வரை அதாவது 1952ஆம் ஆண்டு மார்ச் வரை இவரே சென்னை மாகாண முதல்வராகப் பணி புரிந்து வந்தார்.
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபிறகு இந்திய நாடாளுமன்றத்திற்கும், மாநிலச் சட்டமன்றங்களுக்கும் 1952இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்துக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காதபோதும், பல கட்சிகளின் ஆதரவுடன் இராஜாஜி 10-04-1952இல் சென்னை மாகாண முதல்வராகப் பதவியேற்றார். இவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றி, அதன் மூலம் விவசாயத் தொழிலாளர்க்கு நலன் விளைவித்தார். இருப்பினும் இவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் என்னும் புதிய கல்வித் திட்டம் பெருங்கொந்தளிப்பை மக்களிடையே தோற்றுவித்தது. இதனால் இவர் 25-03-1954இல் முதல்வர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார்.
இராஜாஜியைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தின் முதல்வராக மார்ச் 1954இல் கு. காமராசர் பதவியேற்றார். அதன்பின் குடியாத்தம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டசபை உறுப்பினரானார். இவர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றினார். 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் இவரது தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இலவசக் கல்வி, மதிய உணவுத் திட்டம், வைகை அணை, மணிமுத்தாறு அணை, சாத்தனூர் அணை, குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை. மேலும் மத்திய அரசிடம் வாதாடி நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், பெரம்பூர் இணைப்புப் பெட்டித் (ரயில்பெட்டி) தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டு வந்தார். இவர் பெருந்தலைவர் காமராசர், கருமவீரர் காமராசர் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்தவராக விளங்கினார்.
மூத்தவர்கள் பதவி விலகிக் கட்சிப் பணியாற்ற வேண்டும், புதியவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு வழி விட வேண்டும் என்ற புதிய திட்டம் கொண்டு வந்தார். இத்திட்டத்திற்குக் காமராசர் திட்டம் (Kamaraj Plan) என்று பெயர். இத்திட்டப்படி முதல் அமைச்சர் பதவியிலிருந்து காமராசர் 1963இல் விலகினார்.
6.2.5 மீ. பக்தவத்சலம் (1963 – 1967)
காமராசர் பதவியிலிருந்து விலகிய பின்பு, கி.பி. 1963இல் பக்தவத்சலம் முதல்வரானார். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரம் அடைந்தது. மாணவர்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர் 1963 முதல் 1967 வரை ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகக் கல்லூரிகளில் தமிழ் வழி கற்க வழிவகை செய்யப்பட்டது. அதை ஊக்குவிக்கும் பொருட்டுத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் நிறுவப்பட்டு, அதன் வாயிலாகக் கல்லூரிப் பாட நூல்கள் தமிழாக்கம் செய்யப்பெற்றன.
6.2.6 சி.என். அண்ணாதுரை (1967-1969)
1967ஆம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கு நான்காவது பொதுத்தேர்தல்
நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. சி.என். அண்ணாதுரை அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்தார். சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்தத் திருமணச் சட்டத்தை இயற்றினார். தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார். சென்னையிலும், கோவையிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கி ஏழை எளியோரின் வறுமை அகல முயற்சி செய்தார். இரண்டாது உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தினார். இவை இவரது ஆட்சியின் அருஞ்சாதனைகள் ஆகும். இவர் அண்ணா என்றும், அறிஞர் அண்ணா என்றும் அழைக்கப்படும் பெருமை உடையவர். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா காலமானார்.
கலைஞர் என்று சிறப்புடன் அழைக்கப்படும் பெருமை வாய்ந்த இவர் அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு 1969இல் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று 1969-1971, 1971-1976, 1989-1990, 1996-2001, 2006-2011 என ஐந்து முறை தமிழக முதல்வராகக் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி செய்துள்ளார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்குச்
சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித் திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்சா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வு, இலவசக் கண்ணொளித் திட்டம், பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, பேருந்துகளை நாட்டுடைமையாக்கல், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல், குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருதல், சமச்சீர் கல்வி உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக் காலத்துச் சாதனைகள் ஆகும்.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், பூம்புகாரில் உள்ள கலைக்கூடம், குமரியில் 133அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை இவர் புகழ்பாடும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும். இவர் 2010ஆம் ஆண்டில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார்.
6.2.8 எம்.ஜி. இராமச்சந்திரன் (1977-1987)
மக்கள் திலகம் என்றும், எம்.ஜி.ஆர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் பெருமை வாய்ந்த இவர், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, தன்னுடைய தலைமையில் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து, இயற்கை எய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர்.
இவர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அதனைத் திறம்படச் செயல்படுத்தினார். மேலும் மாணவர்களுக்கு இலவச உடை, காலணி, முதியோர்களுக்கு இலவச உடை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். இவர் காலத்தில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குடிசைகளில் வாழ்பவர்க்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்க ஏற்பாடு செய்தார். தந்தை பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தம் இவர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்களின் துயர்துடைக்க மத்திய அரசோடு இணைந்து செயலாற்றினார். இவர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் மறைந்தார். இவர் காலத்தில் தொழில்நுட்பக் கல்லூரிகள் பல உருவாக்கப்பட்டன. இவர் 1981ஆம் ஆண்டில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். மேலும் இவர் இதே ஆண்டில் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர் அவருடைய துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களால் அக்கட்சி இரண்டாக உடைந்தது. எனவே இவரால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே இவரது ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றாக இணைந்தன.
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, செல்வி. ஜெ. ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-1996, 2001-2006 என ஏற்கெனவே இரு முறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று 2011 முதல் முதல்வராக இருந்து ஆட்சி புரிந்து வருகிறார்.
இவர் தம்முடைய இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இடையில் சட்டச் சிக்கல் காரணமாக பதவி விலக நேர்ந்தது. எனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.
அனைத்து மகளிர் காவல் நிலையம், கோயில்களில் அன்னதானம், தொட்டில் குழந்தை திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம், லாட்டரிச் சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர்த் திட்டம், கந்துவட்டி ஒழிப்பு, சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்றவை இவரது ஆட்சியின் அரிய சாதனைகளாகும். இவர் 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரில் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
11.கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை யாருடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது?