தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பொருளாதார வளர்ச்சி

  • 6.3 பொருளாதார வளர்ச்சி

    நம் நாட்டில் இருந்து வந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டுச் சுதந்திர இந்தியாவில் இதுவரை பதினோர் ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதன் பயனாக விடுதலைக்குப் பின் தமிழகத்தில் வேளாண்மையிலும், கனரகத் தொழில்களிலும் வளர்ச்சி காணப்படலாயிற்று. மேலும் மத்திய அரசு நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன. இவைகளைத் தவிர மின்உற்பத்தி, போக்குவரத்து போன்ற துறைகள் நன்கு வளர்ச்சியுடன் காணப்பட்டன.

    6.3.1 வேளாண்மை வளர்ச்சி

    வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகவும், இந்திய மக்களின் முதன்மைத் தொழிலாகவும் விளங்குகிறது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் திட்டங்களுக்கு ரூ.9.37 கோடியும், இரண்டாவது திட்ட காலத்தில் ரூ.51.02 கோடியும், மூன்றாவது திட்டகாலத்தில் ரூ.57.20 கோடியும், நான்காவது திட்ட காலத்தில் ரூ.93.48 கோடியும் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் வேளாண்மையைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒன்றேபோல் உள்ள சூழ்நிலை இல்லை. மழையை நம்பியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உள்ளன. மரபு வழிப்பட்ட வேளாண்மையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மற்றும் கூட்டுப் பண்ணை வேளாண்மை போன்ற முறைகள் பின்பற்றப்படவில்லை.

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தஞ்சை, திருச்சி, நெல்லை முதலிய பகுதிகள் வேளாண்மையில் சிறப்புடன் விளங்குகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள வேறு சில பகுதிகள் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்டே உள்ளன. அதே சமயத்தில், இந்தியா விடுதலை அடைந்தபிறகு, பவானிசாகர் அணை (1956), அமராவதி அணை (1957), மணிமுத்தாறு அணை (1958), சாத்தனூர் அணை (1958), பெருஞ்சாணி அணை (1958) வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962), சேர்வலாறு அணை (1985) போன்ற பெரிய அணைக்கட்டுகள் தமிழகத்தில் கட்டப்பட்டன.

    முதலில் நில உச்சவரம்பு கொண்டு வந்தபோது ஒவ்வொருவரும் அதிகப்பட்சமாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டது. ஆயினும் இது போதிய பலன் அளிக்கவில்லை. எனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அது 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.

    சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற விளைபொருட்களில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சுமார் 1971க்குள்ளாகவே உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்பட்டது. உணவுப் பொருள் விலையேற்றம் ஏற்பட்ட போதிலும் அவற்றை வாங்கும் சக்தி பெருகியது. இதனால் இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் விளங்கலாயிற்று.

    6.3.2 தொழில் வளர்ச்சி

    வேளாண்மை முதன்மைத் தொழிலாக விளங்கிய போதிலும், அதில் மிக அதிகமான மக்கள் (63%) ஈடுபட்ட போதிலும் குறைந்த விழுக்காடு (15%) மக்களே வேளாண்மை அல்லாத பிற தொழில்களில் ஈடுப்பட்டிருந்தனர். அத்தொழில்களைக் கனரகத் தொழில்கள், சிறுதொழில்கள், நடுத்தரத் தொழில்கள் என்று பிரிக்கலாம்.

    நெசவு ஆலைகளே பெருந்தொழில் கூடமாக விளங்கி வந்த நிலை மாறி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள் பெருகின. மத்திய, மாநில அரசுகள் இவற்றைவிடப் பெரிய தொழில்களாகத் துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை என்று புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.

    சிறு தொழில்கள் ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன. தொழில் வளர்ச்சியில் தொழில் பேட்டைகள், அரசு நிதி உதவி நிறுவனங்கள், புதிய நகர அமைப்புகள் குறிப்பிடத்தக்கன. அம்பத்தூர், கிண்டி, இராணிப்பேட்டை, கப்பலூர், அரக்கோணம், மார்த்தாண்டம், திருச்சி, காரைக்குடி, ஓசூர் முதலிய இடங்களில் உருவான தொழில் பேட்டைகள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் அம்பத்தூரும் கிண்டியும் மிகவும் பெரியன.

    பஞ்சாலைத் தொழில் கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்குகிறது. மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலும் பஞ்சாலைகள் உள்ளன. கூட்டுறவு நூற்பாலைகள் பல தோன்றியுள்ளன. சர்க்கரை உற்பத்தியும் புதிய வேளாண்மை முறைகளின் விளைவாகப் பெருகியுள்ளது. கரும்பு ஆலைத் தொழில் கிராமப்புற முன்னேற்றத்திற்குச் சாலைவசதி, மின்வசதி, வேலைவாய்ப்பு அளிப்பது ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது.

    டால்மியாபுரம், தாழையூத்து, துலுக்கப்பட்டி, சங்ககிரி துர்க்கம் போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 1976இல் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஏற்பட்டது.

    போக்குவரத்து ஊர்திகள், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அசோக் லேலாண்டு, ஸ்டாண்டர்டு மோட்டர்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கன.

    தோல் தொழிலைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்பட்டன. முதன்முதலில் 1964இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் தோல் தொழில் வளர்ச்சிக்கு என முதல் தொழில்பேட்டை உருவாயிற்று.

    6.3.3 மத்திய அரசு நிறுவனங்கள்

    சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவற்றுள் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், பாரத கனரகத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உரத்தொழிற்சாலை, எண்ணூர், சேலம் போன்ற இடங்களில் எஃகு தொழிற்சாலை, பாய்லர் துணைத் தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

    6.3.4 மின்உற்பத்தி

    தொழில் வளர்ச்சிக்கு மின்வசதி இன்றியமையாதது. சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் 1947இல் பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் முதலியன உருவாயின. 1957இல் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பட்டது.

    இவைகளைத் தொடர்ந்து கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.

    6.3.5 போக்குவரத்து

    சாலைப் போக்குவரத்து பெருத்த முன்னேற்றம் அடைந்துள்ளது. 1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம் தொடங்கி 1948இல் முடிவுற்றது. 1972இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாயிற்று. அதன்பின் பல புதிய போக்குவரத்துக் கழகங்கள் உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.

    புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்தியா விடுதலை அடைந்த பின்பு நெல்லை-நாகர்கோயில் இடையேயும், திண்டுக்கல்-கரூர் இடையேயும், சேலம்-தருமபுரி-பெங்களூரு இடையேயும் புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன. இதனால் புகைவண்டியில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாயிற்று.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:49:48(இந்திய நேரம்)