Primary tabs
-
6.5 இலக்கிய வளர்ச்சி
சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் இலக்கிய வளர்ச்சி அசுரவேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்மொழியில் உரைநடை நூல்களும், செய்யுள் நூல்களும் பெருகியுள்ளன. சிறுகதை, நாவல் ஆகியன உலகத்தின் எந்த மொழியோடும் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பு இலக்கியங்களும் விஞ்ஞான இலக்கியங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை விடப் பொதுமக்களும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளும் அளவுக்குச் சங்க நூல்களுக்கு உரைவேந்தர் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் போன்றோர் உரை எழுதியுள்ளனர்.
மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கம் என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் தமிழ் மொழியின் தூய்மையைப் பேணிப் பாதுகாத்து வந்தார். இவருக்குத் துணையாக நின்று தனித்தமிழ் வளர்ப்பதில் முனைந்து நின்றவர் ஞா.தேவநேயப் பாவாணர் ஆவார். இவர் கட்டுரை, உரைநூல், ஆராய்ச்சி நூல், மொழியியல் நூல் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் திகழ்வதால் அலுவலகங்களில் குறிப்புகளும், வரைவுகளும் தமிழில் எழுதப்பட ஊக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் கலைக்களஞ்சியம் – பத்துத் தொகுதிகளும், குழந்தைகள் கலைக்களஞ்சியம் – பத்துத் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்த் தட்டச்சு, தமிழ்ச் சுருக்கெழுத்து ஆகியவற்றின் தேவை வளர்ந்து வருவதால் தமிழ்த் தட்டச்சுப் பொறிகளும், தமிழ்ச் சுருக்கெழுத்து நூல்களும் வெளிவர ஊக்கம் அளிக்கப்படுகின்றது. ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இந்திய மொழிகளுள்ளே முதன்முதலாகத் தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி ஒன்று அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும், தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தும் வெளியிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்கி என்னும் புனைபெயரில் எழுதிய ரா.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலையோசை, கள்வனின் காதலி, தியாக பூமி போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதினார்.
கல்கியைப் போல மு.வரதராசனார் சிறந்த நாவல் ஆசிரியராக விளங்கினார். இவர் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியதுபோல் சமூகச் சீர்திருத்த நோக்கத்திற்காகவும் நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களில் திருக்குறள் தெளிவுரை, மொழி வரலாறு இரண்டும் பெயர் பெற்று விளங்குகின்றன.
சிறுகதை மன்னர் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் பல சிறுகதைகள் எழுதினார். மற்றும் விந்தன், ஜெயகாந்தன், சு.சமுத்திரம், போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதை எழுதித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவினர். மேலும் அண்ணா என்று அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர் தமிழில் பல நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர்.
இவ்வாறாகத் தமிழகம் சுதந்திரத்திற்குப் பின் இலக்கிய வளர்ச்சியில் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.