தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியம், இலக்கணம், சாத்திரம்

  • 3.1 இலக்கியம், இலக்கணம், சாத்திரம்

    இலக்கியம் என்ற நிலையில் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி.1150-1200) ஒட்டக்கூத்தர் மற்றும் ஒளவையாரின் பங்களிப்பு அதிகம். திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம் போன்றவையும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும். இலக்கிய உரை என்ற நிலையில் அடியார்க்கு நல்லார் உரை இக்காலத்தைச் சேர்ந்ததாகும்.

    3.1.1 ஒட்டக்கூத்தர் படைப்புகள்

    இவர் பாடிய நூல்கள் பலவாயினும் கிடைப்பவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இவரது இயற்பெயர் கூத்தர். இப்பெயர் சிவபெருமானுக்குரியதாகும். தமிழ் இலக்கண இலக்கியப் புலமையுடன் வடமொழிப் புலமையும் உடையவர். இவர் கூத்தனூரில் கலைமகளுக்குக் கட்டிய கோயில் இன்றும் உள்ளது. தமிழ் நாட்டில் இங்கு மட்டுமே கலைமகளுக்குக் கோயில் உள்ளது. ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ என்பர். இவரது நூல்களில் கிடைக்கின்ற நூல்கள் மூவருலா (விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா), குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் ஆகியவையாகும்.

    • விக்கிரமசோழன் உலா

    சோழர் குலப் பெருமை, தலைவன் பெருமை, பள்ளியெழுதல், தலைவன் நீராடி அலங்கரித்துக் கொள்ளுதல், யானைமீது வருதல், யானையின் வீரச் செயல்கள் உட்படப் பல செய்திகளைக் கொண்டுள்ளது. விக்கிரமனை அவர் புகழ்வதைக் கேளுங்கள்:

    மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்
    கூடற்கும் கோழிக்கும் கோமானே

    (காவிரிப் பூம்பட்டினத்துக்கும், வஞ்சி நகருக்கும் காஞ்சி மாநகருக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் தலைவனே - என்பது  இதன் பொருள்)

    குலப்பெருமை அல்லது பாரம்பரியம் கூறும் பகுதியில் இவ்வுலகில் முறையாக அனைவரையும் (பிரமன், காசிபன் தொடங்கி விக்கிரமன் வரை) குறிப்பிட்டுள்ளார். இதில் பராந்தகன் தொடங்கி விக்கிரமன் வரையில் குறிப்பிட்ட அரசர்கள் ஒருவர்பின் ஒருவராய் முறையாக அரசாண்டவர்கள் ஆவர். கல்வெட்டுகள் வாயிலாகவும் இதற்குத் தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

    • குலோத்துங்க சோழன் உலா

    இது, இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாவது சிறப்பான நூலாகும். தொடக்கத்தில் குலப்பெருமை சொல்லப்பட்டுள்ளது. இராமானுசர் வரலாற்றில் குலோத்துங்க சோழன் அவருக்குத் தொல்லை கொடுத்ததாகவும், தில்லையில் எழுந்தருளியிருந்த பெருமாளைக் கடலில் தூக்கி எறிந்தான் என்றும் சில வரலாறுகள் கூறும். இவ்வுலாவில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. பின்னாளில் இம் மன்னனின் மகன் கடலிலிருந்து திருமாலைக் கொண்டுவந்து மீண்டும் தில்லையில் பிரதிட்டை செய்வித்ததாகக் கூறுவர். மூவர் உலாக்களில் இவ்வுலாவின் சிறப்பு எனப் பார்த்தால் அதற்கு எழுந்த பழைய உரையைக் கூறலாம்.

    • இராசராசன் உலா

    இது, ஒட்டக்கூத்தர் பாடிய மூன்றாவது உலாவாகும். பிரமன் தொடங்கி இரண்டாம் இராசராசன் வரை உள்ள வரலாறுகளில், மார்பில் 96 புண் கொண்ட மன்னன் முதல் இப்பாட்டுடைத்தலைவன் வரையுள்ள அரசர்கள் முறை பிறழ்ச்சி இன்றிச் சொல்லப்பட்டுள்ளனர். இவ்வுலாவிற்கு, இம்மன்னன் கண்ணி தோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகச் சங்கர சோழனுலா கூறுகிறது. (உலாவில், இரண்டு அடிகளைக் கொண்டது கண்ணி என்று கூறுவார்கள்) தில்லையை இராசராசன் உலா ஆசிரியர் மிகவும் உருக்கமாய்ப் பாடுவதைக் கேளுங்கள்

    . . . . . . . . . . . பார்த்திபர்தம்
    தொல்லைத் திருமரபுக்கெல்லாம் தொழுகுலமாம்
    தில்லைத் திருநடனம் சிந்தித்து

    (பார்த்திபர் = அரசர்)

    • தக்கயாகப்பரணி

    ஒட்டக்கூத்தர் எழுதிய மற்றொரு நூல் தக்கயாகப்பரணி. இதுவும் இராசராசனைச் சிறப்பித்து எழுதப்பட்டது. பண்டைய பரணி நூல்களில் கலிங்கத்துப்பரணிக்கு அடுத்த பழமையும் சிறப்பும் உடையது இந்நூல். கலிங்கத்துப்பரணி உண்மையான ஒரு போர் நிகழ்ச்சியைக் குறித்துப் பாடப்பெற்ற நூல், தக்கயாகப்பரணி, இதிகாச வரலாற்றைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்றது. தக்கனும் அவனுடைய யாகமும் அழிக்கப்பட்ட செய்தியை மையமாக வைத்துப் பாடப்பட்டது. இது சிறந்த இலக்கியச் சுவையுடையது. சந்தப் பொலிவுக்காக எல்லாப் பாடல்களிலும் வடமொழிச்சொற்களும் சந்திகளும் வந்துள்ளன. எளிதாக உள்ள ஒரு பாடலைக் கேளுங்கள்.

    சிரமும் சிரமும் சொரிந்தன. சரமும் சரமும் தறிப்பவே
    கனமும் கனமும் கனைத்தன. சினமும் சினமும் சிறக்கவே

    (சிரம் = தலை; சரம் = அம்பு; தறிப்ப = அறுக்க; கனம் = குதிரை; சினம் = கோபம்)

    இந்நூலுக்குப் பழமையான உரை ஒன்று உண்டு. அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

    • உத்தரகாண்டம்

    இராமர் பட்டம் சூட்டிக் கொள்வதுடன் இராமாயணம் முடிவுறும். அதன் பின்பு நடந்த செய்திகளைக் கூறுவது உத்தர ராமாயணம். இது, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதாகக் கூறுவர். இவர் உத்தர ராமாயணத்தைக் காவியமாகப் பாடினார். சமய நூலாகப் பாடவில்லை. இந்நூலில் படலப் பாகுபாடும், பாடல் தொகுதியும் கம்பராமாயணம் போல ஏட்டுக்கு ஏடு வேறுபடுகிறது. நூன்முகப்பில் உள்ள காப்புச் செய்யுள் இராமாவதாரத்துக்கு விளக்கம் கூறுவதாக உள்ளது. உத்தர ராமாயணம் குறித்து வடமொழிவாணர் கூறும் கருத்தை நோக்குவோம்:

    இராமாயணம் இதிகாசம். உத்தர ராமாயணம் புராணம். இதிகாசத்தில் பல வரலாறுகள் காரண காரியத்தோடு சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றுள் பல உத்தர ராமாயணத்துள் விளக்கப்பட்டுள்ளன.

    3.1.2 ஒளவையார் படைப்புகள்

    ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர். வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளனர். வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர். சிறப்பான நூல்கள் அல்லது பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.

    1.

    சங்க கால ஒளவையார்

    2.

    பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.

    3.

    சோழர் கால ஒளவையார்

    4.

    14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்

    5.

    தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.

     

    இக்காலப் பாடப் பகுதியில் நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். இவர் எங்கே பிறந்தார் என்பது தெரியவில்லை. இவர் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடிய நாலு கோடிப்பாடல்கள் குறிப்பிடதக்கவையாகும். சோழ மன்னன் தம் புலவரை அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார். புலவர்கள் எப்படிப் பாடுவது என அஞ்சினர். ஒளவையார், சிறப்பான பண்பு ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம் எனப் பொருள் படும்படியாகப் பாடிப் புலவர்களிடம் தந்தார். பாட்டின் சுவையறிந்த அரசனும் பாடியவர் ஒளவையாரே என உணர்ந்து அவருக்குச் சிறப்பும் செய்தான். அந்த நான்கு பாடல்களில் ஒரு பாடல் இதோ:

    மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
    மிதியாமை கோடி யுறும்

    (மதியாதார் = மதிப்புத் தராதவர்)

    குலோத்துங்கசோழன் முடிசூடியபோது ‘வரப்புயர’ எனச் சொல்லி, ஒளவையார் அமர்ந்துவிட்டார். கேட்டோர் சமாதானம் அடையாத நிலையில் இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.

    வரப்புயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயரக் குடி உயரும்
    குடி உயரக் கோல் உயரும்
    கோல் உயரக் கோன் உயர்வான்

    (குடி = குடிமக்கள், கோல் = செங்கோல், கோன் = அரசன்)

    இது அவர் உழவுத் தொழில் நுட்பத்தை உணர்ந்தவர் என்பதை நன்கு உணர்த்தும்.

    3.1.3 சாத்திர நூல்கள்

    சாத்திரம் தோத்திரம் வேறுபாடு குறித்து முந்தைய பாடப்பகுதியில் விளக்கப்பட்டது. சாத்திர நூல்கள் பல இக்காலப் பகுதியில் தோன்றியுள்ளன.

    • திருக்களிற்றுப் படியார்

    சாத்திர நூல்களுள் முதலிடம் பெறுவது திருக்களிற்றுப் படியார் ஆகும். இது 100 வெண்பாக்களை உடையது. இந்நூலை எழுதியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். இதில் வரும் பாடல்கள் திருவுந்தியார்ப் பாடல் தொடர்களை எடுத்து விரித்துக் கூறுகின்றன. அதன் கருத்தை விளக்கும் வகையில் அமைந்து உள்ளன. விளக்கம் கூறுமிடத்து, திருக்குறள் வரிகளையும் திருவாசக வரிகளையும் அமைத்து ஆசிரியர் பாடுகிறார். இவர் குறிப்பிடும் நாயன்மார் வரலாறுகள் அப்பர், கோட்புலி, சம்பந்தர், சிறுத்தொண்டர், சுந்தரர், திருக்குறிப்புத் தொண்டர், மங்கையர்க்கரசி, மூர்க்கர், மூர்த்தி முதலியவர்களுடையவை. திருவாதவூரடிகளையும் சேந்தனாரையும் இவர் குறிப்பிடுகின்றார்.

    இறைவனின் பற்றற்ற தன்மை (பாடல் எண்.87), சிவபெருமானின் பொது இயல்பு (88), இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும்முறை (90) உட்படப் பலவற்றை நூலாசிரியர் நன்கு விளக்குகின்றார்.

    திருவுந்தியாருக்குச் செய்யுள் வடிவில் அமைந்த உரையாகத் திருக்களிற்றுப்படியார் அமைந்துள்ளது. இந்நூலை எழுதியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்.

    • ஞானாமிர்தம்

    இது, இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு சாத்திர நூல். இதனை எழுதியவர் வாகீச முனிவர். இந்நூல் காலத்தால் மெய்கண்டாருக்கு முந்தியதென்று கூறுவர். இதிலுள்ள சமயக் கருத்துகள் தமிழ்நாட்டினருக்கே உரிய பழமையான சைவக் கருத்துகள் எனலாம். நூலின் நடை கல்லாடம் போலப் பழமையான நடையாகும். இந்நூலில் சங்க நூல்களின் சொற்களும், தொடர்களும் அப்படியே காணப்படுகின்றன. ஆசிரியர் புராண, இதிகாசங்களில் நிறைந்த ஈடுபாடு உடையவர். வினையின் வகைகள், தீ வினை முதலியன பற்றிக் கூறும் போது இதிகாச வரலாறுகளை எடுத்துரைக்கின்றார்.

    நூலாசிரியர் தாம் கூற எடுத்துக் கொண்ட பொருள் ஒவ்வொன்றையும் விரிவாகக் கூறுகின்றார். உதாரணமாக, பதி இலக்கணம் கூறும் பாடலில் (பாடல் எண் 55) அவர் சொல்லும் கருத்து முந்தைய நூல்களைத் தழுவியும், வரும் பாடலுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. பல பாடல்கள் வினாவும் விடையுமாக உள்ளன. சைவ சித்தாந்தத்திற்குச் சிறந்த பிரமாண (அடிப்படை) நூலாக இந்த நூல் கொள்ளப்பட்டது.

    அஞ்ஞானமாகிய கடலில் ஆகமங்கள் என்னும் மத்தை நாட்டிக் குருநாதரின் உபதேசம் என்னும் கயிற்றால், புத்தி என்னும் கையைக் கொண்டு கடையும்போது ஞானம் ஆகிய அமிர்தம் வெளிப்படும். எனவே இது ஞானாமிர்தம் எனப்பட்டது.

    மெய்கண்டார் காலத்திற்கு (13ஆம் நூற்றாண்டு) முன் கீழ்க்காணும் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் தோன்றியுள்ளன.

    திருவுந்தியார்
    ஞானாமிர்தம்
    திருக்களிற்றுப்படியார்

    திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும் பதினான்கு சைவ சித்தாந்த சாத்திரங்களுள் சேர்க்கப்பட்டுள்ளன. ஞானாமிர்தம் அந்தப் பதினான்கனுள் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணம் ஆராய்ச்சிக்குரியதாகும். திருவுந்தியார் பற்றி 12ஆம் நூற்றாண்டு முதற்பகுதி பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

    3.1.4 இலக்கணம்

    நேமிநாதம், வச்சணந்தி மாலை போன்ற சிறந்த இலக்கண நூல்கள் தோன்றின.

    • நேமிநாதம்

    இச் சிறிய இலக்கண நூல் இக்காலப் பகுதியில் தோன்றியது. 97 வெண்பாக்களைக் கொண்டது. இது, எழுத்து, சொல் என்ற இரு அதிகாரங்களைக் கொண்டது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுப்பு இன்றி இரண்டையே எடுத்துக் கொண்டு சுருக்கமாக அமைந்தமையால் இதற்குச் சின்னூல் என்ற பெயரும் உண்டு. நேமிநாதம் சின்னூல் என்ற பெயரால் வழங்கும் என்பதைத் தொண்டை மண்டல சதகப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. சில தலைமுறையினருக்கு முன்பு வரை இலக்கணம் கற்போர் நேமிநாதம் பயின்ற பின்பே தொல்காப்பியம் பயில்வது மரபாக இருந்ததாம்.

    இந்நூலை எழுதியவர் குணவீர பண்டிதர். அவர் 22 ஆம் தீர்த்தங்கரராகிய (சமண தீர்த்தங்கரர் மொத்தம் 24 பேர்) நேமிநாதர் பெயரால் இந்நூலை எழுதினார். தொல்காப்பியச் சொல்லதிகாரப் பிரிவுகளாகிய ஒன்பது இயல்களின் பெயர்களையே தம் சொல்லதிகாரம் பிரிவுகளுக்கும் பெயராகச் சிறிது மாறுதலுடன் அமைத்துள்ளார். எழுத்ததிகாரப் பிரிவில் இவர் இயல் பாகுபாடு எதுவும் செய்யவில்லை. கோயிற்புராணத்தின் பழைய உரைகாரர் நேமிநாதத்தை எடுத்து ஆள்கிறார். இருப்பினும் தமிழ் உலகத்தில் இந்நூலைப் பயில்கின்றவர் மிகக் குறைவே. இந்நூலுக்குப் பழமையான சிறப்புமிக்க உரையொன்று உண்டு.

    • வச்சணந்தி மாலை

    கி.பி.1195இல் தோன்றிய சிறப்பான ஒரு பாட்டியல் நூல். இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர். பாட்டியல் என்ற இலக்கண நூற்பகுதி பொதுவாகப் பிரபந்த இலக்கணம் கூறுவது. பிற்காலத்தில் இது மிகவும் விரிந்து வளர்ந்துள்ளது. தொல்காப்பியர் கூறும் தமிழ் இலக்கணத்துள் மூன்றாம் பகுதி பொருளதிகாரம் என்று பெயர் பெறும். அதன் பிரிவுகள் பின்னர் தனித்தனி இலக்கண நூல்களாக விரிவு பெற்றன. செய்யுளியல் என்ற பிரிவின் ஒரு பகுதி பாட்டியலாக வளர்ந்தது. பழமையான பாட்டியல் நூல் பன்னிரு பாட்டியல் ஆகும். வச்சணந்தி மாலை நூலாசிரியரின் குரு வச்சணந்தி தேவர். தம் குருவின் கட்டளைப்படி அவர் பெயரால் இந்நூலைச் செய்துள்ளார். இந்நூல் மூன்று இயல்களை உடையது.

    மாணாக்கர்களும், தமிழ்ப் புலவர்களும் பண்டைக் காலத்தில் இப்பாட்டியலை மனப்பாடம் செய்து நினைவில் வைத்திருந்தார்கள். இன்றுங்கூட பலர் இப்பாடல்களை நினைவில் கொண்டுள்ளார்கள். பன்னிரு பாட்டியல் பண்டைக் காலத்தில் கற்றோர் சிலரிடமேனும் ஆட்சியிலிருந்ததா என்பது ஐயம். ஆனால் வச்சணந்திமாலை ஓரளவு தமிழறிவு உடையோராலும்கூட விரும்பிப் பயிலப்பட்டு வந்துள்ளது.

    இந்நூல் பற்றி மு.வரதராசனார் கூறுவதாவது: “பாட்டியல் என்பது புதிதாகப் புகுந்த இலக்கண நூல். நான்கு வருண வேறுபாடுகளுக்கு ஏற்றபடி பாட்டின் எண்ணிக்கையும் அமைய வேண்டும் என்று கூறுகிறது. உயர்ந்த சாதித் தலைவனாக இருந்தால் செய்யுளின் எண்ணிக்கையும் மிகுதியாக இருக்க வேண்டும் என்றும், சாதி தாழ்வானால் செய்யுளும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறும் இந்த இலக்கணம் எப்படித் தமிழில் புகுந்ததோ எனத் தெரியவில்லை. இது முற்றிலும் வேண்டாதது. உண்மையான இலக்கிய வளர்ச்சிக்கு இடையூறானது”.

    இந்திர காளியம் என்னும் பாட்டியல் மரபின் வழியாக வச்சணந்திமாலையாசிரியர் தமது நூலைச் செய்தார் என்று அறிய முடிகிறது. இப்பாட்டியலுக்குச் சிறப்பான உரை ஒன்று உண்டு. செய்தவர் யார் எனத் தெரியவில்லை. அவ்வுரை மிகவும் தெளிவாக எழுதப்பட்ட அரிய விளக்கவுரையாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 17:00:42(இந்திய நேரம்)