Primary tabs
3.4 பிரபந்த இலக்கியம்
12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் என்ற நிலையில் கண்டனலங்காரம், கண்டன்கோவை, சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவற்றைக் கூறலாம்.
இது, இக்காலப் பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்களில் ஒன்றாகும். அலங்காரம் என்பது வடமொழி. தமிழில் அது அணியிலக்கணம் என்று பொருள்படும். நூல் தண்டியலங்காரம், மாறனலங்காரம் போன்றவற்றையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கந்தரலங்காரம் எனப் பிற்காலத்தில் நூற்பெயர்கள் அமைந்தன.
கண்டன் என்பது இரண்டாம் இராசராசனது பெயர்களுள் ஒன்றாகும். இது சிறப்புப் பெயர் என்பதை,
இதனை இயற்பெயரென்று மயங்காதொழிக
இராசராசன் என்பது இயற் பெயர்(தக்கயாகப்பரணி, 549 தாழிசை உரை)
என்னும் விளக்கத்திலிருந்து அறியலாம். கண்டனலங்காரம் எனப் பெயர் கொண்ட நூல் இருந்ததாகக் களவியற் காரிகையுரையால் அறிய முடிகிறது. அங்கு இந்நூற் பாடல்கள் பத்து, மேற்கோளாகப் பெயருடன் காட்டப்பட்டுள்ளன. கண்டன் என்று பெயர் வராத பாடல்களும் உள்ளன. பாடல்கள் யாவும் அகப்பொருள் பற்றியே அமைந்துள்ளன. இதன்மூலம் அக்காலத்தில் அகப்பொருள் இலக்கியங்களாக வெண்பா நூல்கள் பல செய்யப்பட்டன என்பதை அறியலாம். இரண்டாம் இராசராசனால் போற்றப்பெற்று வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். கண்டன் பற்றி அவர் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். கண்டனலங்காரம் என்ற இந்த நூலை அவர் பாடியிருக்கலாம். இவ்வாறு முடிவு செய்ய வேறு சான்று இல்லை.
சரஸ்வதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏர் எழுபது ஆகிய இம்மூன்றையும் கம்பர் செய்ததாகக் கூறுவர். ஒரே புலவர் இம் மூன்று நூல்களையும் பாடினார் என்பது இதன் கருத்தாகும். இப்புலவர் இராமாயணம் பாடிய கம்பர் அல்லர்; பிற்காலத்தில் அதே பெயர் சூட்டப்பெற்ற வேறொருவர் ஆவார்.
- சரசுவதி அந்தாதி
இந்நூல் 30 பாடல்களைக் கொண்டது. 23, 24ஆம் பாடல்கள் சடகோபரந்தாதி பாடலைத் தழுவியவை போலத் தோன்றுகின்றன. வடமொழித் தொடர்கள் இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன. (எடுத்துக்காட்டு : கமலாசனம், சந்திரோதயம், வேதாந்தமூர்த்தி) முன்னைய இலக்கியங்களின் சொல்லமைப்பையும் பொருளமைப்பையும் இந்நூலில் காண முடிகிறது. அதனால் இந்நூல், ஆசிரியரின் இளமையில் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
- சடகோபரந்தாதி
இது கம்பர் பாடியதாக வழங்கப்படும் பிரபந்தமாகும். நம்மாழ்வாருக்குச் சடகோபர் என்றும் ஒரு பெயருண்டு. அவரைப் போற்றும் அந்தாதி நூல் இது. வைணவ மரபில் திருமால் முதலியோரை உரிமை பற்றி, அன்பு பாராட்டி ‘நம்’ என்றே குறிப்பிடுவர். இதை, ‘நம்பெருமான் நம்மாழ்வார், நம்சீயர், நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்’ என்று மணவாளமாமுனி தம் உபதேசரத்தின மாலையில் கூறுகிறார். அப்படியே சடகோபரந்தாதி பாடினோரையும் ‘நம் நாவலன்’ என்று உயர்த்திக் கூறுவது காணத்தக்கது. இந்நூல் மிகவும் இலக்கியச் சுவை கொண்ட நூலாகும். ஆசிரியர், தமக்கு ஆழ்வார் அருள் செய்தார் எனப் பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். திருமால் (சடகோபராகப்) பதினோராம் அவதாரம் எடுத்துத் தன்னையே பாடிக் கொண்டார் என்று ஒரு பாடலில் (78) கூறுகின்றார், நூலாசிரியர்.
அப்பர், மாணிக்க வாசகர் முதலிய சைவப் பெரியார் அருளிய தொடர்களை, இந்த நூலில் சில இடங்களில் காணலாம்.
- ஏர் எழுபது
இதுவும் கம்பர் பாடியதாகக் கூறப்படும் மற்றொரு நூல். உழவுத் தொழிலின் சிறப்பை மிகவும் அருமையாகப் போற்றிக் கூறுகின்றது. நூலின் பாயிரப் பகுதியில் கணபதி, திரிமூர்த்திகள், நாமகள் ஆகியோரின் துதி சொல்லப்பட்டுள்ள சிறப்பும் அடுத்து சோழ மண்டலம், சோழ மன்னன் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. உழவு நாட்கோள் தொடங்கி, உழவுக் கருவிகள், உழவு செயல் முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடலால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளன.
ஏர் நடத்தலின் சிறப்பு, உழவின் சிறப்பு ஆகியவை பல பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கருத்துகளின் அமைப்பாலும், சொல்லமைப்பினாலும் இந்நூல் ஒரு சிறப்புடைய நூல் எனலாம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற நிலையில் உண்டி கொடுப்போர் ஆகிய உழவர் வாழ்வின் சிறப்பை இந்நூல் எடுத்துரைக்கிறது.