Primary tabs
-
3.2 இலக்கிய உரைகள்
12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இலக்கிய உரை என்ற நிலையில் அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையினைக் கூறலாம். இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய புறநானூற்று உரை பற்றி முந்தைய பாடத்தில் படித்தோம்.
சிலப்பதிகாரத்துக்குப் பேருரை எழுத வந்த இவ் ஆசிரியருக்கு எல்லையில்லாத முத்தமிழ்ப் புலமையும், பயிற்சியும் அமைந்திருந்தது. அடியார்க்கு நல்லாருடைய உரையுள் வரிதோறும் இதனைக் காணமுடிகின்றது. இவருடைய உரை இல்லாதிருந்தால் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை நாம் உணரவியலாத நிலை ஏற்பட்டிருக்கும். தவிரவும் பண்டைத் தமிழின் சிறப்புகளையும் அறிய வாயிலே இல்லாது போயிருக்கும். இவர், தம் காலத்திற்கு முன்பே இசைத் தமிழும், நாடகத் தமிழும் அழிந்து போனதை உணர்ந்தார். தம் காலத்தில் அவை பின்னும் அழிந்து வந்தமையையும் நேரில் கண்டார். பண்டைத் தமிழின் சிறப்புகளைத் தாமாவது உணர்த்தி வைக்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அதன் வெளிப்பாடே இந்த உரை எனலாம்.
இது உரை மட்டுமன்று. இசை, நாடகம் பற்றிய இலக்கண இலக்கியக் களஞ்சியம். மறைந்து போயிருந்த தொல்காப்பியத்தைப் பதினோராம் நூற்றாண்டில் இளம்பூரணர் கண்டார். அதைப் பயின்று உரை எழுதிச் சிறப்பித்தார். அது போல மறைந்துபோன இசை நாடகப் பொருள்களை அடியார்க்கு நல்லார் இந்த உரை மூலம் 12ஆம் நூற்றாண்டில் அளித்தார். பண்டை நாட்டுச் செய்திகளையும், இலக்கிய வரலாறுகளையும் விளக்கமாகக் கூறுபவை இரண்டு உரைகளேயாகும். அவை நக்கீரனாரது இறையனார் களவியலுரை மற்றும் சிலப்பதிகார உரை (அடியார்க்கு நல்லார்) ஆகியன. இவ்விரு உரைகளும் முன்னாள் இருந்த முச்சங்கங்கள் பற்றிய வரலாறு - தமிழ் ஆராய்ந்தார், புலவர் தொகை, பாடினார் தொகை, பாடிய நூல், மூல நூல், சங்கம் இருந்த கால எல்லை, அரசர், கவிஞர், சங்கம் இருந்த இடம் போன்ற விவரங்களைத் தருகின்றன.
இளங்கோவடிகள் சேர மரபினராயிருந்தும், தம் நாட்டுச் சார்பு சிறிதும் இல்லாமல் பிற மன்னர் இருவரையும் போற்றியுள்ளார். மூல நூலின் தன்மைகளுக்கு ஏற்ப உரை எழுதினார் என்பது அடியார்க்கு நல்லாருக்குரிய பெருமையாகும். அவருடைய மற்றொரு நோக்கம், மறைந்து போன இசைத் தமிழ், நாடகத் தமிழின் பகுதிகள் ஆகியவற்றிற்கு இயன்றவரை பின்வருவோர் உணரும்படி விரித்துரைத்தல் என்பதாகும்.
இவர், சொற்களுக்கும், தொடர்களுக்கும் பொருள் விளக்கம் தருகிறார். வடமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார். பழமொழிகள், வழக்குகள் வரும்பொழுது விளக்கம் தருகிறார். மேற்கோள் தந்தும், முன்னுள்ள உரை, பாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டும் எழுதுகிறார். செய்யுளோசை படும்படி எழுதுவது இவரது சிறப்பு, அணியிலக்கணத்தையும் எடுத்துக்காட்டுகிறார். இவ்வுரை கடைச்சங்க காலத்துக்கு முன்னும், பின்னும், அக்காலத்திலும் இருந்த முத்தமிழ் இலக்கிய இலக்கணத்தைத் தெளிவு பெற உணர்த்தும் அடிப்படை நூல் ஆகும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I