Primary tabs
3.3 வைணவ இலக்கியம்
இக்காலக் கட்டத்தில் ஓரிரு உரைநூல்களும் ‘தனியன்’ என அழைக்கப்படும் தனிப்பாடல்களும் தோன்றின.
இது, பராசரபட்டர் என்பவரால் எழுதப்பட்டது. பட்டர், வராக புராணத்தில் சொல்லப்பட்டுள்ள கைசிக புராணம் என்ற பகுதிக்குத் (92 சுலோகங்களுக்கு) தமிழில் உரை எழுதினார்.
திருக்குறுங்குடி என்ற தென்னாட்டுத்தலத்தில் நம்பாடுவான் என்ற பாணன் இருந்தான். அவன் அதிகாலையில் கைசிகம் என்ற பண்ணை, நம்பி (இறைவன்) சந்நிதியில் பாடினான். ஒரு நாள் பாடிய ஒரு பாட்டின் பலத்தால் ஒரு பிரமராக்கதனைத் தேவனாகச் செய்தான். இவ்வரலாறே இதில் உள்ளது. இந்த உரையாசிரியர் பல வடமொழி நூல்களை எழுதியுள்ளார். திருமங்கையாழ்வார் பாடல் ஒன்றுக்கு வியாக்கியானமும் செய்துள்ளார். அதன் பெயர் மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் என்பதாகும்.
இக்காலப்பகுதியில் வைணவ இலக்கியத்தைப் பொறுத்தவரை அதிகமான தனியன்கள் (தனியன் = தனிப்பாடல்) தோன்றின. இத் ‘தனியன்கள்’ ஆழ்வார்களையும் அவர்கள் அருளிச் செய்த நூல்களையும் போற்றிப் பாடிய வாழ்த்துகள் ஆகும். இவ்வாறாகத் தனியன்கள் எழுதியோரில் குறிப்பிடத்தக்கவர்களைக் காணலாம்:
- கிடாம்பியாச்சான் (கி.பி .1058-1158)
இவர் காஞ்சியில் பிறந்தவர். பெரிய திருமலை நம்பியின் மருமகன் ஆவார். இவர், நம்மாழ்வாரின் திருவிருத்தத்துக்குத் தனியன் செய்தார்.
- அனந்தாழ்வான் (கி.பி. 1055 - 1205)
இவர் திருமலையில் ஒரு குளம் வெட்டியபோது பெருமாள் சிறுவனாக வந்து, மண் சுமந்து கொட்டியதாகக் கூறுவர். ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி....’ எனத் தொடங்கும் திருவாய்மொழித் தனியனை இவர் பாடியுள்ளார்.
மேற்கண்டவர்களைத் தவிர, பிள்ளை திருநறையூர் அரையர், சோமாசியாண்டான், வேதப்பிரான்பட்டர், பிள்ளை உறங்காவில்லி தாசர், கம்பர் (இராமாயணம் எழுதியவர் அல்ல) போன்ற பலர் தனியன்களைப் பாடியுள்ளனர். இக்காலப் பகுதியில் வைணவத்தைப் பொறுத்தவரை தனியன்களே அதிகமாக எழுதப்பட்டன எனலாம்.