Primary tabs
-
4.2 இலக்கண நூல்கள், உரைகள்
இக்காலப்பகுதியில் தோன்றிய இலக்கண நூல்கள் மற்றும் இலக்கண உரைகள் பற்றிக் காணலாமா?
4.2.1 இலக்கண நூல்கள்
இந்நூற்றாண்டில் மிகவும் சிறப்பான இலக்கண நூல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமணர் இயற்றிய இரு இலக்கண நூல்கள் இக்காலப் பகுதியில் தோன்றின.
- நன்னூல்
நன்னூல் இன்று வரை தமிழுக்கு முக்கிய இலக்கண நூலாகத் திகழ்கிறது. இதனை எழுதியவர் பவணந்தி முனிவர். இவர் சமண சமயத்தவர். இந்நூலின் பெயரே இதனுடைய சிறப்பினை உணர்த்தும். பழங்காலத்தில் இலக்கணத் துறையில் தொல்காப்பியம் பெற்ற இடத்தினை இடைக்காலத்தில் நன்னூல் பெற்றது. தொல்காப்பியர் காலத்திற்குப்பின் வழக்காறு அற்றுப்போன இலக்கணங்களை விடுத்து, இடைக்காலத் தமிழுக்கு ஏற்ற முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நன்னூல், எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறுகிறது. இவ்விரண்டிற்கு மட்டுமே அதிகாரங்கள் செய்யப்பட்டுள்ளன. பொருள், யாப்பு, அணி பற்றி இலக்கணம் கூறவில்லை. நன்னூல் 462 சூத்திரங்களைக் கொண்டது. எழுத்ததிகாரம் மற்றும் சொல்லதிகாரத்தின் தொடக்கத்தில் தனித் தனியாக அருகன் வணக்கம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியச் சூத்திரங்கள் ஏழு இந்நூலில் (நன்னூல் 90, 252, 317 396, 404, 404, 408) அப்படியே எடுத்து ஆளப்பட்டுள்ளன.
இந்நூலின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஒவ்வொன்றும் ஐந்து இயல்களைக் கொண்டது. நன்னூலின் சிறப்பைக் கருத்தில் கொண்டு, இலக்கணம் கற்கப் புகுபவர்கள் இந்நூலையே கற்கிறார்கள். 17ஆம் நூற்றாண்டில் இலக்கண விளக்கம் செய்த வைத்தியநாத தேசிகர் இதிலிருந்து 250 சூத்திரங்கள் எடுத்துக் கையாண்டுள்ளார்.
இந்நூலுக்கு மயிலைநாதர் உரையும், சங்கர நமச்சிவாயர் மற்றும் சிவஞான முனிவரின் விருத்தியுரையும் உள்ளன. விசாகப் பெருமாளையர், ஆறுமுக நாவலர், இராமானுஜ கவிராயர், வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். காலத்தால் முந்தியது மயிலைநாதர் (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு) உரையாகும்.
- அகப்பொருள் விளக்கம்
நாற்கவிராச நம்பியால் இயற்றப்பட்டது. எனவே நம்பியகப் பொருள் என வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கணம் பயில்வோர் இந்நூலை அதிகமாகப் பயில்கிறார்கள். அகப்பொருள் இலக்கணத்தைத் தொகுத்தும் விளக்கியும் சொல்வதால் இந்நூல் 'அகப்பொருள் விளக்கம்' என்று பெயர் பெற்றது. தொல்காப்பியத்திலும், வேறு இடங்களிலும் இருந்த அகப்பொருள் இலக்கணங்களை, தம் காலத்துக்கு முன்னர் வந்த தமிழ்ச் சான்றோர் இலக்கியங்களுக்கும் பொருந்துமாறும் முறைப்படத் தொகுத்தும் எழுதியுள்ளார் ஆசிரியர். பொருள் நன்கு விளங்கும்படி சூத்திரம் வகுத்தும், தாமே உரை எழுதியும் அவர் இந்நூலைச் செய்துள்ளார்.
பிற்காலத்தில் இலக்கண விளக்கம் செய்த வைத்தியநாத தேசிகர் அகப்பொருள் இலக்கணம் கூறுமிடத்தில் பெரும்பாலும் இந்நூற் சூத்திரங்களைக் கொண்டே தம் நூலில் இலக்கணம் அமைத்துள்ளார். இந்நூலானது அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்ற ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. 252 சூத்திரங்கள் உள்ளன. ‘பண்டைய சான்றோர் நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி உரை எழுதுகிறார் நூலாசிரியர். அவ்வாறு கிடைக்காதபோது ‘தமது சூத்திரங்களையே இலக்கணமாகக் கொள்ளலாம்’ என்று கூறுகின்றார். (சூத்திரம் 144 உரை), சிற்றட்டகம் என்ற நூல் பற்றிய விளக்கம் இந்நூலின் உரையில் கிடைக்கிறது.
4.2.2 இலக்கண உரைகள்
இக்காலக்கட்டத்தில் தொல்காப்பியம், வச்சணந்திமாலை போன்றவற்றிற்கு உரைகள் செய்யப்பட்டுள்ளன.
- தொல்காப்பிய உரை (பேராசிரியர்)
இவ்வுரை பேராசிரியரால் எழுதப்பட்டது. இவ்வுரையாசிரியர் சைவராக இருக்க வாய்ப்புண்டு. ‘பொன்மேனி’ என்ற தொடரை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். ‘புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்’ என்கிறது திருவாசகம். பொதுவாக, தேவார திருவாசகங்களையோ ஆழ்வார் பிரபந்தங்களையோ உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டுவதில்லை. இருப்பினும், பரிமேலழகர் திருவாய்மொழியையும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் திருவாசகத்தையும் காட்டுகிறார்கள்.
பேராசிரியர் தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். ஆனால் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டுமே அவருடைய உரை கிடைத்துள்ளது. ஏனைய இயல்களுக்கு அவர் எழுதிய உரை கிடைக்கவில்லை. இவர் தம்முடைய உரையில் பாட பேதங்களைப் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். இவர் வடநூற் பயிற்சி மிக்கவர். இவர் உரையால் பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.
பேராசிரியர் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு மட்டுமன்றிக் குறுந்தொகை, திருக்கோவையார் ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். குறுந்தொகையில் முதல் 380 பாடல்களுக்கு மட்டும் உரை எழுதினார். ஆனால் அவ்வுரை கிடைக்கவில்லை. எஞ்சிய 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார். அவ்வுரையும் கிடைக்கவில்லை. திருக்கோவையார் உரை இன்று முழுமையாகக் கிடைத்துள்ளது.
- வச்சணந்தி மாலை உரை
பாட்டியலைக் கூறுவது வச்சணந்தி மாலை (கி.பி. 1220). இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர். அவருடைய ஆசிரியரான வச்சணந்தி முனிவருடைய பெயர் இந்நூலுக்குச் சூட்டப் பெற்றது. இந்நூலுக்கு உரை செய்தவரின் பெயரோ வரலாறோ கிடைக்கவில்லை. பல மேற்கோள் பாடல்கள் இதன் உரையுள் உள்ளன.
இவ்வுரை சுருக்கமான பழைய உரையாகும். வடமொழி நூல்கள் பலவற்றை இவர் குறிப்பிடுகின்றார். சங்க நூல்கள் சிலவற்றையும் எடுத்துக் கூறுகிறார். நூலின் இறுதிப் பகுதியில் விரிவாக உரை எழுதவில்லை.
- தொல்காப்பிய உரை (சேனாவரையர்)
சேனாவரையர் தொல்காப்பியத்தில் உள்ள சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதியுள்ளார். இவ்வுரை முழுவதுமாகக் கிடைத்துள்ளது. இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இவரை இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் நன்கு பாராட்டுவர்.
இவருடைய உரைநடை எளிய நடையன்று. ஆனால் சுவைத்து எழுதுகின்ற நயம் மிக்க நடையாகும். இலக்கணப் பகுதிகள் அனைத்தையும் ஒரு பொது நோக்காகக் கருதியே இவர் சொல்லதிகாரத்துக்கும் அதன் ஒவ்வோர் இயலுக்கும் உரை எழுதுகின்றார். உரை எழுதும்போது முன்னோர் கொண்ட சூத்திர அமைப்புகளைச் சில சேர்த்தும், சில பிரித்தும் தக்க காரணத்தோடு எழுதுகிறார்.
தொல்காப்பியரைப் போற்றியே இவர் இவ்வுரை எழுதுகிறார். உரையைத் தருக்க முறையிலேயே எழுதுகிறார். தாம் மேற்கோள் காட்டும் இலக்கியப் பகுதிகளிலுள்ள, பொருத்தமான இலக்கணப் பகுதியையும் நன்கு விளக்குகிறார். இவர் பண்டை இலக்கியச் செய்திகளைக் குறிப்பிடுகின்றார். இவருடைய உரையுள் பத்துப்பாட்டு முழுமையும் மேற்கோளாக வருகிறது. எட்டுத்தொகையுள் பரிபாடலைப் பெயர் குறிப்பிடுகின்றார். மற்ற ஏழையும் கூட எடுத்தாள்கிறார். தொல்காப்பியத்துக்குப் பேராசிரியர் உரை, சேனாவரையர் உரை ஆகிய இரு உரைகள் எழுந்தமை இக்காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I