தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் மரபிலக்கண நூல்களும் தமிழ் வரிவடிவமும்

  • 1.5 தமிழ் மரபிலக்கண நூல்களும் தமிழ் வரிவடிவமும்

    வரிவடிவம் என்னும் சொல் எழுத்துகளின் வடிவையும் குறிக்கும். இதனுடன் எழுத்துகளுக்குரிய வரிசை முறையையும் குறிக்கும். எழுத்துகளின் வடிவ நிலையை அறியத் தமிழைப் பொறுத்த வரையில் கல்வெட்டுகளே பெரிதும் உதவுகின்றன. சிற்சில நிலைகளில் இலக்கண நூல்கள் உதவுகின்றன.

    எழுத்துகளின் வரிசை முறையை அறிதலைப் பொறுத்த வரையில் இலக்கண நூல்களே பெரிதும் உதவுகின்றன. கல்வெட்டுகளில் வரிசை முறை தொடர்பான சிந்தனை இடம்பெறத் தக்க சூழல் உருவாகவில்லை.

    1.5.1 தொல்காப்பியமும் வரிவடிவமும்

    தமிழ் மொழியின் தொன்மை மிக்க இலக்கண நூலாகக் கிடைக்கும் தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்து வடிவம் தொடர்பான சில கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவை :

    (1) மெய் எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப் பெறும்.
    (2) உயிர் எழுத்தோடு இணையும் மெய் எழுத்து, புள்ளி இன்றி எழுதப் பெறும்.
    (3) உயிர் எழுத்துகளில் எ, ஒ ஆகிய இரண்டு எழுத்துகளும் குறில் எனில் புள்ளி இட்டு எழுதப் பெறும்.

    இம்மூன்று கருத்துகளுமே தமிழ் எழுத்து வடிவ வரலாற்றில் மிக முக்கியமானவை; தொடக்கக் காலத் தமிழ்க் கல்வெட்டுகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியாதவை.

    எழுத்துகளின் மேல் புள்ளி இட்டு எழுதினால் ஓலை கிழிந்து விடும். இதனால் புள்ளி இன்றியே ஓலைச் சுவடிகளில் எழுதுவர். ஓலைச் சுவடிகளை வாசிக்கும் நிலையில் பொருள் நோக்கில் தான் எ, ஒ - குறில் வடிவங்களையும், மெய், உயிர்மெய் வேறுபாட்டையும் அறிய இயலும். தொடக்கக் காலத் தமிழ்க் கல்வெட்டுகளிலும் புள்ளி இட்டு எழுதியதாகத் தெரியவில்லை. இவற்றால் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள எழுத்துகளின் வடிவம் தொடர்பான கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

    1.5.2 வீரமாமுனிவரும் வரிவடிவமும்

    தமிழ் உயிர் எழுத்துகளில் எ, ஒ - ஆகியவற்றையும், அவ்வெழுத்துகள் மெய் எழுத்துகளோடு சேர்த்து எழுதப் பெறும் நிலையையும் வீரமாமுனிவர் மாற்றி அமைத்ததாகக் கருதுவர். வீரமாமுனிவர் எழுதி உள்ள கொடுந்தமிழ் என்னும் இலக்கண நூலில் இந்த மாற்றம் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வீரமாமுனிவர்தான் இம்மாற்றத்தை முதலில் செய்தார் என்பதற்கு உரிய சான்றுகள் இல்லை. பிற்காலக் கல்வெட்டுகளில் இம்மாற்றங்கள் காணப் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். இதனால் வீரமாமுனிவர் தமிழகத்துக்கு வருவதற்குச் சற்று முன்னர் அறிமுகமான அச்சு வடிவத் தமிழ் எழுத்துகளில் மேற்குறிப்பிடப் பெற்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்பர். ஆக, வீரமாமுனிவர் வருகையை ஒட்டி நிகழ்ந்த தமிழ் வரிவடிவ மாற்றங்களைக் கீழ்வரும் வரைபடத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.

    தமிழ் எழுத்து வடிவ மாற்றம்

    வீரமாமுனிவர் வீரமாமுனிவர்
    வீரமாமுனிவர் வருகைக்குப் பின்பு
    1. எ், ஒ் - குறில்கள் 2. எ, ஒ - நெடில்கள்
    1, எ, ஒ - குறில்கள் 2. ஏ, ஓ - நெடில்கள்

    தமிழ் எழுத்து வடிவ மாற்றம்

    இந்த வடிவ மாற்றத்திற்கு அறிஞர் கருத்தில் கொண்ட அடிப்படைச் சிந்தனைகள் இரண்டு. அவை,

    (1)
    தமிழ் எழுத்து வடிவத்தில் புள்ளி இடப்பெற்றால் மாத்திரை அளவு குறைகின்றது என்பது பொருள்.

    எ.டு:

    க - என்ற எழுத்துக்கு ஒரு மாத்திரை. இந்த எழுத்தின் மேல் புள்ளி இட்டு க் என்று எழுதினால் மாத்திரை குறைகின்றது; அரை மாத்திரையாக அமைகின்றது.

    (2)
    தமிழ் எழுத்து வடிவத்தில் நீட்சியை உருவாக்கினால் மாத்திரை அளவு கூடுகின்றது என்பது பொருள்.

    எ.டு:

    கி - என்ற எழுத்துக்கு ஒரு மாத்திரை. இந்த எழுத்தை நீட்டிக் கீ என்று எழுதினால் மாத்திரை கூடுகின்றது ; இரண்டு மாத்திரையாக அமைகின்றது.

    இந்த இரு அடிப்படைச் சிந்தனைகள் வழிதான் தமிழ் எழுத்து வடிவங்களில் குறில், நெடில் வேறுபாடுகள் எல்லாம் வெளிப்படுத்தப் பெறுகின்றன. இந்த அடிப்படையில் தான் எ, ஒ எழுத்துகள் மீது புள்ளி இட்டுக் குறில் எழுத்துகளாக எழுதி உள்ளனர். எ, ஒ எழுத்துகளை வடிவ நிலையில் நீட்டித்து நெடில் எழுத்துகளாக எழுதி உள்ளனர். இவற்றில் வீரமாமுனிவர் காலத்தில் உருவாக்கப் பெற்ற எ, ஒ - நீட்டித்து நெடில் குறில் வேறுபாட்டை உணர்த்தும் முறை, தமிழ் எழுத்துகளின் பொது வடிவ அமைப்புச் சிந்தனையுடன் ஒத்துள்ளதைக் கவனிக்கலாம்.

    • மரபிலக்கணமும் வரி வடிவமும்

    தமிழ் எழுத்து வரிசை முறையை நாம் அறிந்து கொள்ள மரபிலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் எழுத்துகள் அகர முதல் னகர இறுவாய் என்றே தொல்காப்பியத்தில் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளன. மேலும் எழுத்துகளின் பிறப்பு முறையை விளக்குகையிலும் அகர வரிசை தெளிவாகப் பின்பற்றப் பெற்றுள்ளது. பிற்காலத்தில் ஒரு சில இலக்கண நூல்களில் தமிழ் எழுத்துகள் 5ஆம் எழுத்து, 15ஆம் எழுத்து என்று அவற்றின் வரிசை இடத்தின் அடிப்படையில் குறிப்பிடப் பெற்றுள்ளன. இது போன்ற தமிழ் எழுத்துகளின் வரிசை முறைச் சிந்தனையைக் கல்வெட்டுகளில் காண்பது அரிது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 16:58:42(இந்திய நேரம்)