தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-உரைநடை மொழி

  • 4.3 உரைநடை மொழி

    இருபதாம் நூற்றாண்டை உரைநடைக் காலம் எனலாம். ஆங்கிலக் கல்வியின் பயனாலும் மேனாட்டார் தொடர்பினாலும் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த புதிய வரவு உரைநடை ஆகும். இதனால் தமிழ் உரைநடை மேலும் வளர்ச்சி பெற்றது. நாட்டு விடுதலை உணர்வு, சீர்திருத்த உணர்வு, மொழி உணர்வு முதலியவற்றோடு மேனாட்டில் முன்னேறிய கலை, அறிவியல் முதலியவற்றின் பரவல் முதலியனவும் உரைநடை வளரக் காரணமாயின. முற்காலத்தில் செய்யுள் நடை பெற்றிருந்த இடத்தை இக்காலத்தில் உரைநடை பெற்றுள்ளது.

    தொடக்கத்தில் இலக்கணம், தத்துவம், சமயக் கொள்கைகளை விளக்குவதற்கு உரைநடை பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் கலை, அறிவியல் மற்றும் பிறவற்றையும் விளக்குவதற்கு உரைநடை பயன்படுகிறது. படைப்பிலக்கியங்களாகிய நாவல், சிறுகதை முதலியவையும் உரைநடை மொழியால் ஆக்கம் பெறுபவை. இவற்றின் மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் வேறுபாடு உள்ளது.

    4.3.1 கட்டுரை மொழி

    கட்டுரை மொழி தமிழில் வளர்ச்சி பெற்று வந்திருக்கும் நிலை குறிப்பிடத் தக்கது. கலப்புத் தமிழ் நடை, தனித்தமிழ் நடை, செந்தமிழ் நடை, அடுக்கு மொழி நடை, மறுமலர்ச்சி நடை, பேச்சுத்தமிழ் நடை எனப் பல்வேறு நடைகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளன.

    • செந்தமிழ் நடையின் தொடக்கக் காலம்

    நாவலர் வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்றோர் செந்தமிழ் நடையில் எழுதினர். கா.சு. பிள்ளை, விபுலானந்தர் முதலியோரது நடையும் இவ்வகையினதே; ஆனால் எளிமையானது. அவ்வை துரைசாமிப் பிள்ளை உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றினார்.

    • பாரதியின் நடை

    உரைநடை வரலாற்றில் பாரதியின் நடை ஒரு திருப்புமுனையாகும். இதனால் இவரது காலத்தை உரைநடை வரலாற்றில் பாரதி காலம் என்றே குறிப்பிடுகிறோம். பாரதியின் நடை உணர்ச்சியூட்டும் நடை மட்டுமன்று; எளியதும் தர்க்கரீதியானதும் பேச்சு வழக்கு நிறைந்ததும் ஆகும்.

    பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும் கவனி!
    பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம். பயம் தீர்ந்தால்
    நேரே பார்க்கலாம் கவனி!
    பொய் தீர்ந்தால் பயம் தீரும், பயம் தீர்ந்தால்
    பொய் தீரும்.

    என்பது பாரதியின் நடைக்கு எடுத்துக்காட்டு. கவிதை அழகுடன், அதே வேளை உரைநடையின் தெளிவுடனும் கட்டுரைகளை எழுதியவர் பாரதியார். புதிய சொற்களைப் படைப்பதிலும் இவர் கைதேர்ந்தவர். புரட்சி, பொதுவுடைமை போன்ற சொற்களைப் படைத்தவர் பாரதியாரே. உரைநடையில் பழமொழிகளையும் சேர்த்து இவர் எழுதியமையால் பேச்சுச் சாயல், தெளிவு, வேகம் முதலியன இவர் நடையில் அமைந்தன.

    • கட்டுரை நடை - வளர்ச்சி நிலை

    பாரதிக்குப் பின்னர் கட்டுரை நடையை வளர்த்தெடுத்துச் சென்றோர் பலர். மணிக்கொடிக் காலம் என்பதன் மையமாகிய வ.ரா. எனப்படும் வ. ராமசாமி பேச்சுநடையில் எழுதினார். படிப்பவனைச் சிந்திக்கத் தூண்டியது இவர் எழுதிய பாங்கு. உரைநடை வரலாற்றில் தமக்கெனத் தனிநடையை உருவாக்கியவர் ரா.பி. சேதுப்பிள்ளை. ஓசைச் சிறப்பு, சொல்லின்பம், எதுகை, மோனை முதலியன அடங்கிய இனிய நடை இவரது கட்டுரைகளில் அமைந்திருந்தது. இவரது ஊரும் பேரும், வேலும் வில்லும், அலையும் கலையும் ஆகிய நூல்கள் பல அருமையான கட்டுரைகளைக் கொண்டவை.

    “இராவணன் லெள்ளிமா மலையை அள்ளி எடுத்தபோது
    இறைவனுடைய சேவடிக் கொழுந்தின் ஊற்றத்திற்கு ஆற்றாது,
    நசையினால் பாடிய இசையினுக்கு இரங்கி நெடிய நாளும் கொடிய வாளும் தந்தான்” - - வீரமாமுனிவர் நாடு -

    என்ற பகுதி ரா.பி. சேதுப்பிள்ளையின் நடைக்கு எடுத்துக்காட்டு.

    • மு. வரதராசனின் நடை

    ரா.பி. சேதுபிள்ளை அவர்களைத் தொடர்ந்து சிந்தனைச் செறிவு மிக்க நடையைத் தந்தவர்கள் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் மற்றும் கா.அப்பாதுரை போன்றோர். இவர்களைத் தொடர்ந்து தனித்துவம் வாய்ந்த நடையில் எழுதியவர் மு. வரதராசனார். எளிமை, இனிமை, தெளிவு இவரது நடையில் கலந்திருந்தன. இவருக்குப் பின் பலர் இவரைப் பின்பற்றி இவரைப் போலவே எழுதினர். வ.சுப. மாணிக்கம் அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:03(இந்திய நேரம்)