தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்து இலக்கணமும் புணர்ச்சியும்

  • 1.1 எழுத்து இலக்கணமும் புணர்ச்சியும்

    புணர்ச்சி என்றால் சேர்க்கை என்று பொருள். இரண்டு பதங்கள் (சொற்கள்) ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவதை எழுத்து இலக்கணம் புணர்ச்சி என்ற சொல்லால் விளக்கும்.

    சான்று:

    பொன் வளையல்

    புணர்ச்சி என்பதைச் சந்தி என்றும் குறிப்பிடுவர். இரண்டு சொற்கள் சந்திப்பதைப் பற்றிய இலக்கணம் என்பதால் இவ்வாறு கூறினர் எனலாம். புணர்ச்சி என்பது தமிழ்ச் சொல். சந்தி என்பது வடசொல்.

    புணர்ச்சியில் சேர்ந்து வரும் இரண்டு சொற்களில் முதலாவது வரும் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாவது வரும் சொல்லை வருமொழி என்றும் நன்னூலில் பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார். நிலைமொழி என்றால் நிற்கும் சொல் என்று பொருள். வருமொழி என்றால் நிலைமொழிக்குப் பின் வருகின்ற சொல் என்று பொருள்.

    சான்று:

    பொன் வளையல்

    பொன் - நிலைமொழி

    வளையல் - வருமொழி

    தொல்காப்பியர் நிலைமொழி என்பதை நிறுத்த சொல் என்றும், வருமொழி என்பதைக் குறித்துவரு கிளவி என்றும் குறிப்பிட்டுள்ளார். மொழி, கிளவி, சொல் என்பன ஒரே பொருளுடைய சொற்கள். தற்காலத் தமிழ் இலக்கணத்தில் நிலைமொழி, வருமொழி என்பனவே வழக்கில் உள்ளன.

    எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு மிக முக்கியமான இடம் தரப்பட்டுள்ளது. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தில் முதலாவதாக அமைந்துள்ள அதிகாரம் எழுத்ததிகாரம் ஆகும். அதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல் என்னும் முதல் மூன்று இயல்களில் எழுத்துகளின் வகை, எண்ணிக்கை, பெயர், வடிவம், மாத்திரை, பிறப்பு முதலியன பற்றிக் கூறுகிறார். எஞ்சிய புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றியே கூறுகிறார்.

    தொல்காப்பியரைப் போலவே நன்னூலாரும் நன்னூலில் முதலாவதாக அமைந்த எழுத்ததிகாரத்தில் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்துள்ளார். நன்னூல் எழுத்ததிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன. அவை எழுத்தியல், பதவியல், உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் என்பனவாம்.

    நன்னூலார் எழுத்து இலக்கணத்தை எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல் (சொல்லின் முதலில்), ஈறு (சொல்லின் இறுதியில்), இடைநிலை (சொல்லின் இடையில்), போலி, பதம், புணர்ச்சி எனப் பன்னிரு வகையாகப் பிரிக்கிறார்.

    எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை,
    முதல், ஈறு, இடைநிலை, போலி என்றா
    பதம், புணர்பு, எனப் பன்னிரு பாற்று அதுவே  (நன்னூல், 57)

    (ஈறு = இறுதி: புணர்பு = புணர்ச்சி.)

    இவற்றில் எண் முதல் போலி என்பது வரையில் உள்ள பத்து இலக்கணங்களை எழுத்தியலிலும், பதம் என்பதைப் பதவியலிலும் விளக்குகிறார். புணர்ச்சியை ஏனைய உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் ஆகிய மூன்று இயல்களில் விளக்குகிறார்.

    மேற்கூறியவற்றால் தொல்காப்பியரும், நன்னூலாரும் எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு முக்கியமான இடம் தந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 15:13:16(இந்திய நேரம்)