தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 1.8 தொகுப்புரை

  இரண்டு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவது புணர்ச்சி எனப்படும். இது சந்தி என்ற வடசொல்லாலும் குறிப்பிடப்படும். இரண்டு சொற்களில் முதல் சொல் நிலைமொழி என்றும், இரண்டாம் சொல் வருமொழி என்றும் கூறப்படும். தொல்காப்பியரும் நன்னூலாரும் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்துள்ளனர்.

  நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளை அடிப்படையாக வைத்துப் புணர்ச்சியை நன்னூலார் உயிர் ஈற்றின் முன் உயிர்வரல், உயிர் ஈற்றின் முன் மெய்வரல், மெய் ஈற்றின் முன் உயிர்வரல், மெய் ஈற்றின் முன் மெய்வரல் என நால்வகையாகப் பிரித்து விளக்குகிறார்.

  இருசொற்கள் சேர்ந்து வரும்போது அவை எவ்வகைப் பொருளில் பொருந்துகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்று இருவகையாகப் பிரித்து விளக்குகிறார் நன்னூலார்.

  இரு சொற்கள் சேர்ந்து வரும்போது அச்சொற்களில் நிகழும் எழுத்து மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நன்னூலார் புணர்ச்சியை இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகையாகப் பிரித்து விளக்குகிறார். இயல்பு புணர்ச்சியை ஒன்றாகவும், விகாரப் புணர்ச்சியைத் தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்றாகவும் பகுத்து அவர் விளக்குகிறார்.

  புணர்ச்சியில் சொற்கள் சேர்ந்து இயல்பாக வருவதும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்கள் பெற்று வருவதும் பேசுவோர்க்கும், கேட்போர்க்கும் ஓசை இனிமையையும், பொருள் தெளிவையும் தருகின்றன.

  இவற்றையெல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக நன்கு அறிந்துகொண்டோம்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1.
  விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  2.
  பூ+கொடி - புணர்ச்சியில் எவ்வாறு சேர்ந்து வரும்?
  3.
  மர நிழல் - பிரித்துக் காட்டுக.
  4.
  பனை+காய் - புணர்ச்சியில் எவ்வாறு சேர்ந்து வரும்?
  5.
  பொற்றாமரை - பிரித்துக் காட்டுக.
  6.
  ஒரே புணர்ச்சியில் இரண்டு விகாரங்கள் வருவதற்கு ஒரு சான்று தருக.
  7.
  ஒரே புணர்ச்சியில் மூன்று விகாரங்கள் வருமா?
  8.
  செய்யுள் விகாரங்கள் எத்தனை?
  9.
  செய்யுள் விகாரங்கள் உலக வழக்கில் வருமா?
  10.
  சிலப்பதிகாரம் - இதில் அமைந்துள்ள செய்யுள் விகாரம் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 16:22:16(இந்திய நேரம்)