தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புணர்ச்சி - விளக்கமும் பாகுபாடும்

  • 1.2 புணர்ச்சி - விளக்கமும் பாகுபாடும்

    புணர்ச்சி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலின் முதல் நூற்பாவில் தருகிறார்.  அவர் தரும் புணர்ச்சி விளக்கம் வருமாறு:

    மெய் எழுத்தையும், உயிர் எழுத்தையும் முதலும் ஈறுமாக உடைய  பகாப்பதம், பகுபதம் என்னும் இரண்டு பதங்களும், தன்னொடு தானும் (பகுபதத்தோடு பகுபதமும், பகாப்பதத்தோடு பகாப்பதமும்), பிறிதொடு பிறிதுமாய் (பகுபதத்தோடு பகாப்பதமும், பகாப்பதத்தோடு பகுபதமும்), அல்வழிப் பொருளிலோ (வேற்றுமை வழி அல்லாத நிலை), வேற்றுமைப் பொருளிலோ சேர்ந்து வரும்பொழுது, நிலைமொழியும், வருமொழியும் இயல்பாக இருந்தோ, விகாரம் பெற்றோ பொருந்துவது புணர்ச்சி எனப்படும்.

    மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும்,
    தன்னொடும் பிறிதொடும், அல்வழி வேற்றுமைப்
    பொருளில் பொருந்துழி, நிலைவரு மொழிகள்
    இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே  (நன்னூல் -151)

    (ஈறு = இறுதி;   இரு பதங்கள் = பகாப்பதம்,   பகுபதம்;   பொருந்துழி = சேர்ந்து வரும்பொழுது;   நிலை வருமொழிகள்  =   நிலை மொழியும் வருமொழியும்; இயைவது =   பொருந்துவது, சேர்வது; புணர்ப்பு = புணர்ச்சி.)

    நன்னூலார் தரும் இப்புணர்ச்சி விளக்கத்தை நோக்கும்பொழுது, அவர் எழுத்துகளின் அடிப்படை, பதங்களின் அடிப்படை, பொருளின் அடிப்படை, எழுத்து மாற்றத்தின் அடிப்படை ஆகிய நான்கு வகை நிலைகளில் புணர்ச்சியைப் பாகுபடுத்திக் காண்கிறார் என்பது புலனாகிறது. இந்நால்வகைப் புணர்ச்சிப் பாகுபாடுகளைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாகத் தக்க சான்றுகளுடன் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 15:26:56(இந்திய நேரம்)