Primary tabs
1.5 பொருளின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு
நிலைமொழியோடு வருமொழி பொருந்தும்பொழுது, எவ்வகைப் பொருளில் பொருந்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
வேற்றுமைப் புணர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவதற்கு முன்பு வேற்றுமை என்றால் என்ன என்பது குறித்துச் சிறிது விளக்கமாகக் காண்போம்.
தமிழில் வேற்றுமைகள் எட்டு. இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று கூறப்படும். எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை என்று கூறப்படும். இவ்விரு வேற்றுமைகளுக்கு என்று தனி வேற்றுமை உருபு கிடையாது. ஏனைய இரண்டு முதல் ஏழு வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றனுக்கும் தனித்தனி உருபுகள் உண்டு. அவை பின்வருமாறு:
வேற்றுமைஉருபுஇரண்டாம் வேற்றுமைஐமூன்றாம் வேற்றுமைஆல்நான்காம் வேற்றுமைகுஐந்தாம் வேற்றுமைஇன்ஆறாம் வேற்றுமைஅதுஏழாம் வேற்றுமைகண்இவ்வுருபுகள் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்து, அப்பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் வேற்றுமை எனப்பட்டன.
சான்று:
இராமன் பார்த்தான்
இராமனைப் பார்த்தான்
இராமனால் பார்த்தான்இத்தொடர்களில் முதல் தொடரில் பார்ப்பவன் இராமனாகவும், இரண்டாம் தொடரில் பார்க்கப்படுபவன் இராமனாகவும், மூன்றாம் தொடரில் பார்ப்பதற்குக் காரணமானவன் இராமனாகவும் பொருள் வேற்றுமை பெற்றுள்ளது. முதல் தொடரில் இராமன் எழுவாயாகவும், இரண்டாம் தொடரில் இராமன் செயப்படுபொருளாகவும், மூன்றாம் தொடரில் இராமன் கருவிப் பொருளாகவும் விளங்குவதாக இலக்கணம் கூறும். இந்தப் பொருள் வேற்றுமையைச் செய்வது எது? ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும், ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும்தான் பொருள் வேற்றுமையைச் செய்கின்றன என்பதை உணரலாம். இனி, வேற்றுமைப் புணர்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நிலைமொழியும், வருமொழியும் வேற்றுமைப் பொருளில் புணரும் பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையில் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறு வேற்றுமைகளுக்கு உரிய உருபுகள் தொக்கியோ (மறைந்தோ), விரிந்தோ (வெளிப்பட்டோ) வருவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும். எனவே வேற்றுமைப் புணர்ச்சி ஆறு வகைப்படும்.
வேற்றுமை உருபுகள் தொக்கி வருவது வேற்றுமைத் தொகை எனவும், அவ்வேற்றுமை உருபுகள் தொகாது (மறையாது) விரிந்து வருவது வேற்றுமை விரி என்றும் கூறப்படும்.
சான்று:
வேற்றுமைத் தொகைஉருபுவேற்றுமை விரி1. பால் குடித்தான்ஐபாலைக் குடித்தான்2. தலை வணங்கினான்ஆல்தலையால் வணங்கினான்3. அரசன் மகன்குஅரசனுக்கு மகன்4. மலை வீழ் அருவிஇன்மலையின் வீழ் அருவி5. மலை உச்சிஅதுமலையினது உச்சி6. மாடப் புறாகண்மாடத்தின்கண் புறாவேற்றுமைப் பொருள் அல்லாத வழியில் நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.
உயர்திணை அல்லாத திணையை அஃறிணை (அல்+திணை= அஃறிணை) என்று கூறுவதைப் போன்று, வேற்றுமைப் பொருள் அல்லாத வழி என்பதை அல்வழி என்று தமிழ் இலக்கண நூலார் கூறினர்.
அல்வழிப் புணர்ச்சியில் தொகைநிலைப் புணர்ச்சி, தொகாநிலைப் புணர்ச்சி என இருவகைகள் உள்ளன.
- தொகைநிலைப் புணர்ச்சி
தொகைநிலைப் புணர்ச்சி ஐந்து வகைப்படும். அவை வருமாறு:
1. வினைத் தொகை- ஊறுகாய்
(ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய்)2. பண்புத் தொகை
- செந்தாமரை
(செம்மை ஆகிய தாமரை)3. உவமைத் தொகை
- தாமரை முகம்
(தாமரை போன்ற முகம்)4. உம்மைத் தொகை
- இராப்பகல்
(இரவும் பகலும்)5. அன்மொழித் தொகை
- பொற்றொடி
(பொன்னாலாகிய வளையலை உடையாள்)இத்தொகைகளில் வினைத் தொகையில் மூன்று கால இடைநிலைகளும், பண்புத் தொகையில் ஆகிய என்ற பண்பு உருபும், உவமைத் தொகையில் போன்ற என்ற உவமை உருபும், உம்மைத் தொகையில் உம் என்ற உம்மை உருபும், அன்மொழித் தொகையில் அல்லாத மொழியாகிய (சொல்லாகிய) உடையாள் என்பதும் தொக்கு வந்தன. எனவே இவை தொகை எனப்பட்டன.
- தொகாநிலைப் புணர்ச்சி
அல்வழியில் மற்றொரு வகைப் புணர்ச்சியான தொகாநிலைப் புணர்ச்சி ஒன்பது வகைப்படும். அவை வருமாறு:
1. எழுவாய்த் தொடர்- இராமன் வந்தான்2. விளித்தொடர்- இராமா வா3. பெயரெச்சத் தொடர்- வந்த இராமன்4. வினையெச்சத் தொடர்- வந்து போனான்5. தெரிநிலை வினைமுற்றுத் தொடர்- வந்தான் இராமன்6. குறிப்பு வினைமுற்றுத் தொடர்- நல்லன் இராமன்7. இடைச்சொல் தொடர்- மற்றொன்று8. உரிச்சொல் தொடர்- நனி நன்று (மிகவும் நன்று)9. அடுக்குத் தொடர்- பாம்பு பாம்புஇத்தொடர்களில் இருசொற்களுக்கு இடையே எந்த உருபும் மறைந்திருக்கவில்லை. எனவே இவை தொகாநிலைத் தொடர்கள் எனப்பட்டன.
மேலே கூறியவற்றால் அல்வழிப் புணர்ச்சி, தொகைநிலை ஐந்தும், தொகாநிலை ஒன்பதுமாக மொத்தம் பதினான்கு வகைப்படும் என்பது புலனாகும்.
வேற்றுமைப் புணர்ச்சி ஆறாகவும், அல்வழிப் புணர்ச்சி பதினான்காகவும் வகைப்பட்டு விளங்குவதை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
வேற்றுமை ஐம்முதல் ஆறாம், அல்வழி
தொழில், பண்பு, உவமை, உம்மை, அன்மொழி,
எழுவாய், விளி, ஈர் எச்சம், முற்று, இடை,உரி
தழுவுதொடர் அடுக்கு, என ஈர் ஏழே (நன்னூல், 152)(தொழில் = வினைத்தொகை; ஈர் எச்சம் = பெயரெச்சம் வினையெச்சம்; முற்று - ஈர் முற்று = தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று; ஈர்ஏழு = பதினான்கு.)
வேற்றுமைத் தொகைகள் பற்றியும், அல்வழியில் உள்ள தொகை நிலைத் தொடர்கள், தொகா நிலைத் தொடர்கள் பற்றியும் அடுத்து வரும் பருவங்களில் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்வீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.புணர்ச்சியில் வரும் இருசொற்களில் முதலாவதை நன்னூலாரும், தொல்காப்பியரும் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?7.கண்ணன், பொன், கொடுத்தான், குடம், மணி, அடித்தான் - இச்சொற்களில் பகுபதங்கள் எவை? பகாப்பதங்கள் எவை?