Primary tabs
2.0 பாட முன்னுரை
நிலை மொழியின் ஈற்று எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும் என்பதைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். நிலைமொழி ஈற்று எழுத்தும், வருமொழி முதல் எழுத்தும் ஒற்றோடொன்று புணர்வதை அடிப்படையாக வைத்தே நன்னூலார் பலவகையான புணர்ச்சி விதிகளை உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் கூறுகிறார். எனவே மொழிக்கு (சொல்லுக்கு) இறுதியில் எந்த எந்த எழுத்துகள் வரும், மொழிக்கு முதலில் எந்த எந்த எழுத்துகள் வரும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வது இங்கே மிகவும் இன்றியமையாதது ஆகும். இது பற்றி மொழியின் அமைப்பு என்ற பகுதியில் ஏற்கெனவே படித்துள்ளோம். இருந்தாலும், அதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்காக, அது பற்றிய நன்னூலார் கருத்துகள் இப்பாடத்தில் சுருக்கமாகக் கூறப்படுகின்றன.
நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் மற்றும் குற்றியலுகரத்தை வைத்து உயிர் ஈற்றுப் புணரியலையும், நிலை மொழியின் இறுதியில் வரும் மெய் எழுத்துகளை வைத்து மெய் ஈற்றுப் புணரியலையும் நன்னூலார் அமைத்துள்ளார். உயிர் ஈறுகளையும், மெய் ஈறுகளையும், குற்றியலுகர ஈற்றையும் கொண்ட நிலைமொழிகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மெய்களை முதலாகக் கொண்ட சில வருமொழிச் சொற்களோடு பொருந்தி வருவது பற்றிய பொதுவான புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் நான்கு நூற்பாக்களில் (நன்னூல், 158-161) கூறுகிறார். அவற்றைப் பற்றி இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.