Primary tabs
-
2.1 வாழும் கலைகள்
கலைகளை நம் முன்னோர் அறுபத்து நான்கு என எண்ணினர். இஃது ஒரு கற்பனையே! தமிழ் நூல்களில் முதன்முதலில் சிலப்பதிகாரமே கலைகளை அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகிறது. சில கலைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. நிலைபெற்ற கலைகளாக அறிஞர் சிலவற்றைக் குறிக்கின்றனர்.
இசைக்கலை
ஆடற்கலை
ஓவியக்கலை
சிற்பக்கலை
கட்டடக்கலைஇசைக்கலை, ஆடற்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, ஆகிய ஐந்து கலைகள் உலகம் எங்கும் வாழும் கலைகளாகும்.
பாடலும் இசையும் மனிதரை மட்டுமன்றி, பறவை விலங்கு, மரம்செடி கொடிகளையும் மயங்க வைப்பதாகத் தமிழ் இலக்கியத்திலும், புராணக் கதைகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
இதோ! காலைத்தூக்கி நின்று ஆடும் நடராசப் பெருமான் தோற்றத்தைப் பாருங்கள். உலகம் எல்லாம் இந்தக் காட்சியில் ஒன்றி விடுகிறதே! ஏன்? அதுதான் ஆடற்கலை.
தஞ்சைக் கோபுரத்தின் சுவரோவியம் பார்த்திருக்கிறீர்களா? சுந்தரரின் அழகான ஒவியத்தில் மயங்காத மாந்தர் இல்லை. இதோ! மாமல்லபுரச் சிற்பம் பாருங்கள். குகைக் கோயில்களைக் காணுங்கள். சிற்ப, கட்டடக்கலை மாட்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!
மாமல்லபுரச் சிற்பம்
குகைக் கோயில்2.1.1 கலையும் வாழ்வும்
கலையைத் தெய்வமாகப் போற்றினர் கலைஞர்கள். தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் கலைகளின் தெய்வம் நாமகள் என்ற கருத்துத் தோன்றியது. கலைத் தெய்வமாகிய கலைவாணி தங்களுக்கு எதையும் செய்வாள் எனக் கலைஞர்கள் நம்பினர். தமிழிலும் ஒரு கதை உண்டு. இதனை உண்மை நிகழ்ச்சியாகக் கொள்ள வேண்டாம்.
கம்பருக்கு அம்பிகாபதி என்று ஒரு மகன் இருந்தான். அவன் சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்தான். சோழ அரசனுக்கு இந்தச் செய்தி தெரிந்தவுடன் அம்பிகாபதியின் தலையை வெட்டிக் கொன்றுவிட ஆணையிட்டான். மன்னனிடம் உயிர்ப்பிச்சை வேண்டினார் கம்பர். நூறு பாடல்கள் காதல் கலக்காமல் பாடினால் உயிர்ப்பிச்சை தருவதாக மன்னன் கூறினான்.
அம்பிகாபதி பாடத் தொடங்கினான். கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணிவிட்டதால் 99 பாடல்கள் பாடியவுடன் நூறு பாடல்கள் பாடிவிட்டதாகக் கருதிக் கொண்டு நூறாவது பாடலாக அமராவதியை வருணித்துக் காதல் சுவை ததும்பப் பாடிவிட்டான். என்ன பாடினான் அவன்?
“சற்றே சரிந்த குழலே அசைய ஒருத்தி வருகிறாள்; முத்துவடம்
அசையும்
மார்போடு அவள் பொன்னாலாகிய தேர்போல் அசைந்து வருகிறாள்"
என்று பாடினான். விடுவானா அரசன்? வெகுண்டான்! ஆனால் கம்பர் தொடர்ந்து பாடினார்.
கொட்டிக்கிழங்கு விற்றுவரும் கிழவி ஒருத்தி மேலே சொன்னவாறு குழல் சரியவும், முத்துவடம் அசையவும் தெருவில் வருகிறாள் என்று பாடினார். அரசன் ஆளை அனுப்பித் தெருவில் பார்த்தால் உண்மையிலேயே அப்படி ஒரு கிழவி கிழங்கு விற்றுக்கொண்டு வருகிறாள். யார் அவள்? கலைமகள்தான் கம்பரைக் காப்பாற்ற அப்படி வந்தாளாம்!
கதை இருக்கட்டும் நண்பர்களே! காவியம் படைக்கும் கலைஞன் நினைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் இந்தக் கதை அறிவுறுத்துகின்றது என்பதை மறுக்க முடியுமா?
2.1.2 கலைஞர்கள் உள்ளம்
கலையில் தோய்ந்த உள்ளம் பொருளுக்காக அலையாது. தன் கலையைப் பொருளுக்கு விற்கவும் உடன்படாது. தன் கலையில் மனதைப் பறிகொடுத்து நிற்கும் ஓர் ஏழைக்குக் கட்டுப்பட்டு நிற்பான் கலைஞன்; ஆனால், தன் கலையை மதிக்காத செல்வர்களைப் பொருட்படுத்தமாட்டான்.
பழங்காலத்தில் புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசுபெற எண்ணினார். ஆனால் அரசன் அவரைச் சந்திக்க உடன்படவில்லை. புலவர் கோபமுற்று வேறு ஒரு வள்ளலை நாடிச் சென்றார். அங்கு அவ்வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வந்தார். வரும் வழியில் தன்னைக் காண மறுத்த அரசனின் வாயிலில் தான் பரிசாகப் பெற்றுவந்த யானைகளைக் கட்டிப்போட்டு 'இவற்றை என் பரிசாக ஏற்றுக்கொள்' என்று கூறிச் சென்றார். இவ்வாறு திறம் மிக்க கலைஞரின் உள்ளம் பண்பட்டு விளங்கியதைத் தமிழக வரலாற்றிலும், இலக்கியத்திலும் காண முடிகிறது.
-
தன் தகுதியை மதிப்பவரை மதித்தல்.
-
உணர்ச்சி ஒத்த நிலையில் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாதவர் ஆயினும் அவரிடம் நீங்காமல் பழகுதல்.
-
தன் கலைத்திறத்தை விரும்பிப் பாராட்டுவோரிடம் நேயம் கொள்ளுதல்.
-
வறுமையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுதல்.
-
தன் உரிமைகளை எந்த நிலையிலும் இழக்க உடன்படாதிருத்தல்.
ஆகியன கலைஞர்களின் உளப் பண்புகளாக இருந்தன
-
தமிழகக் கலைகள்
தமிழகம் கலைகளின் இருப்பிடம். ஒவ்வொரு கலைக்கும் இதோ ஒரு உதாரணம் கூறுகிறேன், கேளுங்கள்!
டி.என்.இராஜரத்தினம்"காற்றினிலே வரும் கீதம்..." இந்தத் தேனிசைக் குரல் யாருடையது தெரியுமா? இசைப் பேரரசியாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரல் இது! இதோ, இந்தத் தோடிப்பண் ஆலாபனை.... இது நாதசுரச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளையுடையது.
இதோ, இந்தத் தட்சிணாமூர்த்திச் சிற்பத்தைப் பாருங்கள்! இதோ திருமலை நாயக்கர் மகாலைக் காணுங்கள்! 216 அடி உயரத் தஞ்சைக் கோபுரத்தைப் பாருங்கள்!
சித்தன்னவாசல் ஓவியங்களைப் பாருங்கள்! இவையெல்லாம் தமிழகத்தின் அரிய கருவூலங்கள் ஆகும்.
-