Primary tabs
-
2.5 கட்டடக்கலை
யானைகளின் மீது உயர்த்திய கொடிகளோடு நுழையக்கூடிய பெரிய வாயில்கள், குன்றைக் குடைந்து சமைத்ததுபோல் அகன்ற இடைவெளி கொண்ட முகப்புகள், சுதையால் வெள்ளியைப் போல் பளபளப்பாகச் சாந்துபூசிக் கண்ணாடிபோல் இழைக்கப் பெற்ற சுவர்கள், கொடியும் மலரும் இயற்கைக் காட்சிகளும் என வீடுதோறும் வரையப் பெற்ற இனிய ஓவியங்கள் என்றவாறு அமைந்த பெரிய வீடுகளைப் பழங்காலத்தில் நகர் என்றே குறித்தனர். பண்டைக்காலத்தில் கட்டப்பெற்ற மாபெரும் அரண்மனைகள் எல்லாம் அழிந்து விட்டன. ஆனால் கோயில்கள் பல அழியாமல் இன்னும் தமிழர் கட்டடக்கலைப் பெருமையின் மாண்பைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
2.5.1 கோயிற் கட்டடக்கலை
செங்கணான் என்ற சோழ வேந்தன் பல்லவர் காலத்திற்கு முன்பே, அதாவது கி.பி. 600க்கு முன்னர் சிவபெருமானுக்கு எழுபத்தெட்டுக் கோயில்களைக் கட்டினான் என்று அறியப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் மலைகளைக் குடைந்து செய்த குகைக் கோயில்களும், கருங்கற்களை அடுக்கிச் செய்த கற்கோயில்களும் சமைக்கப் பெற்றன. திருநாவுக்கரசர் எனும் சைவக்குரவர் தம் காலத்தில் இருந்த கோயிற் கட்டட வகைகளைப் பற்றிக் கூறுகிறார்.
அவையாவன:
கரக்கோயில்
கொகுடிக்கோயில்
ஞாழற் கோயில்
இளங்கோயில்
மணிக்கோயில்
ஆலக்கோயில்
கோயிற்
கட்டட
வகைசிறப்பு
எடுத்துக்காட்டுகரக்
கோயில்வட்டமான
விமானமதிருக்கடம்பூர்கொகுடிக்
கோயில்வட்ட விமானத்தின் மேல்
கர்ண (தோடு வடிவக்) கூடம்திருக்கருப்பறியலூர்ஞாழற்
கோயில்ஞாழல் (ஒருவகை மரம்)
போன்று (குடை விரிந்த) அமைப்பு உடையது(இன்று இல்லை)இளங்
கோயில்பெருங்கோயிலைப்
பழுதுபார்க்கும்
பொழுது தெய்வ
உருவைத்
தற்காலிகமாக
வைக்கும் கோயில்கடம்பூர்மணிக்
கோயில்ஆறு அல்லது
எட்டுப்
பட்டைகளைச்
சிகரத்தில்
கொண்டதுசீனிவாசநல்லூர்ஆலக்
கோயில்மிக அகன்று
தாழ்ந்த மேற்
கூரையுடைய
கோயில்(இன்று இல்லை)கோயிற் கட்டட வகை.
வட்டமான விமானத்தை உடைய கோயில் கரக்கோயில் (திருக்கடம்பூர்) ஆகும். வட்டமான விமானத்தின் மேலே தோடு போன்ற அமைப்புடைய கர்ண கூடத்தைக் கொண்டது கொகுடிக் கோயில் (திருக்கருப்பறியலூர்) ஆகும். ஞாழல் என்பது அடர்ந்த மலர்கள் பூக்கும் ஒருமரம். இந்த மரம் போன்று குடை விரிந்த அமைப்புடையது ஞாழற் கோயில். இவ்வகைக் கோயில் இன்று இல்லை. இளங்கோயில் என்பது பெருங்கோயிலைப் பழுது பார்க்கும்போது தெய்வ உருவைத் தற்காலிகமாக வைக்கும் கோயில் ஆகும். இதனைப் பாலாலயம் என்றும் கூறுவர் (கடம்பூர்). மணிக் கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப் பட்டைகளைச் சிகரத்தில் கொண்டதாகும் (சீனிவாசநல்லூர்). ஆலக்கோயில் என்பது ஆலமரத்தின் கீழ் அமைந்தாற்போல அகன்று விரிந்த சிறப்புடைய கோயிலாகும். கோயிற் கட்டடக் கலையில் குறிப்பிடத்தக்கவை தூண்கள், மேற்கூரையின் உள்பகுதி, கோபுரம், தெய்வ உருவங்கள் ஆகியவை ஆகும்.
2.5.2 அரண்மனைகள்
கோட்டை கொத்தளங்கள், அகழிகள், கொலு மண்டபங்கள், யானை குதிரைக் கொட்டடிகள், அந்தப்புரங்கள் போன்றவற்றோடு கூடியது அரண்மனை. பண்டைக்காலத்து அரண்மனைகள் பலவும் அழிந்துவிட்டன. உறையூர், பூம்புகார், கருவூர், மதுரை, வஞ்சி ஆகிய நகரங்களிலிருந்த அரண்மனைகள் இன்று இல்லை.
2.5.3 கட்டடக்கலை மாட்சி
இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் பல செய்யப் பெற்ற மதுரை மீனாட்சி கோயில், திருவரங்கத் திருக்கோயில், மாணிக்கவாசகர் பணி செய்த திருப்பெருந்துறைக் கோயில், கழுகுமலைக் குடைவரைக் கோயில்கள் ஆகியன தமிழர்களின் கட்டடக்கலை மாட்சியைச் சுட்டிக் காட்டி நிற்கின்றன. வாழும் வீட்டை உறுதி மிக்கதாகக் கட்டிக் கொள்வதில் பண்டைத்தமிழர் கவனம் செலுத்தவில்லை. வழிபடும் திருக்கோயில்கள் காலத்தை வென்று நிற்கும்படி கட்டினர். எகிப்தின் பிரமிடுகள், கிரேக்கச் சிலைகள், உரோமானிய கலைக் கூடங்கள், பைசா நகர்க் கோபுரம், ஆக்ராவின் தாஜ்மகால் ஆகியவற்றுக்கு நிகராகத் தமிழகக் கோயிற் கட்டடக் கலை விளங்குவதை இன்றும் காணலாம்.