தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-தும்பைப் படலமும் துறைகளும்

  • 1.1 தும்பைப் படலமும் துறைகளும்

    வெட்சி முதல் நொச்சி வரையிலான போர்த் திணைகள் குறித்து முந்தைய பாடங்களில் படித்தறிந்தீர்கள். வெட்சி, கரந்தை ஆகிய திணைகள் ஆநிரை கவர்தலையும் மீட்டலையும் குறிக்கும் போர்த் திணைகள். வஞ்சி, காஞ்சி ஆகிய திணைகள் மண் கவர்தலையும் மீட்டலையும் குறிக்கும் போர்த் திணைகள். உழிஞை, நொச்சி ஆகிய திணைகள் கோட்டையைக் கவர்தலையும் மீட்டலையும் குறிக்கும் போர்த் திணைகள். இப்போர்களில் அரசர்களும் வீரர்களும் கவர்தல் மீட்டல் என்னும் செயல்களுக்கு ஏற்ப அவ்வப் பூக்களைச் சூடிக்கொண்டு போருக்குச் செல்வார்கள். சூடும் பூவின் பெயர், போருக்குரிய பெயராக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தும்பை என்பதும் பூவின் பெயர்தான். தும்பைப் போரில் ஆநிரை, மண், கோட்டை என்று ஏதேனும் ஒன்றைக் கவர்தலும் மீட்டலும் இல்லாமல் வலிமையே பொருளாகக் கொண்டு அரசர்கள் மோதுவார்கள். இதனால் வலிமையை நிலை நாட்ட வரும் அரசனும் அதனை எதிர்கொள்ளும் அரசனும் தும்பைப் பூவைச் சூடியே போர் புரிவர். இருவருமே தும்பை வேந்தர் என அழைக்கப்படுவர். தும்பைப் படலத்தில் குறிப்பிடப்படும் துறைகள் இரு வேந்தர்களுக்கும் பொதுவானவை.

    அதன் துறைகள் ஆகியவற்றின் பெயர்களைச் சூத்திரம் தொகுத்துச் சொல்கிறது.

    • தானை மறம்

    • யானை மறம்
    • குதிரை மறம்
    • தார் நிலை
    • தேர் மறம்
    • பாண்பாட்டு
    • இருவரும் தபு நிலை
    • எருமை மறம்
    • ஏம எருமை
    • நூழில்
    • நூழிலாட்டு
    • முன்தேர்க் குரவை
    • பின்தேர்க் குரவை
    • பேய்க் குரவை
    • களிற்றுடனிலை
    • ஒள்வாள் அமலை
    • தானை நிலை
    • வெருவரு நிலை
    • சிருங்கார நிலை
    • உவகைக் கலுழ்ச்சி
    • தன்னை வேட்டல்
    • தொகை நிலை

    என்பன தும்பைத் துறைகள். இவற்றில் தானை மறம், தார்நிலை, தன்னை வேட்டல் ஆகிய துறைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரால் தரப்பட்டுள்ளன.

    தொல்காப்பியத்தில் தும்பைத் திணைக்கு 12 துறைகள் மட்டுமே தரப்பட்டிருப்பது இங்கு நினைக்கத் தகும். தும்பை அரவம், தேர் மறம், பண்பாட்டு, முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை, பேய்க்குரவை, தானை நிலை, வெருவரு நிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல் முதலாயின புறப்பொருள் வெண்பா மாலையில் புதிதாகச் சொல்லப்பட்டுள்ள துறைகள். புறத்திணையின் வளர்ச்சியை இது உணர்த்துகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:13:07(இந்திய நேரம்)