தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- போர்க்களத்தில் வீரச்செயல்கள்

 • 1.5 போர்க்களத்தில் வீரச்செயல்கள்

  போர்க்களத்தில் வீரத்தினாலும் வெற்றி நோக்கத்தினாலும், செயல் ஊக்கத்தோடு போர் செய்யும் வீரர்களது செயல்கள் போற்றத்தக்கன. தும்பைப் போரில் அவ்வாறு காணப்படும் செயல்களைப் புறப்பொருள் வெண்பாமாலை காட்டுகிறது. படையின் வீரர்கள் எல்லோரும் புறமுதுகிட்டு ஓட ஒருவன் மட்டுமே ஓடாது பகைவரை எதிர்த்து அவர்களைத் தொடரவிடாமல் செய்தல், பகைவரது யானைமீது வேலெறிந்து உடல் வலியால் வெல்லுதல், பகைவரைக் கொன்ற வேலைச் சுழற்றிக் கொண்டு ஆடுதல், தன் மார்பில் பாய்ந்த வேலை எடுத்துப் பகைவர்மீது எறிதல் முதலான செயல்கள் போர்க்களத்தில் வெற்றிக்குக் காரணமாக அமைபவை. இவ் வீரச்செயல்கள் குறித்து எருமை மறம், ஏம எருமை, நூழில், நூழிலாட்டு முதலான துறைகள் கூறுகின்றன.

  1.5.1 எருமை மறம்

  எருமை போன்று தாங்கும் வீரம் என்பது இதன் பொருள். புறமுதுகிட்ட தன் படையினரைப் பாதுகாத்து நிற்றல் எருமை மறம். இத்தகைய ஆற்றலுடைய வீரர்களால் போரின் திசை மாறக்கூடும். இத்துறையை,

  வெயர்பொடிப்பச் சினம்கடைஇப்
  பெயர்படைக்குப் பின்நின்றன்று            - (கொளு-13)

  எனக் கொளு சுட்டுகிறது. ‘வியர்வை அரும்பச் சினம் கொண்டு புறமுதுகிட்ட தன் படையினருக்குப் பின்னே நிற்றல்’ என்பது இதன் பொருள்.

  இதற்குரிய வெண்பா,

  கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
  நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள்
  ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேல்ஊன்றி
  வாள்வெள்ளம் தன்மேல் வர

  என விளக்குகிறது. ‘நடுங்கத்தக்க போரில் படைவீரர் வெள்ளம் ஓடத் தறுகண் வீரன், பகைவரது வாள் வெள்ளம் தன்மீது பாய்ந்தும் பின்னிடாது களிற்றுப் பிணக்குவியலிடையே வேலை ஊன்றி நெருப்பு விழிப்பது போல விழித்து நின்றான். வீரன், எருமை போன்று குறுக்கிட்டு நிற்றலால் எருமை மறம் எனப் பெயர் பெற்றுள்ளது எனலாம். இதனைக் கூழை தாங்கிய மறம் எனத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.

  1.5.2 ஏம எருமை

  மிகுந்த உடல் வலிமை என்பது இதன் பொருள். வீரன் தன் கைவேலைப் பகைவர் யானைமீது வீசிவிட்டு உடல் வலிமையாலே போர் செய்து வெல்லுதலை ஏம எருமை என்பார்கள். இதன் கொளு,

  குடைமயங்கிய வாள்அமருள்
  படைமயங்கப் பாழிகொண்டன்று                 - (கொளு-14)

  என விளக்குகிறது. மன்னர் குடைகள் மோதிக் கொள்ளும் வண்ணம் நெருங்கிச் செய்த போரிலே வீரன் தன் ஆயுதத்தை விட்டு உடல் வலியால் வெற்றி பெறுதல் என்பது இதன் பொருள். ‘வேலைக் களிற்றின்மீது பாய்ச்சிய வீரன் தன் தோள்களையே கொம்பாகக் கொண்டு எருதுபோல் பாய்ந்து போரிட்டு வெற்றி கொண்டான்’ என வெண்பா விளக்குகிறது. பாழிகொள் ஏமம் எனத் தொல்காப்பியம் இதனைக் குறிப்பிடுகிறது.

  1.5.3 நூழில்

  நூழில் என்றால் கொன்று குவித்தல் என்று பொருள். கொன்று பின் தன் வேலைத் திரித்து ஆடுதலையும் அது குறித்தது. கொளு,

  கழல்வேந்தர் படைவிலங்கி
  அழல்வேல்திரித்(து) ஆட்டுஅமர்ந்தன்று          - (கொளு-15)

  ‘வீரக்கழல் அணிந்த பகைமன்னர் படையைக் கொன்று அழலும் வேலைத் திரித்து ஆடுதலை விரும்புதல்’ என்பது பொருள்.

  வெண்பா இதனை,

  ஆடலமர்ந்தான் அமர்வெய்யோன். . . . . .
  . . . . . . . . . . . . . . . . . .
  . . . . . ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
  திறந்தவேல் கையில் திரித்து.

  எனக் காட்டுகிறது. தொல்காப்பியர் நூழில் என்னும் துறையைக் குறிப்பிட்டுள்ளார். இதனை வெண்பா மாலை ஆசிரியர் நூழில், நூழிலாட்டு என இரண்டாக வகுத்துக் கூறியிருக்கிறார். நூழில் என்பதற்குத் தொல்காப்பியர் தந்துள்ள விளக்கத்தை அவர் நூழிலாட்டு என்ற துறைக்கு உரியதாக ஆக்கியுள்ளார்.

  1.5.4 நூழிலாட்டு

  வேலை ஆட்டுதல் என்பது இதன் பொருள். வீரன் தன் மார்பில் பாய்ந்த வேலைப் பறித்து எதிரிகளை ஓட்டுதலை நூழிலாட்டு என்கிறது வெண்பா மாலை. கொளு,

  களம்கழுமிய படைஇரிய
  உளம்கிழித்தவேல் பறித்துஓச்சின்று          - (கொளு-16)

  என விளக்குகிறது. ‘போர்க்களத்துக் கூடிய படைகள் ஓடத் தன் மார்பில் பதிந்த வேலைப் பறித்து எறிந்தது’ என்பது இதன் பொருள்.

  வெண்பா இதனை,

  மொய்யகத்து மன்னர் முரண்இனி என்னாம்கொல்
  கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய
  விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
  படுசுடர் எஃகம் பறித்து.

  எனக் காட்டுகிறது. ‘கழல் அணிந்த வீரன் தன் மணம் நாறும் மார்பைப் பிளந்த வேலைப் பறித்துத் தன் கையில் எடுத்துக்கொண்டான்; பகை மன்னர் என்னாவரோ?’ என்பது வெண்பா தரும் விளக்கம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:13:20(இந்திய நேரம்)