தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-வீரச் சிறப்பு

 • 1.7 வீரச்சிறப்பு

  போர்க்களத்தில் தனிப்பட்ட வகையில் வீரத்தைக் காட்டியவர்களின் பெருமைகளைப் பேசுவதுப் போரின் இறுதியில் நிகழும். வீரன் ஒருவனின் செயல் பாராட்டப்படுவது தானை நிலை. வியக்கத்தக்க வகையில் மாண்டதனைக் கூறும் வெருவருநிலை, வீரச்சிறப்புக் காட்டி இறந்தவனை மகளிர் தழுவ விரும்பும் சிருங்கார நிலை, கணவன் விழுப்புண்பட்டு இறந்தது கண்டு மனம் மகிழும் உவகைக் கலுழ்ச்சி, அரசன் இறக்க வீரன் தன் உயிரைக் களவேள்வி செய்தல் அல்லது, கணவன் இறக்க அவனைக் காண மனைவி வருதல் கூறும் தன்னை வேட்டல் ஆகிய துறைகள் வீரச்சிறப்பைப் பேசுகின்றன.

  1.7.1 தானை நிலை

  வீரம் மிக்க ஒருவனைப் போர்க்களத்தில் உள்ள அனைத்து வீரர்களும் பாராட்டுதல்.

  இருபடையும் மறம்பழிச்சப்
  பொருகளத்துப் பொலிவெய்தின்று.          - (கொளு-22)

  போர்க்களத்திலுள்ள இரு வேந்தர் படையும் தனது வீரத்தைப் பாராட்டும்படி மறவன் ஒருவன் சிறப்பெய்தியது. பகைவரது படை வலிமை பற்றிக் கவலை கொள்ளாது, தன் வாளையும் உறையிலிருந்து எடுக்காது, வாட்படை, குதிரைப் படை, யானைப் படை எனத் தம் படையினர் அனைவரையும் தாங்கித் தூண்போல நின்றவன் என வெண்பா சிறப்பினை விளக்குகிறது. ‘கம்பாகின்றான்’ என்று வெண்பாவில் கூறுவது சிலேடையாகத் தூண்போல நின்றான் என்றும் நடுக்கம் தரும் வகையில் நின்றான் என்பதும் இரு பொருள்பட அமைகிறது.

  1.7.2 வெருவருநிலை

  வெருவருநிலை என்பதற்கு அச்சம் விளைக்கும் நிலை என்று பொருள்.

  விலங்குஅமருள் வியல்அகலம் வில்உதைத்த கணைகிழிப்ப
  நிலம்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகைநிலை உரைத்தன்று -                                              (கொளு-23)

  பகைவரைத் தடுக்கும் போரில் அகன்ற மார்பில் அம்புகள் தைக்க இறந்து, அவ்வம்புகளாலே தாங்கப்பட்டுத் தரையில் படியாமல் குத்திட்டு நின்ற நிலையைச் சொல்லுதல். வெண்பா, வேற்போரினுள் அம்புகளை எய்ய உடம்பின் உயிர்நிலையான எவ்விடத்தும் அவை தைப்பச் சிவந்த கண்ணுடன் புலால்நாறும் வாளையும் கொண்டவனான வீரனின் உடலை நிலத்தில் விழாதபடி அம்புகள் தாங்கின என்கிறது. இது தொல்காப்பியத்தில் ‘யாக்கை இருநிலம் தீண்டா அருநிலைவகை’ எனச் சுட்டப்படுகிறது.

  1.7.3 சிருங்கார நிலை

  தழுவி இருத்தல் என்பது இதன் பொருள்.

  பகைபுகழக் கிடந்தானை
  முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று.            - (கொளு. 24)

  பகைவரும் புகழும் வண்ணம் வீர மரணம் அடைந்தானை முல்லைப் பற்களையுடையை பெண்கள் தழுவுதல். விழுப்புண்ணைப் பெற்று இறந்த வீரர்களின் புண்பட்ட மார்பை மனைவியர் தழுவிக் கொள்வர். இதனால் அவ்வீரர்களிடம் பரத்தையர் கொண்டிருந்த உரிமையைக் கெடுப்பர். அவ்வாறு வெண்பா விளக்குகிறது. இத்துறை தொல்காப்பியத்தில் இல்லை.

  1.7.4 உவகைக் கலுழ்ச்சி

  உவகைக் கலுழ்ச்சி என்பது உவகையும் வருத்தமும் கலந்த நிலை.

  வாள்வாய்த்த வடுவாழ்யாக்கைக்
  கேள்கண்டு கலுழ்ந்துவந்தன்று               - (கொளு-25)

  வாளால் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்த கணவன் உடம்பினைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துதல்.

  வெண்பா நயமாக வீரனின் பெருமையை உணர்த்துகிறது.

  வெந்தொழில் கூற்றமும் நாணின்று வெங்களத்து
  வந்த மறவர்கை வாள்துமிப்பப் - பைந்தொடி
  ஆடுஅரிமா அன்னான் கிடப்ப அகத்துவகை
  ஓடரிக்கண் நீர்பாய் உக.

  வீரர்களின் வாளால் வெட்டப்பட்டுச் சிங்கம் போல் கணவன் கிடக்க, அவனது வீரமரணம் கண்டு மனைவி உள்ளத்து மகிழ்ச்சியால் உவகைக் கண்ணீர் வடிக்க, அவனுயிரைக் கொண்ட கொடுந்தொழில் கூற்றம், தனக்கு இத்தகைய வீரம் இல்லையே என வருந்தியது என வெண்பா வீரத்தைச் சிறப்பிக்கிறது. இத்துறை தொல்காப்பியத்தில் சுட்டப்படவில்லை.

  1.7.5 தன்னை வேட்டல்

  தன்னை வேட்டல் என்பது தன்னைக் களப்பலியாகக் கொடுத்தல், தன் தலைவனைத் தேடி வருதல் என இருவகையாகப் பொருள்படும். புறப்பொருள் வெண்பா மாலை இத்துறைக்கு இருவகையாகவும் விளக்கம் தருகிறது.

  தம்மிறைவன் விசும்படைந்தென
  வெம்முரணான் உயிர்வேட்டன்று.               - (கொளு-26)

  தமது அரசன் விண்ணுலகை அடைந்தான் என வீரன் ஒருவன் தன் உயிரை ஆகுதியாகத் தந்தது. நெய்யைப் பெய்து நெருப்பை வளர்த்து வேள்வி செய்தலை உவமையாகக் கூறி வீரனின் களப்பலியைப் புலப்படுத்துகிறது வெண்பா. போராகிய நெருப்பில் வீரத்தை விறகாகவும், மானத்தை நெய்யாகவும், வாளை நெய் ஊற்றும் துடுப்பாகவும் கொண்டு தனது உயிரை வேள்வி செய்தான் என்கிறது வெண்பா.

  வானம் இறைவன் படர்ந்தென வாள்துடுப்பா
  மானமே நெய்யா மறம்விறகாத் - தேன்இமிரும்
  கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
  ஒள்ளழலுள் வேட்டான் உயிர்.

  தன்னை வேட்டல் என்பதற்கு இன்னொரு வகையாக விளக்கம் கூறுவர்.

  காய்கதிர் நெடுவேல் கணவனைக் காணிய
  ஆயிழை சேறலும் அத்துறை ஆகும்.              - (கொளு-27)

  பகைவரைக் கொல்கிற வேலினைக் கொண்ட கணவனைக் காண அவன் மனைவி போர்க்களம் நோக்கிச் சென்றது என்பது பொருள். கண்டோர் கூற்றாக, ‘தன் உயிராகிய கணவனைக் காண குடிப்பிறப்பையும் நாணத்தையும் மறந்து மனை எல்லையைக் கடந்து போரில் வீரர்கள் இறந்து கிடந்த போர்க்களத்திற்குத் தனியாக வந்தாள்’ என்று வெண்பா கூறுகிறது.

  1.7.6 தொகை நிலை

  தொகை நிலை என்றால் மொத்தமாக அழியும் நிலை என்பது பொருள்.

  அழிவு இன்று புகழ்நிறீஇ
  ஒரழிவுஇன்று களத்துஒழிந்தன்று               - (கொளு-28)

  அறியாதபடி தமது புகழை உலகில் நிலைநிறுத்திப் போரிட்ட இரு பெரும் வேந்தரும், படைஞரும் ஒருவர் எஞ்சாமல் மடிந்தது தொலைநிலை எனப்படுகிறது. இவ் அழிவு நிலையை வெண்பா உணர்ச்சி மிகக் காட்டுகிறது.

  மண்டமர்த் திண்தோள் மறங்கடைஇ மண்புலம்பக்
  கண்திரள்வேல் மன்னர் களம்பட்டார் - பெண்டிர்
  கடிதெழு செந்தீக் கழுமினார் இன்னும்
  கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று.

  தமது தோள் வலிமையைப் புலப்படுத்திப் பகை மன்னர் இருவரும் உலகத்தை ஆள ஆளில்லாத வகையில் மடிந்தனர். அவருடைய மனைவியரும் தீப்பாய்ந்தனர். இப்படியாயினும் இன்னும் கூற்றின் வயிறு நிரம்பவில்லை. கொடியதே கூற்று. தொகை நிலை என்பது தும்பைப் போரின் உச்சம். மொத்தமாக அழியும் அவலம் இதில் உணர்த்தப்படுகிறது. தொகைநிலை என்னும் துறை உழிஞைப் படலத்திலும் உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:13:27(இந்திய நேரம்)