தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெண்பாவின் வகைகள்

  • 1.4 வெண்பாவின் வகைகள்

    வெண்பா ஐந்து வகைப்படும். அவை குறள்வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல் வெண்பா ஆகியன. அடி எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் குறள், சிந்தியல் என்னும் பெயர்கள் அமைந்தன. ஓசையில் உள்ள சிறு வேறுபாடுகள் காரணமாக நேரிசை, இன்னிசை என்னும் பெயர்கள் அமைந்தன. பல தொடைகள் (பல அடிகள் தொடுத்து) வருவதன் காரணமாகப் பஃறொடை வெண்பா (பல்+தொடை) என்னும் பெயர் அமைந்தது. இவற்றைத் தனித்தனியாகக் காணும்போது, வகைகளின் பெயர்க்காரணத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

    1.4.1 குறள் வெண்பா

    · வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று இரண்டடியால் வருவது குறள் வெண்பா. அடி எண்ணிக்கையால் குறைந்தது, குறுகியது என்பதால் இப்பெயர் பெற்றது. (குறள் = குறுகிய வடிவம்)

    · இது ஒருவிகற்பத்தாலும் இருவிகற்பத்தாலும் வரும்.

    (எ.டு)

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்                          (திருக்குறள், 69)

    மேற்காட்டிய குறள்வெண்பா, வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது. ஈன்ற - சான்றோன் என ஒரே எதுகை அமைப்பு உள்ளதால் இது ஒரு விகற்பத்தால் வந்த குறள்வெண்பா. ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றுச்சீர் தாய் என்பது நாள் என்னும் வாய்பாடு கொண்ட அசைச்சீராகவும் அமைந்துள்ளது காண்க. சீர், தளை, ஓசை ஆகியவை வெண்பாவிற்குரியனவாக இருப்பதனை நீங்களே கண்டறியலாம்.

    (எ.டு)

    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி அன்னார் உடைத்து                     (திருக்குறள், 667)

    மேற்காட்டிய குறள்வெண்பா வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது. இது உருவு - அச்சாணி என எதுகை ஒரே அமைப்பில் இல்லாமையால் இருவிகற்பத்தால் வந்த குறள்வெண்பா. உடைத்து என்னும் ஈற்றுச்சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்துள்ளது.

    1.4.2 நேரிசை வெண்பா

    இயல்பான, நேரான இசையுடையது என்பது இப்பெயர் தரும் பொருள்.வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய், இரண்டாம் அடியின் இறுதிச்சீர் தனிச்சீராக வருவது நேரிசை வெண்பா என இப்பாவின் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். ஆயினும் காரிகை இந்தப் பாவை இரண்டு வகைகளாகப் பிரித்து விரிவாக விளக்குகிறது. காரிகை வழிநின்று அவற்றின் இலக்கணங்களைக் காணலாம். நேரிசை வெண்பா 1) இருகுறள் நேரிசை வெண்பா 2) ஆசிடை நேரிசை வெண்பா என இருவகைப்படும்.

    • இருகுறள் நேரிசை வெண்பா

    1) இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தி, முதற் குறள்வெண்பாவின் இறுதியில் ஒரு தனிச்சொல் (தனிச்சீர்) இட்டு, அடியை நிரப்பி, இருகுறள் வெண்பாக்களையும் இணைப்பது இருகுறள் நேரிசை வெண்பா.

    2) அவ்வாறு இடப்பெறும் தனிச்சொல் முதற்குறள் வெண்பாவின் இறுதிச் சீருடன், அதாவது மூன்றாம் சீருடன் வெண்டளைப் பொருத்தம் உடையதாக இருத்தல் வேண்டும். மேலும் முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் உடையதாகவும் இருத்தல் வேண்டும்.

    3) இப்பாடல் ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம். அதாவது நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்று ஒருவிகற்பத்தால் வரலாம் ; அல்லது முன்னிரண்டடி ஓர் எதுகை அமைப்பும், பின்னிரண்டடி வேறோர் எதுகை அமைப்பும் பெற்று இருவிகற்பத்தாலும் வரலாம்.

    (எ.டு)

    அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே
    பெரிய வரைவயிரம் கொண்டு - தெரியின்
    கரிய வரைநிலையார் காய்ந்தால்என் செய்வார்
    பெரிய வரைவயிரம் கொண்டு
            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (வரைகீண்டு = மலையைக் கல்லிப் பெயர்த்து ; வரைவயிரம் = வயிரம்பற்றிய மூங்கில் ; வரைநிலையார் = மலைபோன்ற உறுதியுடையார் ; காய்ந்தால் = சினந்தால்)

    மேற்காட்டிய பாடலில் ‘தெரியின்’ என்ற தனிச்சொல்லை நீக்கிவிட்டுப் பாருங்கள். இரண்டு குறள்வெண்பாக்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியும். ‘கொண்டு’ என்னும் சீர் ‘காசு’ என்னும் வாய்பாட்டையுடையது. இரு குறள் வெண்பாக்களையும் ‘தெரியின்’ என்னும் தனிச்சொல் இணைக்கின்றது. ‘கொண்டு - தெரியின்’ என முதற்குறள் வெண்பாவுடன் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை - இயற்சீர் வெண்டளை) அமைகிறது. அரிய - பெரிய - தெரியின் என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல் எதுகைப் பொருத்தமும் கொண்டுள்ளது. இவ்வாறு தனிச்சொல்லால் இணைக்கப்பட்டு நான்கடியும் ஒரேவிகற்பமாக (அரிய - பெரிய - கரிய - பெரிய) வருவதால் இப்பாடல் ஒருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா ஆகும்.

    (எ.டு)

    பதுமம் களிக்கும் அளியுடைத்துப் பாவை
    வதனம் மதர்நோக் குடைத்துப் - புதையிருள்சூழ்
    அப்போ தியல்பழியும் அம்போ ருகம்வதனம்
    எப்போதும் நீங்கா தியல்பு
    (தண்டியலங்காரம், வேற்றுமை அணி, உரைமேற்கோள்)

    (பதுமம் = தாமரை மலர் ; அளி = வண்டு ; அம்போருகம் = தாமரை மலர்)

    மேற்காட்டிய வெண்பாவில் இரு குறள் வெண்பாக்கள் அடுத்தடுத்து நிற்கின்றன. முதற்குறள்வெண்பா ‘பிறப்பு’ என்னும் வாய்பாட்டில் அமைந்த ‘உடைத்து’ என்னும் சீரில் முடிகிறது. இருகுறள் வெண்பாக்களையும் ‘புதையிருள்சூழ்’ என்னும் தனிச்சொல் இணைக்கிறது. உடைத்து - புதையிருள் சூழ் எனத் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை - இயற்சீர் வெண்டளை) அமைகிறது. பது - வத - புதை என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல்லுக்கு எதுகைப் பொருத்தமும் அமைந்துள்ளது. நான்கடிகளில் முதலிரண்டடிகள் ஒருவகை எதுகையும் (பது-வத) பின்னிரண்டடிகள் வேறுவகை எதுகையும் (அப்போது - எப்போதும்) கொண்டுள்ளதனால் இப்பாடல் இருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா.

    • ஆசிடை நேரிசை வெண்பா

    ஆசு = பற்றாசு ; பொற்கொல்லர் நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடி. இங்குச் சீர்களைத் தளை, ஓசைப் பொருத்தத்துடன் இணைக்கப் பயன்படுத்தும் ஒன்று அல்லது இரண்டு அசைகளை ‘ஆசு’ எனக் குறிப்பிடுகின்றனர். கீழ்வரும் விளக்கத்தைக் கவனம் கொள்ளுங்கள். இரண்டு குறள்வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தித் தனிச்சொல் கொண்டு இணைக்கும் போது, முதற்குறட்பாவுடன் தனிச் சொல்லுக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லையென்றால் வெண்பாவின் ஓசை கெடும். இதனைச் சரிசெய்ய முதற்குறட்பாவின் இறுதியில் ஓர் அசையோ, இரண்டசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செய்யப்படும். இவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப்படும் இணைப்பு அசைகளுக்கு ‘ஆசு’ என்று பெயர். ஆசு இடையிலே சேர்க்கப்பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். இது ஒருவிகற்பத்தாலோ இருவிகற்பத்தாலோ வரும்.

    (எ.டு)

    வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான் யானுமவன்
    வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
    வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
    வஞ்சியாய் வஞ்சியார் கோ
             (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (வஞ்சியேன் = வஞ்சி நகரத்தைச் சேர்ந்தவன் ; வஞ்சியான் = வஞ்சிக்க மாட்டான் ; வாய்நேர்ந்தேன் = ஏற்றுக் கொண்டேன் ; வஞ்சியாய் = வஞ்சியைச் சேர்ந்த தோழியே ; கோ = தலைவன்)

    மேற்காட்டிய பாடலில் முதற்குறள் வெண்பாவின் இறுதிச்சீர் ‘வாய்’ (நாள்சீர்)என முடிவதே பொருத்தம். ஆனால் அச்சீர் வாய் - வஞ்சியான் எனத் தனிச்சொல்லுடன் தளைப்பொருத்தமின்றிச் செப்பலோசை கெடுகிறது. ஆகவே ‘வாய்’ என்பதுடன் நேர்ந்-தேன் எனும் இரண்டசைகள் ஆசுகளாகச் சேர்க்கப்பட்டன. இப்போது வாய்நேர்ந்தேன் - வஞ்சியான் என்பது காய்முன்நேர் என வந்து வெண்சீர் வெண்டளை அமைகிறது. வெண்பாவின் ஓசை சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு வருவதனால் இது ஆசிடை நேரிசை வெண்பா ஆகும். நான்கடியும் ஒரே எதுகை அமைப்பில் வருவதனால் இது ஒரு விகற்பத்தால் வந்த ஆசிடை நேரிசை வெண்பா ஆகும்.

    இனிக் குறள் வெண்பா, நேரிசை வெண்பா ஆகியவற்றின் இலக்கணம் கூறும் யாப்பருங்கலக் காரிகை நூற்பாவைக் காணலாம்.

    ஈரடி வெண்பாக் குறள் ; குறட் பாவிரண் டாயிடைக்கண்
    சீரிய வான்தனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா
    தோரிரண் டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல்
    நேரிசை யாகும் நெரிசுரி பூங்குழல் நேரிழையே
                    
    (காரிகை, 23)
    பொருள் : இரண்டடியால் ஆன வெண்பா குறள் வெண்பா. இரண்டு குறள் வெண்பாக்கள் இடையே ஒரு தனிச்சொல்லால் அடி நிரம்பிச், செப்பலோசை குன்றாமல், இருவிகற்பமாகவோ ஒருவிகற்பமாகவோ வருவது நேரிசை வெண்பா.

    1.4.3 இன்னிசை வெண்பா

    · வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா எனப்படும்.

    · இது ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரும். இங்குப் பல விகற்பம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விகற்பங்களைக் குறிக்கும். தடையின்றி வரும் ஓசை காரணமாக இது இன்னிசை வெண்பா எனப்பட்டது.

    (எ.டு)

    துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்
                         (நாலடியார், 2)

    (துகடீர் = துகள்தீர் = குற்றமற்ற ;    பகடு = எருது ; கூழ் = உணவு ; அகடுற = நிலையாக; சகடக்கால = வண்டிச்சக்கரம்)

    மேற்காட்டிய பாடல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது. இது நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி ஒருவிகற்பத்தால (துக-பக-அக-சக) வந்த இன்னிசை வெண்பா ஆகும்.

    (எ.டு)

    இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
    பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
    ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
    மருவுமின் மாண்டார் அறம்
    .                     (நான்மணிக்கடிகை, 18)

    (பின்றையே = பின்னால்; ஒருவுமின் = நீங்குக ; மருவுமின் = தழுவிக்கொள்க ; மாண்டார் = மாட்சிமைப்பட்டோர்)

    மேற்காட்டிய பாடல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருகிறது. ஆகவே இது இன்னிசை வெண்பா. இன்று - பின்றை என ஒருவிகற்பமும், ஒருவு - மருவு என மற்றொரு விகற்பமும் பெற்றுள்ளது. ஆகவே இது பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா ஆகும்.

    • பிறவகை இன்னிசை வெண்பாக்கள்

    இன்னிசை வெண்பாவின் தனி அடையாளம் அது தனிச்சொல் இன்றி இருப்பதுதான். ஆயினும் தனிச்சொல் பெற்று, நேரிசை வெண்பாவில் அடக்கமுடியாதவாறு சில மாறுபாடுகளைக் கொண்டுள்ள நான்கடி வெண்பாக்களை இன்னிசை வெண்பாவினுள் அடக்குகின்றனர் இலக்கணக் காரர்கள். அவை கீழ்வருமாறு :

    1. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று     மூன்று விகற்பத்தால் வருவன.

    2. மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று      இரண்டு விகற்பத்தால் வருவன.

    3. அடிதோறும் ஒரூஉத் தொடை (முதற்சீரிலும் நான்காம்     சீரிலும் எதுகை) பெற்று வருவன.

    மேற்குறிப்பிட்டவற்றுள் முதலாவது வகைக்கு மட்டும் எடுத்துக்காட்டுக் காண்போம்.

    மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
    ஒலியும் பெருமையும் ஒக்கும் - மலிதேரான்
    கச்சி படுவ கடல்படா கச்சி
    கடல்படுவ எல்லாம் படும்

    (தண்டியலங்காரம், வேற்றுமை அணி, உரைமேற்கோள்)

    (மலி = மிகுந்த ; கச்சி = காஞ்சிபுரம் ; படுவ = தோன்றுபவை)

    மேற்காட்டிய வெண்பாவில் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் வருவது காண்க. மலி - ஒலி ; கச்சி - கடல் என மூன்று விகற்பங்கள் வந்துள்ளன. இவ்வகையில், இது நேரிசை வெண்பாவில் அடங்காது மாறுபடுவதையும் உணர்க.

    1.4.4 பஃறொடை வெண்பா

    பல் + தொடை = பஃறொடை. ஒரு தொடை என்பது இரண்டடிகளைக் குறிக்கும். பலதொடை = பல இரண்டடிகள். அதாவது, வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடிக்கும் அதிகமான அடிகளைப் பெற்று வருவது பஃறொடை வெண்பா ஆகும். இது ஒருவிகற்பத்தாலும், பலவிகற்பத்தாலும் வரும்.

    (எ.டு)

    பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
    என்னோடு நின்றார் இருவர் ; அவருள்ளும்
    பொன்னோடை நன்றென்றாள் நல்லளே ; பொன்னோடைக்
    கியானைநன் றென்றாளும் அந்நிலையள் ; யானை
    எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்
    திருத்தார்நன் றென்றேன் தியேன்
            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (ஓடை = யானையின் முகபடாம், அணி ; எருத்தம = பிடரி ; தியேன் = தீயேன்)

    மேற்காட்டிய வெண்பா ஆறடியால் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா ஆகும். பன்-என்-பொன், கியா, எருத்த-திருத்தார் எனப் பல விகற்பங்கள் அமைந்துள்ளமை காண்க.

    இனி, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவற்றின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காண்போம்.

    ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
    இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னும் அடிபலவாய்ச்
    சென்று நிகழ்வது பஃறொடை யாம்................

                 (யாப்பருங்கலக் காரிகை, 24)

    பொருள் : நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலோ, பல விகற்பத்தாலோ வருவது இன்னிசை வெண்பா ; நான்குக்கும் மிகுதியான பல அடிகளால் வருவது பஃறொடை வெண்பா.

    1.4.5 சிந்தியல் வெண்பா

    இரண்டடியாலும், நான்கடியாலும், பல அடியாலும் வரும் வெண்பாக்களை அறிந்தோம். இனி, மூன்றடியால் அமையும் வெண்பாவின் இலக்கணம் காண்போம். வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா எனப்படும். குறுகிய அடி எண்ணிக்கையுடைய வெண்பா குறள்வெண்பா எனப்பட்டது போலவே, அடி எண்ணிக்கையில் சிறியதாக (சிற்றியல் - சிந்தியல்) உள்ள வெண்பா சிந்தியல் வெண்பா எனப் பெயர் பெற்றது. இது 1) நேரிசைச் சிந்தியல், 2) இன்னிசைச் சிந்தியல் என இருவகைப்படும்.

    • நேரிசைச் சிந்தியல் வெண்பா

    மூன்றடியாய், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தாலோ, இரண்டு விகற்பத்தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் பெறுவதால் இது இப்பெயர் பெற்றது.

    (எ.டு)

    அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
    செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப - செறிந்தார்
    சிறந்தமை ஆராய்ந்து கொண்டு

             (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (அறிந்தான் = கடவுள் ; செறிந்தார் = புலமை மிகுந்தவர் ; செவ்வன் = செம்மையாக ; உரைப்ப = உரைப்பர்)

    மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய், இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தால் (அறி-செறி-சிற) வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

    • இன்னிசைச் சிந்தியல் வெண்பா

    மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலோ பலவிகற்பத்தாலோ வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும். இன்னிசை வெண்பாப்போலத் தனிச்சொல் இன்றி வருவதால் இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்னும் பெயர் பெற்றது.

    (எ.டு)

    சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
    யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
    கானக நாடன் சுனை
             (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (ஆழ = மூழ்க ; வரை = மலை ; நீத்து = நீந்துதல் ; நிலை = நிற்றல், சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயலுக்கு நீத்து என மொழி (சொல்) மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.)

    மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றிப் பலவிகற்பத்தால் (சுரை - யானை, கான) வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

    இதுவரை, வெண்பாவின் ஐந்து வகைகளுக்கும் உரிய இலக்கணங்களை விரிவாக அறிந்தோம். வெண்பாவின் பொது இலக்கணத்தில் வெண்பாவின் ஈறு எவ்வாறமையும் என்பதைப் பார்த்தோம். ஈறு பற்றி யாப்பருங்கலக் காரிகை தனியே எடுத்துரைத்துள்ளது. அதனை இனிக் காண்போம்.

    1.4.6 வெண்பாவகைகளின் ஈறு

    வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாக வரும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர் என்னும் வாய்பாடுகளையுடைய அசைச்சீராக வரும். அசைச்சீர் மட்டுமன்றி ஈரசைச் சீர்களுள் நேரசையில் முடியும் சீர்களும் (நேர் ஈற்று இயற்சீர்) வெண்பாவின் ஈற்றுச் சீராக வரலாம். ஆனால் அந்த நேர் ஈற்று இயற்சீர்கள் (நேர்நேர், நிரைநேர்) குற்றியலுகரத்தில் முடிவனவாக இருக்க வேண்டும். அவற்றிற்குரிய வாய்பாடுகள் காசு (நேர்நேர்), பிறப்பு (நிரைநேர்) என்பனவாகும். இவ்விரண்டு வாய்பாடுகளும் குற்றியலுகரத்தில் (சு,பு) முடிந்திருப்பதைக் காணலாம்.

    (எ.டு)

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்         (திருக்குறள், 10)

    மேற்காட்டிய வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள் சீர் ஆகும்.

    (எ.டு)

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக         (திருக்குறள், 391)

    மேற்காட்டிய வெண்பாவின் ஈற்றுச்சீர் மலர்ச்சீர் ஆகும்.

    (எ.டு)

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு         (திருக்குறள், 987)

    மேற்குறித்த வெண்பாவின் ஈற்றுச்சீர் காசு என்னும் வாய்பாட்டுச் சீர் ஆகும்.

    (எ.டு)

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு                 
    (திருக்குறள்,1)

    இப்பாடலின் ஈற்றுச்சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.

    வெண்பாக்கள் சிலவற்றில் ஈற்றுச்சீர் முற்றியலுகரத்தில் முடிவடையும் நேரீற்றியற்சீராக வருவதும் உண்டு. அவற்றையும் காசு, பிறப்பு எனும் வாய்பாட்டிலேயே அடக்கிக் கூறுவர்.

    (எ.டு)

    இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன்
    புனைமலர்த் தாரகலம் புல்லு
            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்.)

    (கோதாய் = மாலை அணிந்தவளே!; சேர்ப்பன் = கடல் துறைத் தலைவன்; தார் = மாலை ; அகலம் = மார்பு ; புல்லு = அணைத்துக் கொள்)

    (எ.டு)

    மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்
    அஞ்சொல் மடவாட் கருளு
            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (அஞ்சொல் = அழகிய சொற்கள்; மடவாட்கு = மடவாளுக்கு, இளந்தலைவிக்கு; அருளு = அருள்செய்)

    மேற்காட்டிய பாக்களில் புல்லு, அருளு என வரும் ஈற்றுச் சீர்கள் லு, ளு எனும் முற்றியலுகரங்களில் முடிவடைந்துள்ளன. (கு, சு, டு, து, பு, று அல்லாத ஏனைய உகர ஈறுகள் முற்றியலுகரங்களே என்பதை எழுத்திலக்கணத்தில் அறிந்திருப்பீர்கள்). இச்சீர்கள் நேரீற்று இயற்சீர்கள். ஆகவே இவற்றைக் காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டுச் சீர்களாக ஏற்றுக் கொள்கிறது யாப்பிலக்கணம்.

    இனிச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணத்தையும் வெண்பாவின் ஈற்றடி அமைப்பையும் கூறும் காரிகை நூற்பாவைக் காணலாம்.

    நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்
    நேரிசை இன்னிசைச் சிந்தியல் ஆகும் ; நிகரில்வெள்ளைக்
    கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற
    சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே

                 (யாப்பருங்கலக் காரிகை, 25)

    பொருள் : நேரிசை வெண்பாப் போல இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெற்று, மூன்றடியாய் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. இன்னிசை வெண்பாப் போலத் தனிச்சொல் இன்றி, மூன்றடியாய் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வெண்பாவின் ஈற்றடி சிந்தடி (முச்சீரடி)யே யாகும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராகவோ, காசு பிறப்பு என்னும் வாய்பாடுகளையுடைய, குற்றியலுகர ஈறுகொண்ட நேரீற்று இயற்சீராகவோ வரும்.

    • மாணவர் கவனத்திற்கு

    யாப்பிலக்கணத்தில் சில பெயர்களில் மாணவர்க்குக் குழப்பம் நேர்வதுண்டு. அடி இலக்கணத்தில் (உறுப்பியல்) குறள்அடி, சிந்தடி எனவரும் பெயர்களையும் பா இலக்கணத்தில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா எனவரும் பெயர்களையும் தெளிவாக வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும். குறள் அடி இருசீர்களால் ஆகிய அடி ; குறள் வெண்பா இரண்டு அடிகளால் ஆகிய வெண்பா. சிந்தடி மூன்று சீர்களால் ஆகிய அடி ; சிந்தியல் வெண்பா மூன்று அடிகளால் ஆகிய வெண்பா.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வெண்பா எவ்வகை அடிகளால் ஆகியது?
    2.
    செப்பலோசை எத்தனை வகைப்படும்?
    3.
    ஏந்திசை அகவல் ஓசையின் இலக்கணம் யாது?
    4.
    வெண்பாவின் வகைகள் யாவை?
    5.
    நேரிசை வெண்பா எத்தனை விகற்பங்கள் பெறும்?
    6.
    நேரிசை - இன்னிசை வெண்பாக்களிடையே முக்கியமான வேறுபாடு யாது?
    7.
    பஃறொடை வெண்பா - பெயர்க்காரணம் தருக.
    8.
    மூன்றடியால் ஆகிய வெண்பாவின் பெயர் தருக.
    9.
    வெண்பாவின் இறுதியில்     வரும் நேரீற்றியற்சீர்களின் வாய்பாடுகள் தருக.
புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 15:40:05(இந்திய நேரம்)