தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியப்பாவின் இனங்கள்

  • 3.3 ஆசிரியப்பாவின் இனங்கள்

    ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் எனும் மூன்றும் ஆசிரியப்பாவின் இனங்கள் ஆகும். ஆசிரியப் பாவுக்கும் அதன் இனங்களுக்கும் இடையேயான ஒற்றுமை மேலோட்டமானதே என்பதை இனங்களின் இலக்கணத்தை அறியும்போது புரிந்து கொள்வீர்கள்.

    3.3.1 ஆசிரியத் தாழிசை

    ஆசிரியத் தாழிசை என்பது,

    (i) மூன்றடியாய் வரும்.

    (ii) மூன்றடியும் சீர் எண்ணிக்கையால் அளவு ஒத்து வரும்.

    (iii) தனியே மூன்றடியாய் வருவது மட்டுமன்றி, மூன்று தாழிசை ஒருபொருள் மேல் அடுக்கி வருவதும் ஆசிரியத்தாழிசையே.

    தனியாக வருவதைஆசிரியத் தாழிசை எனவும்,ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவதை ஆசிரிய ஒத்தாழிசை எனவும் குறிப்பிடுவர்.

    (எ.டு)

    வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
    பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
    நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்

             (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (பான்மதி = பால்மதி, பால்போன்ற நிலவு ; நீனிற வண்ண = நீலநிறமுடைய திருமாலே ; நிரைகழல் = இரு பாதங்கள்)

    மேலேயுள்ள பாடல் மூன்றடியாய், அடிதோறும் நான்குசீர்கள் அளவு ஒத்து வந்திருப்பதால் இது ஆசிரியத் தாழிசை.

    (எ.டு)

    கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
    இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    கொன்றையம் தீங்குழல் களோமோ தோழி !

    பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
    ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    ஆம்பலந் தீங்குழல் களோமோ தோழி !

    கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
    எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    முல்லையந் தீங்குழல் களோமோ தோழி !

             (சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை 1, 2, 3)

    (குணில் = குறுந்தடி ; ஆன் = பசுக்கள் இருக்குமிடம்,ஆயர்பாடி; களோமோ = கேட்போமா ;குருந்து = குருந்த மரம் ;ஒசித்த= அழித்த ; எல்லி = பகற்பொழுதில்.கொன்றை, ஆம்பல்,முல்லை என்பவற்றைச் சிலர் கருவி எனவும் பொருள் கொள்வர்)

    மேற்காட்டிய பாடல் மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவதுடன், ஒருபொருள்மேல் மூன்று தாழிசைகள் அடுக்கியும் வந்துள்ளன. ‘கண்ணன் நம் ஆயர் பாடிக்கு வந்தால் அவனிடம் புல்லாங்குழல் கேட்போம்’ என மகளிர் பாடி ஆடுவதாக வரும் ஒரே பொருள்தான் மூன்று தாழிசைகளிலும் அடுக்கி வருகிறது. மாயவன், ஆனுள் வருமேல் அவன்வாயில், தீங்குழல் களோமோ தோழி என்னும் தொடர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. இவ்வாறு ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவருவதால் இது ஆசிரிய ஒத்தாழிசையாகும்.

    3.3.2 ஆசிரியத் துறை

    ஆசிரியத் துறை என்பது,

    (i) நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வரும்.

    (ii) இடையே வரும் அடிகள் இடைமடக்காகவும் ( வந்த அடியே திரும்பவும் அடுத்த அடியாய் வருதல்) வரும்.

    (iii) நான்கடியாய் இடையிடை குறைந்து வருவதும் உண்டு.

    (iv) நான்கடியாய் இடை இடை குறைந்து, இடைமடக்காக வருவதும் உண்டு.

    (v) ஆசிரியத் துறையில் எவ்வகைச் சீரும் வரலாம் ; எவ்வகை அடியும் வரலாம். மிக நீண்ட கழிநெடிலடிகள் கூட வரலாம்.

    (vi) ஈற்றயலடி மட்டும் குறைந்து வரும் ஆசிரியத்துறை ஆசிரிய நேர்த்துறை என்றும், இடையிடை குறைந்து வருவது ஆசிரிய இணைக்குறள் துறை என்றும் கூறப்படும்.

    (எ.டு)

    வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே
                              போலத்
    தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மாவினவித்
                         தணந்தோன் யாரே
    தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்துநம்
    பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து
                         படர்ந்தோ னன்றே


            
    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (வண்டுளர் = வண்டுகள் ஒலிக்கின்ற ; தார் = மாலை; செம்பூட்சேய் = சிறந்த அணிகளை அணிந்த முருகக் கடவுள்; பிண்டி = அசோகமரம் ; மா = விலங்கு ; தணந்தோன் = நீங்கியவன் ; பதி = ஊர் ; படர்ந்தோன் = சென்றவன்)

    இப்பாடல், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, இரண்டாமடியே இடைமடக்காகி மூன்றாம் அடியாக வந்துள்ளது காண்க. ஆகவே இது ஆசிரியத்துறை. இதனை ஆசிரிய நேர்த்துறை எனவும் கூறலாம்.

    (எ.டு)

    இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா
    அரங்கு மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்
    அரங்கு மணிபொழிலா ஆடு மாயின்
    மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிளவேனில்

             (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (இரங்கு = கூவுகின்ற ; தேன் = வண்டு ; மணிபொழில் = அழகிய சோலை)

    இப்பாடல் நான்கடியாய் இடையிடை குறைந்து (முதலடியும், மூன்றாமடியும் ) வந்திருக்கிறது. இரண்டாமடியே மடங்கி மூன்றாமடியாய் வந்துள்ளது. ஆகவே இது ஆசிரிய இணைக்குறள் துறை ஆகும். நீண்ட கழிநெடிலடிகளும் ஆசிரியத் துறையில் வரலாம் எனக் கண்டோம் அல்லவா! எடுத்துக்காட்டுக்காக ஆசிரியத் துறையில் உள்ள ஒரு நீண்ட அடியை மட்டும் காணலாம்.

    (எ.டு)

    கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழில்நிறக்
             குருதிக் கோட்டின் இருந்தாள் பெருங்கைக்
             குன்றாமென அன்றாமெனக்
             குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்


    (குருமுகம = ஒளிமுகம் ; கோடு = கொம்பு ;இருந்தாள் = கரிய கால்கள் ; வேழம் = யானை)

    இது பதினான்கு சீர்கள் கொண்ட ஓரடி.

    3.3.3 ஆசிரிய விருத்தம்

    பாவினங்களுள் விருத்த வகைகளே தமிழ் இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவன. கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி, பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், சீறாப்புராணம் போன்ற பெருங்காப்பியங்களில் மிகப்பெரும்பான்மையாக அமைந்திருப்பவை விருத்தங்களே. சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்களாக வருபவற்றுள் ஆசிரிய விருத்தங்கள் பல உள்ளன.அக்காலத்தில் அவற்றுக்கு இப்பெயர் இல்லை.தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றிலும் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற நூல்கள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவையே. இந்த அளவுக்கு இவை புலவர்களிடையேயும், படிப்போரிடையேயும் சிறப்புப் பெறுவதற்குக் காரணம் இவற்றின் இனிய சந்த ஓசை அமைப்புகளேயாகும். இனி ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் காண்போம்.

    (i) நான்கு கழிநெடிலடிகளால் ஆகி, நான்கடியும் அளவொத்து வருவது ஆசிரிய விருத்தம்.

    (ii) நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

    (iii) நான்கடியும் ஒரே வகையான சந்த ஒழுங்கைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது முதலாம் அடி‘விளம் மா தேமா விளம் மா தேமா’எனும் சீர் அமைப்பைப் பெற்றிருந்தால் எஞ்சிய மூன்றடிகளும் அதே விதமான சீர் அமைப்பையே பெற்று வரவேண்டும். இதுவே சந்த ஒழுங்கு எனப்படுவது. சந்த அமைப்பில் பல்வேறு வகைகளைப் புலவர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.

    (iv) கழிநெடிலடிகள் என்பதனால் ஓர் அடியில் ஆறுசீர்களும் ஆறுக்கு மேற்பட்ட எத்தனை சீர்களும் வரலாம். ஆயினும் ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் எனவும்,அதற்கு மேல் வருவன சிறப்பில்லாதவை எனவும் கூறுவர்.

    (v) ஆசிரிய விருத்தத்தை அதில் உள்ள சீர்களின் எண்ணிக்கை கொண்டு வகைப்படுத்துவர். அறுசீரடிகளால் வருவது அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். எழுசீரடிகளால் வருவது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்வாறே பிறவும் பெயர் பெறும்.

    • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    அறுசீர் அடிகள் நான்கு ஒரே எதுகைஅமைப்பில் வருவது. முதலடியின் சந்த ஒழுங்கு ஏனைய அடிகளிலும் வரும். இவை நீங்கள் அறிந்தவை. சந்த ஒழுங்குகள் பலவகையாக அமையும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை,

    விளம்
    மா
    தேமா
    விளம்
    மா
    தேமா
    மா
    மா
    காய்
    மா
    மா
    காய்
    காய்
    காய்
    காய்
    காய்
    மா
    தேமா

    என்பன. ஒவ்வொன்றுக்கும் ஓர் எடுத்துக் காட்டுக் காண்போம்.

    (எ.டு)

    புவியினுக் கணியாய் ஆன்ற
    பொருள்தந்து புலத்திற் றாகி
    அவியகத் துறைகள் தாங்கி
    ஐந்திணை நெறிய ளாவிச்
    சவியுறத் தெளிந்து தண்ணென்
    றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
    கவியெனக் கிடந்த கோதா
    வரியினை வீரர் கண்டார்

                 (கம்பராமாயணம், சூர்ப்ப. 1)

    (புலம் = அறிவு ; அவி = கட்டுள்ள; ஐந்திணை நெறி = முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ; சவி = அழகு ; ஒழுக்கம் = ஒழுக்கம், ஒழுகிச்செல்லல்)

    மேற்கண்ட அறுசீர்விருத்தத்தில் ‘விளம் மா தேமா விளம் மா தேமா’ எனும் சந்த ஒழுங்கு எல்லா அடிகளிலும் அமைந்திருப்பதைப் பாருங்கள்.‘பொருள்தந்து’ எனும் சீர் மட்டும் புளிமாங்காய்ச் சீர். விளச்சீருக்குப் பதிலாக மாங்காய்ச்சீரும் வரலாம்.

    (எ.டு)

    வெய்யிற் கேற்ற நிழலுண்டு
           வீசும் தென்றற் காற்றுண்டு
    கையில் கம்பன் கவியுண்டு
    கலசம் நிறைய மதுவுண்டு
    தெய்வ கீதம் பலவுண்டு
    தெரிந்து பாட நீயுண்டு
    வையம் தருமிவ் வளமன்றி
    வாழும் சொர்க்கம் வேறுண்டோ

                  (உமார்கய்யாம் பாடல், கவிமணி)

    மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தம் ‘மா மா காய் மா மா காய்’ எனும் சந்த ஒழுங்கை எல்லா அடிகளிலும் கொண்டு அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

    (எ.டு)

    வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி
              மேலும் கீழும்
    எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி
               இழைத்த வாறோ
    கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில்
              கரந்த காதல்
    உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ
               ஒருவன் வாளி

               (கம்பராமாயணம், இராவணன்வதை, 237)

    (சடைமுடியான் = சிவன் ; வெற்பு = மலை, கைலாய மலை ; கள் = தேன் ; கரந்த = ஒளித்துவைத்த ; ஒருவன் = இராமன் )

    மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘காய் காய் காய் காய் மா தேமா’ எனும் சந்த அமைப்பு எல்லா அடிகளிலும் வந்திருப்பது காண்க.

    • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    எழுசீரடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. எழுசீர் விருத்தச் சந்தங்களுள் சிறப்பானது ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ என்னும் சந்தமாகும். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீரும் வரலாம்.

    (எ.டு)

    தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்
    தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
    பிடித்தொரு தந்தை அணைப்பனிங் கெனக்குப்
    பேசிய தந்தையும் தாயும்
    பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
    புனிதநீ ஆதலால் என்னை
    அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
    அம்மையப் பாவினி ஆற்றேன்

                     (திருவருட்பா, 3386)

    (பொடித்திருமேனி = சுடலைப்பொடி பூசிய மேனி ; அம்பலம் = சிதம்பரம்)

    மேற்காட்டிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது. ‘அணைப்பள்தாய்’ என ஒரு சீர் மட்டும் புளிமாங்காய்ச்சீர். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில்
    மாங்காய்ச்சீர் வரலாம் என முன்பே பார்த்தோம்.

    • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. பாரதிதாசன் போன்றோர் எண்சீர் விருத்தத்தால் முழுக் காவியங்களே (பாண்டியன்பரிசு) பாடியுள்ளனர். மிகுந்த பெருவழக்குடைய எண்சீர் விருத்தத்தில் இருவகைச் சந்தங்கள் சிறப்பானவை. அவற்றை இனிக் காணலாம். காய் காய் மா தேமா காய் காய் மா தேமா எனவருவது ஒருவகை எண்சீர் விருத்தம்.

    (எ.டு)

    காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
             கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
    சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
             தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்
    மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
             மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
    சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
             தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்
                   
    (பாரதிதாசன், அழகின் சிரிப்பு)

    (பரிதி = சூரியன் ; இலகுகின்ற = விளங்குகின்ற) மேற்காட்டிய சந்தம் இப்பாடலில் அமைந்துள்ளதனைக் காணலாம்.

    ‘காய் காய் காய் மா காய் காய் காய் மா’ என வருவது மற்றொருவகை எண்சீர் விருத்தம்.

    (எ.டு)

    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
            குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
    உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
            மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
    ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
            ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே
                      
    (திருவருட்பா, 4091)

    மேற்காட்டிய சந்தம் இப்பாடலில் அமைந்திருப்பது காண்க.

    இனி, ஆசிரியப்பா இனங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

    தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன நான்கடியாய்
    எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே
    சுருக்கடி யாயும் துறையாம் குறைவில்தொல் சீரகவல்
    விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே

                (யாப்பருங்கலக் காரிகை, 30)

    நூற்பாவின் பொருள்: மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன தாழிசை. நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவும் நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை     குறைந்து இடைமடக்காய் வருவனவும் ஆசிரியத்துறை. கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தம்.

    இனி, ஆசிரியப்பாவுக்கும் ஆசிரியப்பா இனங்களுக்கும் இடையேயுள்ள மேலோட்டமான ஒப்புமைகளைப் பார்ப்போம்.

    (i) ஆசிரியத் துறை ஈற்றயலடி குறைந்து வருவது, ஈற்றயலடி குறைந்துவரும் நேரிசை ஆசிரியப்பாவை நினைவுபடுத்துகிறது.

    (ii) ஆசிரியத் துறையில் இடையிடையே அடிகள் குறைந்து வருவது இணைக்குறள்ஆசிரியப்பாவை நினைவுபடுத்துகிறது.

    இவை முறையே ஆசிரிய நேர்த்துறை எனவும், ஆசிரிய இணைக்குறள் துறை எனவும் பெயர் பெறுவது இந்த ஒப்புமையைத் தெளிவுபடுத்துகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 17:53:33(இந்திய நேரம்)