தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வஞ்சிப்பாவின் இனம்

  • 4.2 வஞ்சிப்பாவின் இனம்

    தமிழ்க் கவிதை இலக்கியத்தில் மிக மிகக் குறைவான அளவுக்கே இடம் பெற்றிருப்பது வஞ்சிப்பா. இதன் இனங்களாகிய வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் ஆகியனவும் அவ்வாறே குறைந்த ஆட்சி உடையனவே. அவற்றின் இலக்கணங்களைக் காண்போம்.

    4.2.1 வஞ்சித் தாழிசை

    (1) குறளடி நான்காய் வரும்.
    (2) வஞ்சித் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி மட்டுமே      வரும்; தனியே வராது; தனியே வரின் அது வஞ்சித்      துறையாகி விடும்.

    எடுத்துக்காட்டு:

    மடப்பிடியை மதவேழம்
    தடக்கையான் வெயில்மறைக்கும்
    இடைச்சுரம் இறந்தார்க்கே
    நடக்குமென் மனனேகாண்

    பேடையை இரும்போத்துத்
    தோகையான் வெயில்மறைக்கும்
    காடகம் இறந்தார்க்கே
    ஓடுமென் மனனேகாண்

    இரும்பிடியை இகல்வேழம்
    பெருங்கையான் வெயில்மறைக்கும்
    அருஞ்சுரம் இறந்தார்க்கே
    விரும்புமென் மனனேகாண்

    (பிடி = பெண் யானை; தடக்கை = பெரிய கை; சுரம் = பாலை; மனன் = மனம்; போத்து = ஆண் பறவை)

    மேற்காட்டிய பாடல் குறளடி நான்கு, பிரிந்து சென்ற தலைவனையே தலைவி மனம் நாடுகிறது எனும் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்திருப்பது காணலாம். ஒவ்வொரு தாழிசையிலும் வெயில்மறைக்கும், இறந்தார்க்கே,மனனே காண் எனும் சொல்லும் தொடரும் திரும்ப வந்து அடுக்கியிருப்பது காண்க.

    4.2.2 வஞ்சித் துறை

    (1) குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை.
    (2) வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்.

    எடுத்துக்காட்டு:

    மைசிறந்தன மணிவரை
    கைசிறந்தன காந்தளும்
    பொய்சிறந்தனர் காதலர்
    மெய்சிறந்திலர் விளங்கிழாய்

    (மணிவரை = அழகிய மலை;     விளங்கிழாய் = விளங்கும் அணிகலன் அணிந்த பெண்ணே)

    மேற்கண்ட பாடலை விட இன்னும் குறுகியதாக ஓசை அமைப்பு வேறுபடும் (இயற்சீர்களால் ஆகிய) வஞ்சித் துறையும் உண்டு.

    எடுத்துக்காட்டு:

    உள்ளம் உரைசெயல்
    உள்ளஇம் மூன்றையும்
    உள்ளிக் கெடுத்திறை
    உள்ளில் ஒடுங்கே
        
               - (திருவாய்மொழி - 2693)

    4.2.3 வஞ்சி விருத்தம்

    (1) சிந்தடி நான்காய் வருவது வஞ்சி விருத்தம்.
    (2) இது பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்.

    எடுத்துக்காட்டு:

    ஊனு யர்ந்த உரத்தினால்
    மேனி மிர்ந்த மிடுக்கினான்
    தானு யர்ந்த தவத்தினால்
    வானு யர்ந்த வரத்தினான்
             - (கம்பராமாயணம், யுத்த. - 1378)

    (ஊன் = உடல்; உரம் = வலிமை)

    கும்பகருணனைப் பற்றிய பாடல்.

    எடுத்துக்காட்டு:

    நீறணி மேனியன் நீள்மதியோ
    டாறணி சடையினன் அணியிழையோர்
    கூறணிந் தினிதுறை குளிர்நகரம்
    சேறணி வளவயற் சிரபுரமே
                - (சம்பந்தர் தேவாரம், 1177)

    இவ்விரண்டு எடுத்துக் காட்டுகளும் சிந்தடி நான்காய் வந்துள்ளன. ஆயினும் வேறு வேறு ஓசை அமைப்புகளைக் கொண்டிருப்பது காண்க.

    இனி, இவ்வினங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம். இந்நூற்பா வஞ்சிப்பாவின் ஈறு பற்றியும் கூறுகிறது.

    குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
    துறையொரு வாது தனிவரு மாய்விடின் சிந்தடிநான்
    கறைதரு காலை அமுதே விருத்தம் தனிச்சொல் வந்து
    மறைதலில் வாரத்தி னாலி றும் வஞ்சிவஞ் சிக்கொடியே

                  - (யாப்பருங்கலக் காரிகை - 34)

    நூற்பாவின் பொருள்:

    குறளடி நான்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை; குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை; சிந்தடி நான்கு வருவது வஞ்சி விருத்தம். வஞ்சிப்பாவில் வஞ்சியடிகளின் இறுதியில் தனிச்சொல் பெற்றுப் பிறகு ஆசிரியச் சுரிதகத்தால் முடியும்.

    (வஞ்சிப்பாவிற்குத் தனியாக இலக்கணம் கூறும் பகுதி இல்லை. உறுப்பியலில் நான்கு பாவுக்குமுரிய அடிச் சிறுமை பெருமைகள் பற்றிய ‘வெள்ளைக் கிரண்டடி’ எனத் தொடங்கும் நூற்பாவிலும், செய்யுளியலில் பாவுக்குரிய அடி பற்றிய நூற்பாவிலும் வஞ்சிப்பாவிற்குரிய இலக்கணங்கள் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்படாமல் விடுபட்ட ‘ஈறு’ இலக்கணத்தை, இனம் பற்றிய இந்த நூற்பாவில் குறித்திருக்கிறார் அமிதசாகரர்)

    இனி வஞ்சிப்பாவின் இலக்கணங்கள் வஞ்சிப்பாவுடன் எவ்வகை ஒற்றுமைகள் கொண்டுள்ளன எனக் காணலாம்.

    (1) குறளடி வஞ்சிப்பா குறளடிகளால் ஆகியது. வஞ்சித் தாழிசையும் வஞ்சித் துறையும் குறளடிகளால் அமைந்திருப்பதால் அவை குறளடி வஞ்சிப்பாவின் இனங்களாகும்.

    (2) சிந்தடி வஞ்சிப்பா முச்சீரடிகளால் ஆகியது. வஞ்சி விருத்தம் முச்சீரடிகள் கொண்டு அமைவதால் அது சிந்தடி வஞ்சிப்பாவின் இனம் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 10:45:36(இந்திய நேரம்)