Primary tabs
4.5 வைதருப்பம் - சமநிலை
வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவகை மெய் எழுத்துகளும் சமமான நிலையில் இடம் பெறுவது சமநிலை ஆகும்.
விரவத் தொடுப்பது சமநிலை யாகும்(தண்டியலங்காரம் : 18)(விரவ = கலந்துவர)
சான்று : 1
சோகம் எவன்கொல் இதழிபொன் தூக்கின சோர்குழலாய்
மேகம் முழங்க விரைசூழ் தளவம் கொடியெடுப்ப
மாகம் நெருங்கவண் டானம் களிவண்டு பாடஎங்கும்
தோகை நடஞ்செய்யும் அன்பர்திண் தேர்இனித் தோன்றியதே(இதழி = கொன்றை
தூக்கின = தொங்கவிட்டன
சோர்குழல் = தொங்கும் கூந்தல்
விரை = மணம்
தளவம் = முல்லை
வண்டானம்(வண்தானம்) = அழகிய தானம்
தோகை = மயில்
அன்பர் = தலைவர்
இனி = இதோ இப்பொழுது)நீண்டு தொங்கும் கூந்தலை உடையவளே! கொன்றை மலர்கள் பொன்மயமாய் நறுமணம் வீசவும், மேகம் முழங்கவும், மனம் மிகுந்த வெண்மையான மலர்களைத் தரும் முல்லைக்கொடி அசையவும், அழகிய தானத்திலே வண்டுகள் நெருங்கி வந்து முழக்கம் செய்து பாடவும், மயில்கள் மகிழ்ந்து இனிது நடனம் செய்யும் வேளையில் நம் தலைவர் உறுதியான தேரில் ஏறி நின்னைக் காண வந்தனர். அவர் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த துயரத்தை இப்போது எங்கே செல்ல விடுத்தனை?
இது, தோழி தலைவனின் வருகையை அறிவித்துத் தலைவியின் துயர் போக்கியது.
இப்பாடலில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவின மெய்களும் விரவி வந்துள்ளன.
சான்று : 2
துதிவாணி வீரம் விசயம்சந் தானம் துணிவுதனம்
அதிதானி யம்சவு பாக்கியம் போகம் அறிவழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே(காளமேகம் : 177)(துதி = புகழ்
வாணி = கல்வி
விசயம் = வெற்றி
சந்தானம் = மக்கட்பேறு
சவுபாக்கியம் = சிறந்த இன்பம்
நோவகல் = நோய் இல்லாத)‘மதுரையில் குடிகொண்டிருக்கும் மலோன பொருளே! புகழ், கல்வி, மனவுறுதி, வெற்றி, மக்கட்பேறு, தைரியம், செல்வம், அதிக தானிய வளம், சிறந்த இன்பம், நல்ல அனுபோகம் (துய்ப்பு) ஞானம், பொலிவு, நாளும் வந்தமையும் சிறப்பு, அறம் செய்யும் பண்பு, நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாமையுடன் கூடிய நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பேறுகளையும் எனக்குத் தந்து அருள்செய்வாயாக’ என்பது இப்பாடலின் பொருள்.
இப்பாடலில் மூவின மெய்களும் விரவி வந்துள்ளன.