Primary tabs
4.7 வைதருப்பம் - ஒழுகிசை
செவிக்கு இனியதாய்ச் செல்லும் மெல்லிசை ஒழுகிசை எனப்படும்.
வெறுக்கத்தகும் இன்னா இசை இன்றி வரத் தொடுப்பது ஒழுகிசை என்பது தண்டியலங்காரக் கருத்து.
ஒழுகிசை என்பது வெறுத்திசை யின்மை(தண்டியலங்காரம் : 20)என்பது நூற்பா.
இமையவர்கள் மௌலி இணைமலர்த்தாள் சூடச்
சமையந் தொறும்நின்ற தையல் - சிமைய
மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணென்
கலைமடந்தை நாவலோர் கண்(இமையவர்கள் = தேவர்கள்
மௌலி = மகுடம்
சமையம் = சமயம்
சிமையம் = சிகரம்
மலைமடந்தை = பார்வதி
மலர்மடந்தை = திருமகள்
எண்ணென் = அறுபத்து நான்கு
கலைமடந்தை = கலைவாணி
நாவலோர் = நாவினில் வல்லவர்கள்)‘தேவர்களின் மணிமகுடம் வந்து பொருந்துகின்ற திருவடித் தாமரைகளை உடையவள்; எல்லாச் சமயங்களின் உட்பொருளாக இருப்பவள்; மலைமகளாகவும், திருமகளாகவும், கலைமகளாகவும் திகழ்பவள்; நாவன்மை மிக்கவர்களின் கண்ணாக விளங்குபவள். அவளைத் தொழுவோம்’ என்பது இப்பாடலின் பொருள்.
மென்மையான நடையுடன் திகழும் இப்பாடல் ஒழுகிசைக்குச் சான்றாகிறது.
மென்மையாக வரும் நிலையில் இடையிடையே வல்லொற்று மிக்கது போலவும், வல்லொற்றுக்கு இடையிடையே உயிரெழுத்து மிக்கது போலவும் அறுத்திசைப்பது போலவும் வருவன வெறுப்பான இசையினவாகும்.
ஆக்கம் புகழ்பெற்றது ஆவி இவள்பெற்றாள்
பூக்கட் குழற்கார் பொறைபெற்ற - மாக்கடல்சூழ்
மண்பெற்ற ஒற்றைக் குடையாய் வரப்பெற்றெம்
கண்பெற்ற இன்று களி(ஆக்கம் = பெருக்கம்
குழற்கார் = கூந்தலாகிய மேகம்
மண் = உலகம் கடை = வெண்கொற்றக் குடை)‘பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலகை உன் ஒற்றை வெண்குடையின் கீழ்ப்படுத்தி ஆளும் அரசனே! உன் வரவால் கூந்தலாகிய மேகத்தில் தலைவி பூச்சூடினாள். செல்வம் புகழ் பெற்றது ; தலைவி தன் உயிரையே பெற்றவளானாள். எம் கண்கள் களிப்பு அடைந்தன’ எனத் தோழி கூற்றாக இப்பாடல் கருத்து அமைந்துள்ளது.
இப்பாடலில் பூக்கட் குழற்கார், கண்பெற்ற இன்று என்னும் இடங்கள் வெறுத்திசை தோன்ற வருதலின் இவ்வாறு வருவன ஒழுகிசைக்கு மாறுபட்டவை என்று கூறுவர்.
கௌட நெறியும் ஒழுகிசை குறித்த வைதருப்ப நெறியை வழி மொழிந்து ஏற்கின்றது.