Primary tabs
2.1 திறனாய்வாளனும் பிறரும்
முந்தைய பாடத்தில் திறனாய்வு என்றால் என்ன? திறனாய்வாளன் யார்? என்பவைப்பற்றிப் பார்த்தோம். இதில் திறனாய்வாளனுக்கும் வாசகனும், திறனாய்வாளனுக்கும் படைப்பாளிக்குமுள்ள தொடர்பு பற்றிப் பார்ப்போம்.
2.1.1 திறனாய்வாளனும் வாசகனும்
திறனாய்வாளன், முதலில் ஒரு வாசகன். வாசகன், குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தைப் - பனுவலை - வாசிக்கிறான். தன்னளவில், அந்தப் பனுவலைப் புரிந்து கொள்கிறான் ; ரசிக்கிறான் ; அனுபவிக்கவும், அந்தப் பனுவலோடு பழகிக் கொள்ளவும் செய்கிறான். ஒரு ஈடுபாடும், தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற மனநிலையும் கொண்டவனாக ஆகிறான். இது, முதல்நிலை. பயிற்சி பெற்ற வாசகன், அடுத்த நிலையில் உள்ளவன் தேர்ந்தெடுத்துப் படிக்கிற பயிற்சியும் தேடிப்போகிற மனநிலையும் இருக்கிறது. அதற்குரிய சரியான அளவுகோல் அவனுக்குத் தெரியாது ; ஆனால், தொடர்ந்து படிக்கும் பயிற்சி இருப்பதால், ஒரு மேலோட்டமான அளவுகோல் இருக்கிறது. நல்லது - வல்லது என்ற அபிப்பிராயங்கள் - கருத்தோட்டங்கள் - அவனுக்கு ஏற்படுகின்றன. இது இரண்டாம் நிலை அடுத்து, அதற்கும் மேல் நிலையில் உள்ள வாசகன், தான் வாசித்தவற்றைப் பற்றித் தருக்க நீதியான ஏன், என்ன, எப்படி என்ற கேள்விகளுக்கு வரத் தெரிந்தவன். மதிப்பிடுவது, விளக்குவது, ஒப்பிடுவது முதலிய மனநிலைகள் வாய்க்கப் பெற்றவன். குறிப்பிட்ட படைப்பின் தரம், குறிப்பிட்ட படைப்பாளியின் நிலை முதலியவற்றை அனுமானிக்கத் தெரிந்த இவனைக் குறிக்கோள் வாசகன் என்று சொல்ல முடியும். மூன்றாவது நிலை இது. திறனாய்வாளன் இவனிலிருந்து தொடங்குகிறான்; பிறக்கிறான்.
வாசிப்பு அனுபவமும், அதனைத் திரும்பத் திரும்ப உள்வாங்கிக் கொண்டு அதுபற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலையும், அதனை வெளிப்படுத்துகிற ஆற்றலும் உடையவன், திறனாய்வாளன். வாசகன், குறிப்பிட்ட சில அளவுகேளாடு நின்றுவிடுகிறபோது, பிற நூல்கள் பற்றிய அறிவையும், இலக்கியம் மற்றும் அதுசார்ந்த பொதுவான கோட்பாடுகளைப் பற்றிய அறிவையும் கொண்டு, தன்னுடைய வாசிப்பு அனுபவங்களை ஒரு முறைமைக்கும் ஒரு தேவைக்கும் ஏற்ப வெளிப்படுத்துகிறவன், திறனாய்வாளன்.
ஈடுபாடு, வாசிப்பு, தொடர்ந்த வாசிப்பு - நின்றுவிடுமானால் மற்றும் கருத்துருக்களும் வெளிப்படுத்தியுரைக்கின்ற திறனும் இல்லாமல் போய் விடுமானால் - திறனாய்வாளன் முடிந்துவிடுகிறான். தொடர்ந்த ஈடுபாட்டோடு, வாசிப்பு ஒரு பயிற்சியாகவும் அனுபவமாகவும் அமைகிறபோது, அதுபற்றிய விளக்கம், கருத்துருக்கேளாடு வெளிப்படுகிற நிலையேற்படுமானால், வாசகன், திறனாய்வாளனாக உருவாகிவிடுகிறான்.
2.1.2 திறனாய்வாளனும் படைப்பாளியும்
படைப்புமனம் என்பது, ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு பொருளை அல்லது ஓர் எண்ணத்தை உளங்கொண்டு உணர்ந்து, உந்துணர்வோடு, அதுபோன்ற ஒன்றாகவோ அதிலிருந்து விலகிச் செல்லும் இன்னொன்றாகவோ, புதியது போன்ற தோற்றமுடையதாகவோ வெளிப்படுத்த ஏதுவாக இருக்கிற ஒரு மனநிலையாகும். இது, ஒரு படைப்பாளிக்கு இருக்கிற மிகமுக்கியமான ஒருதேவை. அதுபோல், திறனாய்வாளனுக்கும் அடிப்படையில் இத்தகையதொரு மனநிலை இருக்கிறது. படைப்புமனம் இருந்தாலொழியப் படைப்பினைப் புரிந்துகொள்வது என்பது முடியாது. படைப்பாளி, அத்தகைய படைப்பு மனத்தைக் கலை வடிவோடு ஆக்குகிறான் ; படைப்புத் திறன் அவனிடம் முந்தி நிற்கிறது. அடிப்படையான படைப்பு மனத்தோடு அறிவியல் உளப்பாங்கும் விசாரணை உளப்பாங்கும் கூடிவருகிறபோது திறனாய்வாளன் உருவாகிறான். ஒருவன் கலைஞன்; அடுத்தவன் அறிஞன். ஒருவன் உணர்வால் எழுதுகிறான்; அடுத்தவன் அறிவால் எழுதுகிறான். ஆனால் இந்த இரண்டும் முரண்பாடு கொண்டவையல்ல என்பதும் எது முதன்மையாக இருக்கிறது என்பதுமே முக்கியம்.
‘படைப்பாளியாக ஆக முடியாமல் தோல்வியுற்றவன், திறனாய்வாளனாகிறான்’ என்று மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள் கூறுவதுண்டு. இது, மிகையான கூற்று; எனினும், திறனாய்வாளனின் இலக்கிய உள்ளத்தை இந்தக்கூற்று வெளிப்படுத்துகிறது.
படைப்பாளி, ஒரு அழகை அல்லது ஒரு பொருளை அல்லது அதன் சாரத்தைத் தனது படைப்பில் பொதிந்து / ஒளித்து வைக்கிறான். திறனாய்வாளன் அதனைத் தேடி எடுத்துத்தருகிறான். படைப்பாளி, விடுகதை போடுகிறான்; திறனாய்வாளன் அதனை விடுவிக்கிறான். படைப்பாளி, பல சமயங்களில் மவுனமாகி நிற்கிறான்; திறனாய்வாளன் அந்த மவுனங்களை உடைக்கிறான்; அந்த மவுனங்களுக்கு விளக்கம் தருகிறான்.
ஒரு படைப்பாளி, ஒரு திறனாய்வாளனுக்குள் மட்டும் முடிந்து விடுவதில்லை. பலர் வருகிறார்கள் ; பல விளக்கங்கள் தந்துபோகிறார்கள். அது போலவே, திறனாய்வு, ஒரு படைப்புக்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு நேரத்தில் ஒரு படைப்புப்பற்றிப் பேசுவதாக இருந்தாலும், திறனாய்வாளன் சுதந்திரமாக ‘வெளியே’ சென்று வருகிறான் ; பல செய்திகளைக் கொண்டு வருகிறான்.
2.1.3 திறனாய்வாளனும் தும்பியும்
பாரதிதாசன்பாரதிதாசன், தமிழ்மொழியை ஒரு பூக்காடு என்றும், தம்மை ஒருதும்பி என்றும் வருணிப்பார்:
தமிழே நீ ஒரு பூக்காடு
நானோர் தும்பிதமிழ் மொழிவளமும் இலக்கிய வளமும் சிந்தனைவளமும் நிரம்பியது; பூங்கா அழகும் நேர்த்தியும் மணமும் நிரம்பியது; பலவிதமான சுவைகள். பல வண்ணங்கள். இதனால் தமிழ் ஒரு பூங்காவாக - பூக்காடாகத் தோன்றுகிறது. அதிலே திளைத்து மகிழும் ஒரு தும்பி - அந்த அனுபவத்தைப் பிறர்க்குச் சொல்லும் போது - ஒரு ரசிகனாக மட்டுமல்ல, ஒரு சிறந்த திறனாளியாக விளங்குகிறது.
திறனாய்வாளன்தும்பிதேடுவதும் தேர்வதும் திறனாய்வின் அடிப்படையான பண்பு. தேர்ந்ததை, அனுபவித்ததை அனுபவித்தவாறு விருப்பு வெறுப்பின்றிச் சொல்லுவது அவனுடைய கடமை. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் இறையனார் என்ற புலவரின் ஒரு வேண்டுகோள்:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ.........இது திறனாய்வாளனைப் பார்த்துச் சொல்வது போன்ற தோற்றமுடையது. தேனை நாடிப் போவதும், நல்ல தேனை விரும்பித் தேர்வதும் தும்பியின் - தேனீயின் வாழ்க்கை. திறனாய்வாளனுக்கும் இதுவே தொழில் ; இதுவே வாழ்க்கை. ஆனால், அது, தான் தேர்ந்த தேனை உண்டுகாட்டியாக இருந்து பிறர்க்குச் சொல்ல வேண்டும். அதுவும், தனக்கு ஈடுபாடு இருக்கிறது என்பதற்காக மிகவும் விருப்பம் கொண்டு மிகையாகச் சொல்லக்கூடாது. மிகைவிருப்பம் (காமம்) இன்றி உள்ளதை உள்ளவாறு சொல்ல வேண்டும். தேனீ அல்லது தும்பியிடம் தெரிவிக்கின்ற இந்தச் சொல், திறனாய்வாளனை நோக்கிச் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளலாம்.