Primary tabs
-
2.6 தொகுப்புரை
திறனாய்வாளனுடைய பண்புகளையும் பணிகளையும் பார்த்தோம். அதன்வழித், திறனாய்வின் பண்புகள் வெளிப்படுகின்றன. திறனாய்வாளனின் நோக்கமும் குறிக்கோளும் - உண்மையைத் தேடுவதாகும். நல்ல அறிவும் பயிற்சியும் கொண்டு, புறவயமான பார்வையோடு, இலக்கியத்தை அவன் அணுகவேண்டும். சரியானவற்றைத் தேர்வதிலும் தேர்வதைச் சொல்லுவதிலும், காழ்ப்பு இருக்கக் கூடாது; பக்கச் சார்பு இருக்கக்கூடாது. நடுவுநிலைமை வேண்டும். குணம் நாடிக் குற்றமும் நாடவேண்டும். படைப்புக்குத் தோழனாகவும் உசாத்துணையாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு இலக்கியச்சூழலை வளர்ப்பவனாக இருக்க வேண்டும். புதிய கோட்பாடுகேளா வேறு எதுவோ ஆயினும், புரிந்துகொள்வதிலும், சொல்லுவதிலும் தெளிவு இருக்க வேண்டும். தெளிவு இருக்கும்போதுதான் வாசகரை அது சென்று அடைய முடியும். சமூகப் பொறுப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல, திறனாய்வாளனுக்கும் இருக்கிறது. ஏனென்றால் திறனாய்வாளன், ஒரு சிந்தனையாளனாகவும் இருக்கிறான் - இருக்கவேண்டும்.