Primary tabs
2.4 திறனாய்வாளனின் பங்கு
படைப்பாளி - திறனாளி - வாசகன் என்ற முக்கூட்டுறவில், திறனாளியின் இடம் அல்லது பங்கு அல்லது பணி, வாசகனைப் படைப்பாளியின் பக்கமாக - அதாவது படைப்பின் பக்கமாக மிக நெருங்கச் செய்தல் ஆகும். படைப்பாளியின் நோக்கம் வாசகனைச் சென்றடைவதுதான் ; அதுபோல், திறனாளியின் நோக்கமும் வாசகனைச் சென்றடைவதுதான். இந்த உறவில் திறனாளி, எந்த விதத்திலும் ஓர் இலக்கு அல்ல. இலக்கு - ஒன்றிப் படைப்பு ; அல்லது வாசகன். இந்த இரண்டிற்கும் இடையே, திறனாளி, வாசகன் பக்கம் சென்று, தான் பெற்ற இன்பம் சொல்லி, பெற்றதன் முறைமையும் வல்லமையும் சொல்லி, வழி சொல்லிப் படைப்பின் திறன் நோக்கி அனுப்புகிறான். அதாவது, வாசகனைப் படைப்பின் பக்கமாகத் திறனாளி ஆற்றுப்படுத்துகிறான் என்று பொருள்.
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றபயன் எதிரச் (சொல்லுதல்)ஆற்றுப்படையின் இலக்கணம் என்று தொல்காப்பியர் கூறுவார். திறனாய்வும், இதுபோல், ஆற்றுப்படுத்துகிற செயலைச் செய்கிறது.
2.4.1 வாசகனுக்கு உறுதுணை
எனவே, திறனாய்வாளன், வாசகனுக்கு படைப்பைப் புரிந்து கொள்வதில் உறுதுணையாக அமைகிறான் எனலாம். வாசகனுக்கு வழி சொல்லி, வாசகனுக்கு ஏற்படலாகும் ஐயப்பாடுகளை யூகித்தறிந்து தீர்ப்பான்போல் விளக்கம் தந்து, தகவல்கள் தந்து, துணையாக நிற்கிறான், திறனாய்வாளன்.
புதுமைப்பித்தன்வாசகனுக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள தலைமுறை இடைவெளிகளைக் - கால வேறுபாடுகளைக் - குறைக்கிறான். அதுபோல இடங்கள், தூரந்தொலைவுகள் என்ற நிலையில் ஏற்படுகிற இடைவெளிகளையும் குறைக்கிறான். உதாரணமாகப், புதுமைப்பித்தன், திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்; அவருடைய கதைகளில் அந்த வட்டாரத்துச் சொற்கள், மொழிநடை, பழக்கவழக்கங்கள் முதலியவை இடம் பெறுகின்றன. கோவை மாவட்டத்துக்காரர்களுக்கு அவற்றுள் சில புரியாமல் போகலாம் அல்லது கடினமாக இருக்கலாம். திறனாய்வாளன் வாசகனுக்கு வழி தந்து அந்த சிரமங்களைக் குறைக்கிறான்.
இவ்வாறு, திறனாய்வாளன், வாசகனுக்கு உகந்த உசாத்துணையாகவும் உற்ற நண்பனாகவும் உயர்ந்த வழிகாட்டியாகவும் விளங்குகிறான். சிறந்த வாசகர்கள் உருவாவதற்கும், ஒரு நல்ல இலக்கியச் சூழல் அமைவதற்கும், திறனாய்வாளனின் இத்தகைய பண்பு பெரிதும் உதவுகின்றது.
2.4.2 செவிலி மனப்பான்மை
படைப்பாளி, தாய் என்றால், திறனாளி, படைப்பிற்கும் படைப்பாளிக்கும் செவிலி போன்றவன் ஆவான். குறிப்பிட்ட ஒரு படைப்பாளிக்கும் அந்தப் படைப்புக்கும் மட்டுமல்ல - அத்தகைய ஒரு குழுவுக்கும் பொதுவான ஓர் இலக்கியச் சூழலுக்கும் ஒரு செலிவிபோல் இருந்து பேணுகிற பண்பு, திறனாய்வாளனின் பண்பாகும். வாசகனுக்கு ஓர் உசாத்துணையாக இருப்பதுபோல, படைப்பாளிக்கும் - படைப்புக்கும் - ஒரு நல்ல படைப்புச் சூழலுக்கும் - செவிலியாக இருந்து நலம் பேணி வளர்த்தெடுக்கும் பணியைத் திறனாய்வு செய்கிறது.
குற்றங்குறைகளைச் சொல்லியும் உதாரணப்படுத்தியும் எழுதுகிற திறனாய்வு, எதிர்நிலையாகச் செயல்படக் கூடியது. இது, படைப்பாளியைச் சோர்வடையச் செய்கிறது. உற்சாகம் குன்றுகிறபோது படைப்பாளி, மேலும் மேலும் எழுதத்தயங்குகிறான். அண்மைக் காலங்களில், தமிழில் சிறு (இலக்கியப்) பத்திரிக்கைகள் பலவற்றில், குழுமனப்பான்மையுடன், காழ்ப்புணர்வுடன் படைப்பாளிகளை அணுகும் போக்கும் அதிகம் காணப்படுகிறது. தாக்குதல் விழுகிறபோது, வலுவான / அனுபவம் உள்ள படைப்பாளி ஓரளவு தப்பித்துக் கொள்கிறான் ; ஆனால் வளர்ந்து வரும் படைப்பாளிகள், தாக்குதல்களைத் தாங்கமுடியாமல் சோர்ந்து போகிறார்கள்.
2.4.3 தோழமை
ஒரு நல்ல திறனாய்வாளனின் பண்பு, படைப்பாளியின் உற்றதோழனாய் இருப்பது ; படைப்புக்குத் தோழமை உணர்வைக் காட்டுவது.
திறனாய்வாளன், கவிதை, புனைகதை என்று எந்தவகை இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது தனிப்பட்ட ஒரு ஆசிரியரை அல்லது ஒரு நூலை எடுத்துக்கொண்டாலும், அதன் நேர்த்தி, அதன் பொருள், அதன் கட்டமைப்பு, அதன் நோக்கம், அதுப் பிறவற்றோடு கொண்டுள்ள தொடர்பு முதலியவற்றோடு அதனுடைய சுவை, அதனுடைய தனித்தன்மை, குறிப்பிட்ட படைப்பாளியின் தனிப்பட்ட திறன் - ஆளுமை - முதலியவற்றையும் சொல்லுகிறான். அவ்வாறு சொல்லுகிறபோது காணப்படுகின்ற நியாயமான / நேர்மையான அணுகல்முறைகள், படைப்பாளியின் முன்நோக்கிய பார்வைகளுக்கு நலம் செய்கின்றன. இலக்கியப் பனுவல்களையே அத்தகைய திறனாய்வுகள் வாழவைக்கின்றன.
இறையனார் களவியல் மிகச்சுருக்கமான நூற்பாக்களைக் கொண்டது. ஆனால் அதற்கு எழுதப்பட்ட விளக்கமான உரைதான், அந்த நூற்பாக்களை வாழவைத்துள்ளது. நூற்பாக்களைத் தழுவி அவற்றை விளக்குகின்ற அதேபோது, ஒரு பொதுவான இலக்கியச் சூழலை அந்த உரை பேணி வளர்க்கிறது. களவியல் நூற்பாக்கள், தாய்மை உடையவை யென்றால், அதன் உரை, செவிலியாக இருந்து அதனைப் பேணிக் காக்கின்றதாக அமைகிறது எனலாம்.