தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திறனாய்வாளனின் ஆற்றலும் பயிற்சியும்

    • 2.2 திறனாய்வாளனின் ஆற்றலும் பயிற்சியும்

          எல்லோராலும்     திறனாய்வாளனாக     முடியாது. திறனாய்வாளனுக்கென சில ஆற்றலும், அறிவும் வேண்டும். இத்தகைய திறன்கள் பெற்றோரே திறனாய்வாளனாக இயங்க இயலும்.

      2.2.1 அறிவாற்றல்

          திறனாய்வாளன், அடிப்படையில் அறிவாற்றல் வாய்ந்தவன். அதாவது, முக்கியமாக அறிவாற்றல் மூலமாகவே இலக்கியத்தைக் கண்டு சொல்கிறான். அறிவாற்றல் என்பது என்ன? ஒருபொருளை உணர்ச்சிக்குட்பட்டு - அதாவது அகவய நிலையில் - பார்க்காமல், புறவய நிலையில் நின்று பார்ப்பது அறிவியலின் முதல் தேவையாகும். அதுபோல, காரண - காரியம் பற்றியதாகப் பார்வையும் பேச்சும் அமைதல் வேண்டும். மேலெழுந்த வாரியாக அபிப்பிராயங்களை உதிர்ப்பது திறனாய்வாகாது. ஒரு இலக்கியப் பனுவல் பற்றிப் பேசுகிறோம் என்றால், அதில் என்ன இருக்கிறது - ஏன் அவ்வாறு இருக்கிறது - அதனால் ஏற்பட்டுள்ள பண்புகள், மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றிய பார்வை அவசியம். உதாரணமாகப் பாரதியாரின் பாஞ்சாலிசபதம் எனும் குறுங்காவியம், பாரதமாதாவின் சபதமே என்று சொன்னால், அவ்வாறு சொல்லுதற்குரிய சூழல், பின்னணி, இவற்றோடு பாஞ்சாலிசபதம் எனும் பனுவலில் அதற்குரிய தடயங்கள், சொல் வடிவங்கள், பாத்திரவார்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன என்று கண்டறிந்து சொல்ல வேண்டும்.

          அறிவியல் கண்ணோட்டத்தில், எடுபொருள் பற்றிய கருதுகோள், தகவுகள், தரவுகள் முதலியன தேவை. தருக்க ரீதியான கண்ணோட்டமும் சரியான வழிமுறையும் தேவை. பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி எனும் பாத்திரம், சக்தியின் வடிவமாக விளங்குவது பற்றியும், அடிமைவிலங்கொடித்து எழுச்சி பெறுகிற சக்தி அதனுடைய அம்சமாக விளங்குவது பற்றியும் எடுத்துக் காட்டுகிறபோதுதான் அந்தக் குறுங்காவியத்தின் நோக்கத்தை நம்மால் சொல்ல முடியும்.

          அறிவியல் சார்ந்த இந்த அறிவாற்றல், உண்மையைத் தேடுவது ஆகும். எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், யாருடையதாயிருந்தாலும் உண்மை உண்மைதான். அதனைத் திறனாய்வாளன் கண்டறிகிறான் - ஒரு தேடுதலோடு.

          எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்ப தறிவு

          எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்ப தறிவு

      என்று வள்ளுவர், (வெவ்வேறு இடங்களில்), அறிவின் தொழில் உண்மையைத் தேடுதல் என்று சொன்னதோடு, அதன் சரியான வழியையும் இணங்காட்டுவார். அதற்கேற்ப, உண்மைப் பொருளை, மெய்ப்பொருளை இலக்கியத்தில் தேடியறிந்து சொல்வது திறனாய்வாளனின் பண்பாகும் என்று அறியப்படுதல் வேண்டும்.

      2.2.2 பரந்த அறிவும் பயிற்சியும்

          திறனாய்வாளனிடம் எதிர்பார்க்கத் தகுந்த முக்கியமான பண்பு, ஆழ்ந்து அகன்ற அறிவும் அத்தகைய அறிவின் விசாரணையில் தொடர்ந்து பயிலுகின்ற பயிற்சியும் ஆகும். இலக்கியத்தின் பரப்பு, ஆழமும் அகலும் உடையது என்பதாலும் அளவிலும் பண்பிலும் அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு என்பதாலும், திறனாய்வாளனுக்கு இத்தகைய பண்பு, மேலும் மேலும் தேவையாகின்றது.

          இலக்கியம் மொழியாலானது. ஒரு செய்ந் நேர்த்தியுடனும், அழகான ஓர் ஒழுங்கமைவுடனும் இருப்பது. படைப்பாளியின் உள்ளத்தோடு நெஞ்சமாக இருப்பது. சமூகத்தோடு, வரலாற்றோடு, அரசியலோடு, பண்பாட்டுத் தளத்தோடு, பொருளாதார அடிக்கட்டுமானத்தோடு     இலக்கியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டிருக்கிறது. இத்தகைய அறிவும்,     இந்தத்     துறைகேளாடு     ஒரு பயிற்சியும் திறனாய்வாளனுக்கு மிகவும் அவசிமயாகும். பல்துறையறிவும் பன்முகமான பயிற்சியும் இல்லையெனில், திறனாய்வு, வலிவும் பொலிவும் இல்லாது போகும். உண்மையை அதனால் தேடமுடியாது போய்விடும்.

          பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவல் பற்றித் திறனாய்வு செய்கிறவனுக்கு அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது, எந்தச் சூழலிலானது என்ற அறிவு இருந்தால்தான் அதனைத் தொட்டுத் தொடர முடியும் ; ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒர ராஜா.......... ! என்பது போல அந்தக் காலத்துப் பாட்டிமார் கதைப் பாணியில் அது சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் அப்படிக் கதை கூறுதலைப் பார்க்க முடியாது. அதுபோல     ஞானாம்பாள்     என்ற அந்த நாவலின் கதைத்தலைவியை இன்றைய மரபில் பார்க்கமுடியாது. அந்த நாவல், பெண்மையை ஒரு அதீதப்புனைவு நவிற்சியாகச் சித்திரிக்கிறது. இன்று அத்தகைய புனைவு சாத்தியமில்லை. ஆனால் பெண்ணியம் எழுச்சிபெற்ற இந்தக் காலத்தில் பெண்ணியக் கோட்பாடு பற்றியும் புனைவு நவிற்சி பற்றியும் போதிய பயிற்சி இருந்தால் (மட்டுமே), அந்த நாவலைச் சரியாகத் திறனாய்வு செய்ய முடியும். இது ஓர் உதாரணம்.

          திறனாய்வாளனுக்குச் சில கோட்பாடுகளிலாவது நல்ல பயிற்சி இருத்தல் வேண்டும். உளவியல், அமைப்பியல் முதற்கொண்டு மார்க்கியம், சமூகவியல் முதலிய கோட்பாடுகள் பற்றிய அறிவு, மிகவும் அவசியமாகும். கோட்பாடுகள், திறனாய்வுக்கு ஒளிதருகின்றன ; இலக்கியப் பனுவல்களின் மீது ஒளி பாய்ச்சுகின்றன.

          எந்த இலக்கியம் அல்லது எந்த ஆசிரியர் பற்றித் திறனாய்வு மேற்கொள்ளப்படுகிறதோ, அதுபற்றி மட்டுமல்லாது வேறுபிற ஒத்த இலக்கியங்கள் பற்றிய பயிற்சியும் பரந்த இலக்கிய அறிவும் திறனாய்வாளனுக்கு அவசியமாகும். கம்பனின் இராமகாதை பற்றி ஆராய்கிறபோது, வான்மீகி, ஹோமர், மில்டன் பற்றிய அறிவு இருந்தால், அந்த ஆராய்ச்சி எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

          திறனாய்வு, பல நேரங்களில், பல சூழல்களில் பலர் செய்வது. ஒரு திறனாய்வாளனுக்கும், பிறதிறனாய்வாளர்கள் என்ன     செய்திருக்கிறார்கள், எவ்வாறு ஒரு நூலை அணுகியிருக்கிறார்கள் என்ற அறிவும் தேவை. தன்னுடைய திறனாய்வு என்னவாகி, எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த அறிவு, பயன்படும்.

          கற்றறிந்தார் கல்வி விளங்கும் என்பது வள்ளுவம். திறனாய்வாளனுக்கும் இது பொருந்தும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 11:02:00(இந்திய நேரம்)