Primary tabs
-
2.3 திறனாய்வாளன் பணி
விருப்பு வெறுப்பின்றிச் செயல்படுகின்ற நடுவுநிலையாளனாகவும், குறைநிறை பார்த்து தீர்ப்பு வழங்கக் கூடியவனாகவும் செயல்படவேண்டியது, திறனாய்வாளனின் பணிகளாகும்.
2.3.1 நடுவுநிலைமை
காமஞ்செப்பாது கண்டது மொழிகின்றபோது, திறனாய்வாளனுடைய கருத்தில் - செயல்பாட்டில் - இயல்பாகவே நடுவுநிலைமை வந்துவிடுகிறது. அகவய உணர்வுகளுக்கு ஆட்படாமல், அறிவியலாளன் பாணியில், புறவயமாக நின்று அணுகுவது நடுவுநிலைமைக்கு இட்டுச் செல்லும்.
திறனாய்வாளனுக்கு விருப்பு வெறுப்புகள் காரணமாகப் பக்கச் சார்புகள் ஏற்படக்கூடும் ; காழ்ப்பும் கசப்பும் பார்வையை மோசமாக்கி விடக்கூடும். இத்தகைய பக்கச் சார்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் : 1. சமயச் சார்பு காரமணாக இருக்கலாம். 2. தற்செயலாகக் கிடைத்தவற்றின்மேல் அல்லது பழகியவற்றின்மேல் அல்லது நாலுபேர் திரும்பத்திரும்பச் சொன்னவற்றின்மேல் ஒரு தனித்த ஈடுபாடு இருக்கலாம். 3. சாதி, சொந்த ஊர் அல்லது வட்டாரம், நட்பு அல்லது இதுபோன்ற சில - இருக்கலாம். 4. அரசியல் கொள்கை அல்லது தனக்குரிய சில தனிப்பட்ட தேவைகள் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகள், பக்கச் சார்புக்கு இட்டுச் செல்லும்.
தமிழ்த் திறனாய்வாளர்கள் சிலரிடம் இந்தக் குறைபாடு உண்டு. முக்கியமாக மேற்கூறியவற்றுள் முதல் இரண்டும் பழைய இலக்கியங்களை ஆராய்வோரிடமும், பின்னைய இரண்டும், அண்மைக்கால / இக்கால இலக்கியங்களை ஆராய்வோரிடமும் அதிகம் காணப்படுகின்றன.
இதுபோன்ற குறைபாடுகள், திறனாய்வுக்குத் தடைக்கற்கள். நல்ல திறனாய்வாளனுடைய பண்பு, இத்தகைய குறைகளைத் தவிர்த்துவிட்டுத், துலாக்கோல் (தராசு) போல், ஆள்முகம் பார்க்காமல், பொருள்களின் இனபரிமானத்தை மட்டும் சொல்லுவது ஆகும்.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணிஒருபால் கோருதல் - ஒருபக்கச் சார்பு - திறனாய்வாளராகிய சான்றோர்க்கு அழகு அல்ல.
இருவேறு இலக்கியப் பனுவல்களை - நூல்களை - ஒப்பிட்டு ஆராய்வோர்க்கு, இத்தகைய சமன்நோக்கு, மிகவும் முக்கியமாகும்.
2.3.2 குணமும் குற்றமும் நாடி
மனிதன்போல இலக்கியமும், குற்றம் குறை உடையது. நிறைகள் அதிகம் இருப்பின் மனிதன் மதிக்கப்படுகிறான்; போற்றப்படுகிறான். ஆனால், அறிவாராய்ச்சி உள்ளம் கொண்டவர்கள், நிறைகளைப் பாராட்டுவது போலவே, குறைகளையும் கண்டறிந்து சுட்டிக்காட்டி அறிவுரைதருவார்கள். இது சான்றோர் பணி. இலக்கியத் திறனாய்வாளனும், இலக்கியத்தில் அதன் எல்லாப் பண்புகளையும் பார்க்கிறான். நிறைகளை மட்டும், அல்லது குறிப்பிட்ட இலக்கியப் பனுவலில் தனக்கு மிகவும் பிடித்ததைமட்டும் எடுத்துக்காட்டி ஆகா, ஓகா என்று புகழ்ந்தால், அது போற்றியுரை யாகும்மயின்றித் திறனாய்வாகாது. போற்றியுரைகள், மேலோட்டமானவை; அவை இலக்கியத்தை என்றும் வளர்ப்பதில்லை. அதுபோலவே, குறைகளைக் கண்டுபிடிப்பதிலேயே கவனம் செலுத்தினால், திறனாய்வாளனுடைய எதிர்நிலைப் பண்பாகவே அது அமையும ; மேலும், இலக்கியம் வளராது; சேதம் அடையும்.
எனவே, திறனாய்வுக்கு எடுத்துக் கொண்ட ஒரு நூலினுடைய இரண்டு பக்கங்களையும் மயக்கமின்றிப் பார்க்க வேண்டும். எது எப்படி இருக்கிறது என்று காணவேண்டும். எது மிகையாக இருக்கிறது என்பதைக் கூறவேண்டும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்திறனாய்வாளனுடைய பணி, வாசகனுக்கு, இருப்பதை, உள்பாதை, உள்ளவாறு சொல்லுதல் ஆகும்.
நல்ல திறனாய்வாளனின் பண்பு, குணம் - குற்றம் என்ற இரண்டையும் பார்ப்பது. எது அதிகமோ, அதனைச் செய்வது. ஆனால் அதேபோது, மற்றதை, அதாவவது, குறைவாகி இருப்பதைச் சொல்லாமலே விட்டு விடுவது அல்ல. அப்படிச் செய்யாமல் விடுவது, பெரும் குறையாகும். ‘இடிப்பார் இல்லையெனில், கெடுப்பார் இல்லையெனினும் கெடும்’ புகழ்ந்து சொல் - போற்று - பாராட்டு ஆனால், நிதானமாக இருக்க வேண்டும். நிதானமற்ற புகழ்மொழி, படைப்பாளியைச் செருக்கும் தறுக்கும் உடையவனாக ஆக்கிக் கெடுத்துவிடும். அதேபோது, குறைகள் இருக்குமானால், சற்றுக் கணிசமாகவே இருந்தாலும் கூட - அவற்றை அடக்கமாகச் சொல்ல வேண்டும். ஓங்கும் போது பெரிதாகத் தோன்றினாலும் அது அதனை எறிகிறபோது - விழுகிறபோது - மெல்ல விழவேண்டும். ‘கடிதோக்கி மெல்ல எறிக’.
எனவே, நிறை கூறுக ; குறை காட்டுக ; அதன் மிகை சொல்லுக; வளரும் நெறி தருக. இவ்வாறு, திறனாளியாய்க் கடமையாற்றுக.
2.படைப்பாளிக்கும் திறனாய்வாளனுக்கும் உள்ள பொதுவான மனநிலை என்ன? வேறுபாடாக இருக்கிற முக்கியமான மனநிலை என்ன?