தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விதிமுறைத் திறனாய்வு

    • 1.4 விதிமுறைத் திறனாய்வு

          முடிபுமுறைத் திறனாய்வுக்கும் விதிமுறைத் திறனாய்வுக்கும் (Prescriptive criticism) பெருத்த வேறுபாடு இல்லை. இரண்டும் நெருக்கமான உறவுடையவை.    முடிபுமுறைத்     திறனாய்வு என்பது சில அளவுகோல்களைக் கொண்டு, குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளையும் மதிப்புகளையும் வழங்குவது ஆகும். விதிமுறைத்    திறனாய்வு என்பது, விதிகளையும் அளவுகோல்களையும் அப்படியே ஓர் இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது. ஆனால் இதன் மூலம் முடிபுகளையோ தீர்வுகளையோ சொல்லுவதற்கு முற்படுவதில்லை. மாறாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தைச் சில வரையறைகளைக் கொண்டு விளக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

          இது, ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பதற்கு மாறாக இலக்கணங் கண்டதற்கு இலக்கியங் காணல்’ என்ற மனப்பான்மை கொண்டது. இப்பார்வை உரையாசிரியர்களிடம் பரவலாகக் காணப்படுவதைப் பார்க்க முடியும்.

           நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற கேள்வியை எழுப்பியவர் நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் ஆவார். இவர் நெடுநல்வாடை தோன்றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட காலத்தில் தோன்றியவர். நெடுநல்வாடையில் புறச்செய்திகள் நெடுகப் பேசப்பட்டாலும், இறுதி நிலையில் சாராம்சமாக அகமே பேசப்படுகிறது.ஆயினும் தொல்காப்பியரின் விதிப்படி, அது அகம் இல்லை என்கிறார் நச்சினார்க்கினியர்.

          அன்பின் ஐந்திணையில் ‘தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்’ - இது தொல்காப்பியர் கூற்று. நெடுநல்வாடையில் தலைவனின்     இயற்பெயர்    சுட்டப் பெறவில்லைதான்; ஆனால், வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்    எனப்     பாண்டிய மன்னர்களின் அடையாளப் பூவாகிய வேப்பம்பூவைக்    கூறியமையால் இது அகம் அல்ல    என    நச்சினார்க்கினியர்    கூறுகிறார். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

          ஆனால், அதற்குரிய சான்று அந்த நெடுநல்வாடையில் இல்லை. மேலும் பாட்டுடைத் தலைவனின்    இயற்பெயர் சுட்டப்பெறாத போது தொல்காப்பியர் வழிநின்று கூட அதனைப் புறம் என்று கூறமுடியாது. இருப்பினும் நச்சினார்க்கினியார் விதி முறைத் திறனாய்வை மனதிற் கொண்டு அவ்வாறு அதனை அகம் என்று கூறுவதை மறுத்துப் ‘புறம்’ என்று கூறுகிறார்.

          இவ்வாறு, முன்னோர் மொழிந்த பொருளைப் பொன்னே போற்கொண்டு, அதனை விதிமுறையாகக் கொள்கின்றதையும் அதற்காக வலிந்து பொருள் கொள்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இதனை இன்றைய திறனாய்வாளர்கள் திறனாய்வு முறையாக- வகையாகக் கொள்வதில்லை. ஆயினும் விதிகளைப் பொருத்திக் காணுகிற பார்வை, திறனாய்வாளர்கள் பலரிடம் இல்லாமலில்லை. குறிப்பாகக் கல்வியாளர்களிடம் இது பெரிதும் காணப்படுகிறது என்பது உண்மை.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 11:17:42(இந்திய நேரம்)