தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

    • 1.5 செலுத்துநிலை     அல்லது     படைப்புவழித் திறனாய்வு

          விதிமுறைத் திறனாய்வும்    முடிபுமுறைத் திறனாய்வும் செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்விலிருந்து மாறுபட்டவை. முற்கூறிய இரண்டும் இலக்கணத்திலிருந்து இலக்கியத்திற்குப் போகிறது. படைப்புவழித் திறனாய்வு இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்லுகிறது.

          பொது விதிகளையோ வரையறைகளையோ வைத்துக் கொண்டு, அவற்றின் வழியாக இலக்கியத்தைப் பார்ப்பதிலுள்ள குறைபாடுகளை மனதிற் கொண்டு அவ்றைத் தவிர்க்கும் நோக்கில் அந்த அந்தப் படைப்பின் வழியாகவே அதனதற்குரிய விதிகளை வடித்தெடுக்க வேண்டும் என்று சொல்வது, செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Inductive Criticism) ஆகும்.

          வரையறைகளை முடிபுமுறைகளாக வைத்து ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று கூறும் தீர்வு முறையிலிருந்து (Judicial Method) இது மாறுபடுகிறது. ஒரு படைப்பு மற்றதிலிருந்து வேறுபட்டது என்று (மட்டுமே) இது சொல்கிறது. பொது முடிவுகளுக்கும்    பொதுவான    விதிகளுக்கும்    உள்ள அளவுகோல்களைப் புறக்கணிக்கிற இத்திறனாய்வு, குறிப்பிட்ட கலைக்கு உரிய விதிமுறைகளை அவ்வக் கலைஞர்களின் வழிமுறைகளிலிருந்தே பார்க்க வேண்டும்; வேறு வகையில் பார்ப்பது, அதற்குப் புறம்பானது என்று கூறுகிறது. ஒன்றன் வரையறையை அல்லது ஒரு கலைஞனின் வழிமுறையை வேறொரு படைப்பிலோ, வேறொரு கலைஞரிடமோ பொருத்திப் பார்க்கக் கூடாது என்று இது    வற்புறுத்துகிறது. தீர்வுமுறையை மட்டுமின்றி, மதிப்பீட்டு முறையையும் ஒப்பீட்டு முறையையும் இது தவிர்க்கிறது; மறுக்கிறது.

      1.5.1 செலுத்துநிலைத் திறனாய்வின் சிறப்பு

           படைப்பாளிகளின் ஒவ்வொரு படைப்புக்கும் (இலக்கியத்துக்கும்) தனித்தனியாக அமைப்பு விதிகள் உண்டு என்கிறது இத்திறனாய்வு. படைப்பாளிகளைப் பற்றிப்    பேசும்போது    அவரவரின் வழிமுறைகளை ஒட்டியே பேசவேண்டும் என்று கூறுகிறது. மேலும், அவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்று சுட்டிக்    காட்டுகிறது.    ஆயின், அந்த வேறுபாடுகளின் முக்கியத்துவமும் காரணமும் பற்றியோ, அவர்களின் தரமும் தகுதியும் பற்றியோ இது பேச மறுக்கின்றது. ஆனால் திறனாய்வு, இவற்றில் அக்கறை காட்டாமலிருக்க முடியாது ஏனெனில் இது திறனாய்வின பணி. ஆனால் இலக்கியத்தின் வளர் நிலையையும், தனித்தன்மைகளையும் இந்தச் செலுத்துநிலைத் திறனாய்வு கவனத்தில் கொள்கிறது.    மேலும் விதிமுறைகளையும் வரையறைகளையும் உருவாக்குவதற்குச் செலுத்து நிலையாகிற வழிமுறையின் பங்களிப்பும் தேவையான ஒன்றேயாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 11:23:01(இந்திய நேரம்)