Primary tabs
- 1.3 முடிபுமுறைத் திறனாய்வு
முடிபுமுறைத் திறனாய்வு (Judicial criticism) என்பது அடிப்படையான சில வரையறைகளையும் விதிகளையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவது ஆகும்.
கெர்உதாரணமாகத் தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்ற காப்பிய இலக்கணம் கொண்டோ, சாட்விக் (Chadwick), கெர் (W.P.Ker), பவுரா (C.M.Bowra) போன்ற மேனாட்டார் கூறும் கோட்பாடுகள் கொண்டோ ஒரு காப்பியத்தின் அமைப்பையும் பண்பையும் கணிப்பது, முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.
தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டதாகக் காப்பியம் அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் சொல்கிறது. இவ்வாறே மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் கூறுகின்றனர். ஆனால் சிலப்பதிகாரத்தில் அத்தகைய தலைவன் (கோவலன்) இல்லை என்பதற்காக அதனைக் காப்பியம் அன்று என்று கூறி விட முடியுமா?
தன்னுடைய இயல்பான போக்கில் ஏற்புடைய பல உள்கட்டமைப்புகள் பெற்றுள்ள சிலப்பதிகாரம், உலகக் காப்பியங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்தது அல்லவா?
இராமகாதைமேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அது சரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.
ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது இதன் பண்பு ஆகும். இதனடிப்படையில் ஒன்றன் சிறப்பு அல்லது தரம் உயர்ந்தது என்று முடிவு கூறுவதற்கு இந்த வகையான திறனாய்வு முயலுகிறது. இது, ஏற்கெனவே எழுதப்பட்ட விதிகளுக்கும் அவற்றின் விளக்கங்களுக்கும் ஏற்ப நீதிபதி தீர்ப்பு வழங்குவதைப் போன்றது ஆகும். எனவே இங்குக் கவனம் மிகவும் அவசியம் ஆகும். இத்திறனாய்வில் முடிபுகள் என்பது சமன்நிலையில் சீர்தூக்கும் கோல்போல் இருக்க வேண்டும்.
கல்வியியல் பட்டம் சார்ந்த ஆய்வேடுகள் பல, முடிபு முறைகளைச் சார்ந்தே அமைந்துள்ளன. தமிழில் உள்ள முன் மாதிரிகளையோ வரையறைகளையோ இவை பின்பற்றாவிட்டாலும் அல்லது அவற்றைப் பற்றி இவை அறிந்திராவிட்டாலும், மேலைநாட்டார் கொள்கைகளையும் மேற்கோள்களையும் வரையறைகளாகக் கொண்டு இந்த ஆய்வேடுகள் தமிழ் இலக்கியங்களுக்கு முடிபு சொல்ல முயலுகின்றன; அவற்றை மதிப்பிட முயலுகின்றன. ஆனால் இங்கே விதிகள் அவ்விலக்கியங்களிலிருந்து எடுக்கப்படாமல், வெளியே புறத்தே இருந்து எடுக்கப்படுகின்றன. ஆகையால் இவை எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆயினும் சிறந்த இலக்கியங்களைப் போற்றுவதற்கு இது ஓரளவு உதவக் கூடியதேயாகும்.சில பொதுமைகளின் பின்னணியில் குறிப்பிட்ட ஒன்றைக் காண்பதற்கு இது உதவக் கூடியதாகும். புதிய வடிவங்களை, சோதனை முயற்சிகளை இது புறக்கணித்து விடுகிறது. இன்றைய தமிழிலும் இது இருக்கிறது. பழந்தமிழிலும் இது இருந்தது.
திறனாய்வு என்பது இலக்கியங்கள் புதிய பாதைகளில் பயணிக்க வழி மறுப்பது அல்ல; வழி வகுப்பது, வழி தருவது ஆகும்.