தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணுகுமுறை

    • 3.1 அணுகுமுறை

           ஒரு     குறிப்பிட்ட     இலக்கியத்தை அல்லது பல இலக்கியங்களைக் கண்டு நெருங்கி அது பற்றிச் சொல்வதற்கு ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. அதனையே நாம் அணுகுமுறை என்கிறோம்.

          அணுகு(ம்) + முறை = முறையாக நெருங்கும் முறை என்றும், அணுக்கம் என்பது நெருக்கம் என்றும் பொருள்படும். மேலும், அணுகுதல் என்பது நெருங்குதல் என்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லுதல் என்றும் பொருள்படும். மேலும் அணுகுமுறை என்பதற்கு இலக்கியத்தோடும் இலக்கியத்தை வாசிப்பதோடும், வாசிக்கின்ற வாசகனோடும் நெருங்கியிருப்பது என்றும் பொருள் கூறலாம்.

          எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் காண்பதற்கும்,     நன்கு     பேசுவதற்கும்,     காரியங்களை ஈடேற்றுவதற்கும்,     அவன் ஒரு சில     வழிமுறைகளைப் பின்பற்றுவான். அவ்வழிமுறையே அணுகுமுறை எனப்படும். மேலும் அணுகுமுறை என்பது கொள்கை அல்லது கோட்பாடுகளோடு இருப்பது ; உதாரணமாக மார்க்சியம் என்ற கொள்கையோடு கூடியது அல்லது அதன் வழிகாட்டுதலில் அமைவது மார்க்சிய அணுகுமுறை எனப்படும்.

      3.1.1 அணுகுமுறையின் இன்றியமையாமை

          ஓர் இலக்கியத்தைச் சுவைப்பது என்பது வேறு ; திறனாய்வு செய்வது என்பது வேறு. சுவைப்பதற்கு அணுகுமுறை தேவையில்லை. ஆனால் திறனாய்வதற்கு அணுகுமுறை என்பது இன்றிமையாததாகின்றது.

          திறனாய்வு ஒரு அறிவுத்தேடலாக அமைந்திருக்கின்றதென்றால் அதற்கு அடிப்படையாக     இருப்பது குறிப்பிட்ட ஒரு கொள்கையோடு     கூடிய அணுகுமுறையாகும். சரியான பாதையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் சரியான இலக்கை நோக்கிப் போக முடியாது. அதுபோலவே சரியான அணுகுமுறை அமைந்திருப்பது திறனாய்வு சிறப்பாக அமைவதற்கு அவசியமாகும். சில வேளைகளில் அணுகுமுறை தவறானதாக இருந்தால், தவறான கருத்தே முடிவாகக் கிடைக்கும்.

      • ஆய்வுக் கடலைக் கடக்கும் மரக்கலம்

          அணுகுமுறையின் இன்றியமையாமை என்பது இலக்கியத்தின் செய்ந்நேர்த்தியை, கலையழகை, அவ்விலக்கியத்தின் சிறப்பை என எல்லாவற்றையும்     அவ்விலக்கியத்தின் வழியே சென்று கண்டவறிவதாகும். அதுபோலவே இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் அதன் சமூகவியல், உளவியல், வரலாற்றியல் கூறுகளைச் சரியான வழிமுறை இல்லாமல் காண முடியாது. இவற்றைக் காண அணுகுமுறை இன்றியமையாதாகின்றது. மேலும், அணுகுமுறை என்பது திறனாய்வுக்கும், திறனாய்வாளனுக்கும் மட்டுமில்லாமல், இலக்கிய ஆராய்ச்சி செய்யும் எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கும்    இன்றியமையாததாகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆய்வு என்ற கடலினைக் கடக்க உதவும் மரக்கலம் போன்றது அணுகுமுறை எனலாம்.
       

      3.1.2 ஆய்வுப் பொருளும் அணுகுமுறையும்

          திறனாய்வு என்பது இலக்கியத்தின் மீது அமைவது. ஆனால் இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை மீதும் படைப்புத் திறன் மீதும் அமைவது. வாழ்க்கை என்பதோ விசாலமும், ஆழமும் கொண்டது. புதிர்களும் கொண்டது. அதுபோலவே இலக்கியமும். இலக்கியம் மேலும் கலையழகும் நுட்பமும் கொண்டது. இதில், திறனாய்வின்     பணி அந்நுட்பத்தையும் கலையழகையும் வெளிக்கொணர்வது ஆகும். இவ்வெளிக்கொணர்வுக்கு வழிகாட்டல் அணுகுமுறையாகும். குறிப்பிட்ட அணுகுமுறை குறிப்பிட்ட ஓர் இலக்கியத்திற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கலாம். அதேபோல இன்னோர் இலக்கியத்திற்குப் பொருந்தாமல் போய்விடலாம். ஏனெனில் ஆய்வுப் பொருள் ஒரு திறத்ததானது அல்ல; பல திறத்ததானது. இந்தத் திறனாய்வுப் பொருட்களைச் சரியான அணுகுமுறையின் மூலம் கண்டறிய வேண்டியிருக்கிறது. மேலும் அணுகுமுறை என்பது,
       

      (1)
      திறனாய்வாளனுடைய அறிவுப்பரப்பு, அவனுடைய பயிற்சி, அவனது அனுபவம், தேவை, நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது.
      (2)
      இலக்கியத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற அதன் பண்பு, போக்கு, அதன் அவசியம், அதன் கொள்கை முதலியவற்றையும் அடியொற்றி அமைகிறது.
       

          இத்தகைய அணுகுமுறையில் இவ்ஆய்வுக்கு எது மிகச் சரியாகப் பொருந்தும் என்ற கணிப்பு மிக அவசியம். உதாரணமாக, கற்புநிலை பற்றிப் பேசவந்த பொன்னகரம் என்னும் புதுமைப்பித்தனுடைய கதைக்கு ஏற்புடைய அணுகுமுறை, காதல் பற்றியும் அது சார்ந்த உளவியல் பற்றியும் பேசும். இது கு.ப.ராஜகோபாலனுடைய கதைகளுக்கு அப்படியே பொருந்துவதாக அமையாது.
       

      • ஒரு பொருள் குறித்த பல வகை அணுகுமுறைகள்

          மேலும் காதல் என்பது ஆய்வாளன் மேற்கொண்டுள்ள ஓர் ஆய்வுப்பொருள் என்று கொள்வோமேயானால், அதனை உளவியல் முறையிலும் அணுகலாம். சமுதாயவியல் அணுகுமுறையின் மூலமும் அதனுடைய பல்வேறு தளங்களை அறியலாம். வரலாற்றியல் அடிப்படையில் காதலின் பல பரிமாணங்களையும் அறிந்து கூறலாம். சங்க இலக்கியத்தில் காதல் பாடுபொருளாக இடம்பெற்றுள்ளதையும் இன்றைய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் காதல் இடம்பெறுவதையும் அதற்குரிய சூழலையும் ஆராயலாம். எவ்வாறாயினும், குறிப்பிட்ட ஆய்வுப் பொருளை, குறிப்பிட்ட நோக்கத்திலும் குறிப்பிட்ட கொள்கையாலும் கண்டு விளக்குவதற்கு அணுகுமுறை பயன்படுகிறது.
       

      3.1.3 இலக்கியமும் அணுகுமுறையும்

          ஓர் இலக்கியத்தைத் திறனாயும்போது, ஆய்வுப்பொருள் என்ன என்பதற்கு ஏற்ப அணுகுமுறை மாறும். காட்டாக, திருக்குறள் என்பது ஓர் இலக்கியம். ஆனால் அதனுள் நூற்றுக்கணக்கான ஆய்வுப்பொருள்கள் உண்டு. திருக்குறளைத் திறனாய்ந்த சான்றோர்கள் திருக்குறளில் ஆராய்ந்து கண்ட எண்ணிறந்த ஆய்வுப்பொருள்களுக்கும் அவற்றிற்குரிய அணுகுமுறை என்பது உண்டு. அதேபோல, அகம், புறம், அறம், பக்தி, காவியம், சிற்றிலக்கியம் என்ற ஒவ்வோர் இலக்கிய வகைக்கு ஏற்பவும் ஆய்வின் அணுகுமுறை மாறும். மேலும் தேவை, நோக்கம், கொள்கை முதலியவற்றிற்கு     ஏற்பவும் இது மாறும் தன்மையுடையது.

          இலக்கிய அணுகுமுறைக்குப் பின்புலமாக     உள்ள கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவை ஒன்றாக இருப்பினும் வழிமுறை, உத்திகள் முறையியலுக்கு உரிய     கருவிகள், கருதுகோள்கள், முடிபுகள் வேறுபாடாக இருக்கலாம். எனவேதான் கவிதைத் திறனாய்வு, நாவல் அல்லது சிறுகதைத் திறனாய்வு என்று வேறு வேறு முறைகளில் திறனாய்வு அமைந்துள்ளது.

          சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சரியான திறனாய்வுக்கு வழிவகுக்கிறது.     பொருத்தமான அணுகுமுறையிலிருந்துதான் திறனாய்வின் வெற்றி தொடங்குகிறது எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 11:46:54(இந்திய நேரம்)