Primary tabs
-
3.2 அணுகுமுறை வகைகள்
அணுகுமுறை என்பது இலக்கியம் பற்றிய மற்றும் சமூகம் பற்றிய பார்வைக் கோணத்தை அடித்தளமாகக் கொண்டதாகும். அந்த அடிப்படையில் அணுகுமுறைகள், பல வகைகளாக அமைந்திருக்கின்றன. மேலும் ஓர் இலக்கியத்திற்கே கூட அதன் தேவையையும் பண்பையும் ஒட்டி, ஒன்றிற்கும் மேற்பட்ட அணுகுமுறைகள் தேவைப்படக் கூடும் என்று வெயின் பூத் என்ற அறிஞர் கூறுகிறார். இக்கூற்றின் மூலம், அணுகுமுறைகள் பல வகைகளாக அமைந்திருக்கின்றன என்ற செய்தியை உணரமுடிகின்றது.
- பல்வேறு அணுகுமுறைகள்
வில்பர் ஸ்காட் (Wilbur scott) எனும் அறிஞர், திறனாய்வில் ஐந்து அணுகுமுறைகளை இனங்கண்டறிந்து சொல்கிறார். இலக்கியத் திறனாய்வின் ஐந்து அணுகுமுறைகள் (Five Approaches of literature.) என்பது அவரது புகழ்பெற்ற நூல். அதில் அவர் கூறும் ஐந்து அணுகுமுறைகள் பின்வருவன :
(1)அறிவியல் அணுகுமுறை ( அறிவியல் குறிக்கோள்களும் இலக்கியமும்)(2)உளவியல் அணுகுமுறை (உளவியல் கோட்பாட்டு் வெளிச்சத்தின் இலக்கியம்)(3)சமுதாயவியல் அணுகுமுறை ( சமுதாயக் குறிக்கோள்களும் இலக்கியமும்)(4)உருவவியல் அணுகுமுறை (அழகியல், அமைப்புப் பார்வையில் இலக்கியம்)(5)தொல்படிமவியல் அணுகுமுறை (தொன்மங்களின் ஒளியில் இலக்கியம்)இவ்வாறு வில்பர் ஸ்காட், ஐந்து அணுகுமுறைகளைப் பேசுகிறார். ஆனால் இவ்வைந்து முறைகள் மட்டுமே அணுகுமுறைகள் என்று சொல்லமுடியாது. இவற்றைத் தவிரவும் பல அணுகுமுறைகள் உண்டு. இலக்கியத்தின் தேவைக்கேற்ப இவை அமைகின்றன. அவை :
(1)வரலாற்றியல் அணுகுமுறை(2)இலக்கிய வகைமையியல் அணுகுமுறை(3)மானுடவியல் அணுகுமுறை(4)மார்க்சிய அணுகுமுறை(5)தத்துவவியல் அணுகுமுறை(6)அழகியல் அணுகுமுறை(7)மொழியியல் அணுகுமுறை(8)பகுப்பியல் அணுகுமுறை(9)ஒப்பியல் அணுகுமுறை(10)அமைப்பியல் அணுகுமுறை(11)பின்னை அமைப்பியல் அணுகுமுறை(12)பின்னை நவீனத்துவ அணுகுமுறை(13)தலித்திய அணுகுமுறை(14)பெண்ணிய அணுகுமுறைமேற்கூறிய வகைகள், அணுகுமுறைகளை விரிவாகப் பேசுபவை ஆகும். திறனாய்வின் தேவையையும் வளர்ந்து வருகின்ற காலத்தின் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு இவற்றில் சில குறையலாம்; கூடலாம்.திறனாய்வுக்கு அணுகுமுறை இன்றியமையாததென்றால், அந்த அணுகுமுறை பொருத்தமானதாக இருக்கவேண்டும். பொருத்தமாக அமையவில்லை என்றால் அது பிழைபட்ட முடிவுகளையே தரும். அவ்வாறானால் பொருத்தமான அணுகுமுறை எதனடிப்படையில் அமையும் என்பது குறித்துக் காண்போம்.
(1)இலக்கியத்தின் பொதுவான தன்மைகளும், இலக்கியம் எழுந்த சூழலமைவுகளும்(2)குறிப்பிட்ட இலக்கியத்தின் போக்கு அல்லது செல்நெறி(3)இலக்கியத்தின் பாடுபொருள்(4)இலக்கியத்தில் மையமாக இருக்கின்ற குறிப்பிட்ட கொள்கை அல்லது கோட்பாடு(5)இலக்கியத்தின் கலை மற்றும் உருவவியல் உத்திகள்இவற்றைத் தவிர, திறனாய்வு செய்கின்றவனுடைய சில பண்புகள் அல்லது திறன்கள் அவனுடைய அணுகுமுறைத் தேர்வுக்குப் பெரிதும் உதவுகின்றன. அவை :
(1)திறனாய்வாளனுடைய தேவையும், நோக்கமும்(2)திறனாய்வாளனுடைய தேர்ச்சியும், பயிற்சியும்(3)திறனாய்வாளன் அறிந்துள்ள இலக்கியக் கோட்பாடுகள்(4)திறனாய்வாளனுடைய உலகக் கண்ணோட்டம்என்பனவாகும்.- திறனாய்வாளனின் கண்கள்
மேலும் அணுகுமுறையின் தேர்வு மட்டுமில்லாமல், திறனாய்வுக்குரிய இலக்கியத் தேர்வும் இதனடிப்படையிலேயே அமைகிறது. பொருத்தமான இலக்கியம், பொருத்தமான அணுகுமுறை இவ்விரண்டும் திறனாய்வாளனுடைய இரண்டு கண்களாகும்.
- கைலாசபதியின் அணுகுமுறை
சான்றாக, கலாநிதி கைலாசபதி அவர்கள் சங்க இலக்கியத்தை ஆராய்வதற்கு அறிவியல் பூர்வமான சமுதாயவியல் அணுகுமுறையை மிகப் பொருத்தமான முறையில் தேர்ந்தெடுத்தார். இதன் காரணத்தினால், அன்றைத் தமிழர்தம் வாழ்க்கையை இதுவரை யாரும் சொல்லாத வகையில் புலப்படுத்தியிருக்கிறார். அதுபோல அவர் தமிழ் நாவல் இலக்கியத்தை அதன் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படும் வகையில் வரலாற்றியல் அணுகுமுறை மூலம் ஆராய்ந்திருக்கிறார் என்பதைச் சுட்டலாம்.
- அணுகுமுறையும் திறனாய்வும்
சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சரியான திறனாய்வுக்கு அடிகோலுகிறது. திறனாய்வின் வெற்றி, ஏற்கனவே நாம் சொன்னது போன்று பொருத்தமான அணுகுமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. அணுகுமுறைகள் பல திறத்தன என்று சொல்வோம். அவற்றை இனி, விரிவாகப் பார்க்கலாம். முதலில், அழகியல் அணுகுமுறை பற்றி இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.
-